இஸ்லாத்தின் பார்வையில் உருவம் வரைதல் ஆகுமானதா? - Jamaathul Muslimeen (Al-Jamath)

Jamaathul Muslimeen (Al-Jamath)

"ஜமாஅதுல் முஸ்லிமீனுடனும் அதன் தலைவருடனும் இணைந்திருப்பீராக" (புஹாரி,முஸ்லிம்)

Breaking

Friday, July 14, 2017

இஸ்லாத்தின் பார்வையில் உருவம் வரைதல் ஆகுமானதா?



இஸ்லாத்தின் பார்வையில்
உருவம் வரைதல் ஆகுமானதா?
- அபூ முஹம்மத் அல் முஹம்மதி -
- 0094 718 308 208 -


பெயர் மாற்றங்களுடன் இஸ்லாமிய வரம்புகள் மீறப்படும் என்பதற்கு ஒரு அடையாளத்தை ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள் முன்னறிவிப்புச்செய்துள்ளார்கள்.

ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) கூறுகின்றார்கள்:-
எனது உம்மத்தில் சில மனிதர்கள் மதுபானம் அருந்து வார்கள். (தவறை மறைக்க) அதன் பெயரல்லாததைக் கொண்டு அதற்குப் பெயர் சூட்டிக்கொள்வார்கள்.
(முஸ்னத் அஹ்மத் - ஸஹீஹ்)

எந்தவொரு அம்சத்தையும் நாம் அழ்ழாஹ்வின் வரம்புகளை மீறிவிடக்கூடாது எனும் நல்ல நோக்கத்துடனேயே ஒரு முஸ்லிம் அணுக வேண்டும். நாம் செய்கின்ற செயலை நிரூபித்துவிட வேண்டும் என்கின்ற தீய எண்ணம் எங்களிடம் இருக்குமானால் அத்தகைய தீயவர்களை அழ்ழாஹ் நேர்வழியில் செலுத்துவதில்லை என அவன் அவனது அல்குர்ஆனில் கூறுகின்றான்.

எமது சென்ற ஆய்வில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ ஹுத்பாவில் சூரா காப் ஓதுவது கட்டாயமா? எனும் தலைப்பில் நாம் எழுதியிருந்த ஆக்கத்தைப் படித்த ஒரு சிலர் புரட்சி எனும் சஞ்சிகையில் இஸ்லாத்தில் உருவப்படம் வரைவது கூடுமா? கூடாதா? எனும் தலைப்பில் வெளியான கட்டுரைபற்றிய தெளிவை எம்மிடம் வேண்டினர் எனவே நாம் எமது இந்த ஆய்வில் புரட்சி சஞ்சிகையில் வெளியான கட்டுரையை மையமாக வைத்து உருவப்படம் வரைதல் சம்பந்தமான இஸ்லாத்தின் தெளிவான சட்டத்தை ஆதாரங்களுடன் உங்களுக்குத் தருகின்றோம்.

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் எது உருவம் என்பதை அதனது சட்டத்தைக் கதைப்பதற்கு முன்னர் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த வரைவிலக்கணத்தை ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். 1 - உருவம் என்பது தலையாகும். எனவே (உடலைவிட்டும்) தலை துண்டிக்கப் பட்டுவிட்டால் (அது) உருவம் அல்ல.
(ஜா.ஸகீர்: முஃஜமுல் இஸ்மாஈலிய்யி - ஸஹீஹ்)

எனவே இஸ்லாமியக்கண்ணோட்டத்தில் உருவம் என்றால் தலையாகும். தலை இல்லாத உடம்பைத் தமிழிலே முண்டம் எனக் கூறுகின்றோம். அதேபான்று இஸ்லாமியக் கண்ணோட்டத்திலும் தலை இல்லாத உடலை உருவம் எனக்கூறப்படமாட்டாது. அதேநேரத்தில் உடம்பில் எந்தவொரு பகுதியும் இல்லாமல் தலை மட்டும் இருந்தால் அதனை இஸ்லாம் உருவம் என்பதாகவே கணிக்கின்றது என்பதனை இந்த ஹதீஸ் எமக்குக் கூறுகின்றது.

ஆகவே உருவம் என நாம் இங்கு எழுதும்போது அது தலையைக் குறிக்கக்கூடிய பிரயோகம் என்பதை வாசகர்களாகிய நீங்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

மனித செயல்களின் ஒரு பகுதி நாம் அன்றாடம் எமது உலகத் தேவைகளுக்காக செய்யக்கூடிய செயல்கள். இவற்றை அறபியிலே முஆமலாத் எனக்கூறப்படும். இவற்றின் இஸ்லாமியத் தீர்ப்பு இவை கூடாது என்பதற்குரிய ஆதாரங்கள் இல்லாதவரையில் இவற்றை நாம் செய்யலாம் என்பதாகும்.

உருவம் அமைத்தல் பற்றித் தெரிந்துகொள்வதற்கு இப்போது அவசியம் ஏற்பட்டுள்ளதால் அதனைத் தடைசெய்யும் அல்குர்ஆன் வசனம் அல்லது ஸஹீஹான ஹதீஸ் ஏதும் இருக்கின்றதா? என்பதை நாம் அலசிப் பார்ப்பது கடமையாகும்.

இதுபற்றி புரட்சி சஞ்சிகையிலுள்ள கட்டுரையின் ஆரம்பத்தில் நல்லதொரு அம்சம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அந்தக்கட்டுரையில் அதனை நிறைவேற்றாததனால் அவர்களது முடிவும் இஸ்லாத்திற்கு முரணாகவே அமைந்துவிட்டது.
கட்டுரையாளர் எழுதியிருப்பதாவது:-
ஆனாலும் ஒரு முஃமின் நபி (ஸல்) அவர்கள் ஒன்றுக்கொன்று முரணாக பேசமாட்டார்கள் என்று முழுமையாக நம்பியிருப்பான்.

இவ்விடயத்தில் சரியான தெளிவைப் பெறவேண்டுமென்றால் எல்லா ஹதீஸ்களின் கருத்துகளையும், ஒன்று சேர்த்து புரிய வேண்டும்.
(புரட்சி மார்ச் 2 0 0 9 பக்: 33)

கட்டுரையாளர் இங்கு கூறியிருப்பது மிகப்பெரியதொரு உண்மையாகும். இஸ்லாத்தின் எந்த அம்சத்தை அறிந்து கொள்வதானாலும் இந்த வழிமுறையைத்தான் நாம் கையாள வேண்டும். எமது சமூகத்தில் இந்த உண்மையைக் கடைபிடிக்காததன் காரணமாகத்தான் அகீதா சம்பந்தமான விடயங்களில்கூட தவறிழைத்துக்கொண்டிருக்கின்றார்கள். கட்டுரையாளர் இந்த உண்மையைச் சுட்டிக்காட்டிவிட்டு, அவரும் அதிலே மாற்றம் செய்திருப்பது ஆச்சரியப்படவைக்கின்றது. அதாவது சரியான தெளிவைப் பெறுவதற்கு எல்லா ஹதீஸ்களின் கருத்தையும் ஒன்றுசேர்த்துப் பார்க்க வேண்டும் என எழுதிய அந்தக் கட்டுரையாளர் உருவம் அமைத்தல் தொடர்பான எல்லா ஸஹீஹான ஹதீஸ் களையும் தமது கட்டுரையில் இடம்பெறச்செய்யவில்லை. இதனை நாம் முன்வைத்திருக்கக்கூடிய முதல் ஹதீஸிலிருந்தே நீங்கள் வியங்கிக்கொள்ளலாம்.

உருவம் சம்பந்தமான ஹதீஸ்களில் முக்கியமான இரண்டு சட்டங்கள் கூறப்பட்டுள்ளன. உருவம் சம்பந்தமான இஸ்லாத்தின் சட்டங்களைக் கூறமுற்பட்டவர்கள் அதுபற்றிய முக்கியமான இரண்டு சட்டங்களையும் வெவ்வேறாக விளங்கிக்கொள்ளாததும் அவர்கள் உருவம் சம்பந்தமான இஸ்லாமிய சட்டத்தைப் பிழையாக முன் வைப்பதற்கு ஒரு காரணமாகும். உருவம் அமைத்தல், உருவம் வீட்டினுள்ளே இருத்தல் ஆகிய இரண்டு செயல்கள் பற்றி இஸ்லாம் வெவ்வேறான சட்டங்களைக் கூறியுள்ளது.

முதலில் உருவம் அமைத்தலைக் கண்டிக்கக்கூடிய ஹதீஸ்களை உங்களுக்குத்தருகின்றோம். உருவம் வரைதல் எனும் வார்த்தையைத் தவிர்த்துவிட்டு, உருவம் அமைத்தல் என நாம் குறிப்பிடுவதற்குக் காரணம் வரைதல் எனக்குறிப்பிடும்போது மக்கள் கையால் வரைகின்ற உருவம் பற்றித்தான் ஹதீஸ்களில் எச்சரிக்கப் பட்டுள்ளது எனத் தவறாக விளங்கிக்கொள்வர். எனவே நாம் உருவம் அமைத்தல் எனும் வார்த்தையைப் பயன்படுத்துகின்றோம். வரைவதன்மூலம், புகைப்படக்கருவியின் மூலம், வீடியோ கருவி மூலம், உளிகளின் மூலம் என எந்தெந்த வழிகளிலெல்லாம் உருவம் உருவாக்கப்படுகின்றதோ அவை அனைத்தையும் குறிக்கக் கூடியதாகவே ஹதீஸ்களின் சொற்கள் அமைந்துள்ளன.

2 - ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) கூறுகின்றார்கள்.
இந்த உருவங்களை உருவாக்கக்கூடியோர். மறுமையில் தண்டிக்கப்படுவார்கள். 'நீங்கள் படைத்ததை உயிர்ப்பியுங்கள்" என அவர்களுக்குக் கூறப்படும்.
(ஸஹீஹுல் புஹாரி கி. லிபாஸ் 87)

3 - ஸஈத் பின் அபில் ஹஸன் (ரலியல்லாஹூ அன்ஹூ) கூறுகின்றார்கள்:-
இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து: "நான் இந்த உருவங்களை அமைக்கக்கூடியவன். அதிலே எனக்குத் தீர்ப்புக் கூறுவீராக!்" எனக் கேட்டார். அதற்கு "என்னிடம் நெருங்குவீராக!" எனக்கூறினார்கள். உடனே அவர்களுக்கு நெருக்கமாக வந்தார். பின்பும் "என்னிடம் நெருங்குவீராக!" எனக்கூறினார்கள். (அவர்) நெருங்கி வந்ததும் அவரது தலையிலே தங்களது கையை வைத்து "ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களிடமிருந்து செவிமடுத்ததை உமக்குக் கூறுகின்றேன். ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) கூறுகின்றார்கள்:- உருவம் அமைக்கக்கூடிய ஒவ்வொருவரும் நரகிலே இருப்பார். (அவர்) அமைத்த ஒவ்வொரு உருவத்திற்கும் பகரமாக ஒரு உயிர் ஏற்படுத்தப்படும். அவை அவனை நரகிலே நோவினை செய்து கொண்டிருக்கும்.|| (இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹூ அன்ஹூ) ) "கட்டாயம் நீர் செய்துதான் ஆகவேண்டும் என்றிருந்தால் மரத்தையும், உயிரற்றதையும் செய்வீராக!" எனவும் கூறினார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் கி. லிபாஸ் 26)

(குறிப்பு: இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹூ அன்ஹூ) விஞ்ஞானம் வளர்ச்சியடையாத காலத்தில் வாழ்ந்ததனால் உயிரற்றது எனக்கூறியுள்ளார்கள். மரங்களுக்கும் உயிருள்ளது என்பதால் தலை இல்லாததை வரைந்துகொள் என்பதாக இதனை விளங்கிக்கொள்ளவும்.)

4 - ஆயிஷh (ரலியல்லாஹூ அன்ஹா)கூறுகின்றார்கள்:-
(ஒருமுறை) ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) என்னிடத்தில் நுழைந்தார்கள். நானோ ஒரு திரைச்சீலையைக்கொண்டு (சுவரை) மறைத்திருந்தேன். அதிலே உருவம் இருந்தது. எனவே (ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) ) அவர்களது முகம் (கோபத்தால்) நிறம் மாறிவிட்டது. பின்னர் திரைச்சீலையை எடுத்து, அதனைக் கிழித்தார்கள். பின்பு (அவர்கள்) கூறியது:-

"நிச்சயமாக எவர்கள் அழ்ழாஹ்வின் படைப்பைப்போன்று உருவாக்குகின்றார்களோ அவர்கள் மறுமைநாளில் தண்டனையால் மனிதர்களில் மிகக்கடினமானவர்கள் ஆவார்கள்."
(ஸஹீஹ் முஸ்லிம் கி. லிபாஸ் 26)

5 - அபூ ஸுர்ஆ (ரலியல்லாஹூ அன்ஹூ) கூறுகின்றார்கள்:-
(ஒருமுறை) மர்வான் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களது வீட்டினுள் அபூஹுரைரா (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களுடன் நுழைந்தேன். அதிலே உருவங்கள் இருப்பதைக் கண்டார்கள். அப்போது (அவர்கள்) "ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள் கூற (நான்) கேட்டதாவது:-

கண்ணியமும் மகத்துவமும் கொண்ட அழ்ழாஹ் கூறுகின்றான். எனது படைப்பைப் போன்று ஒரு டைப்பைப் படைக்க முனைபவனை விட மிகப்பெரிய அநியாயக்காரன் யார்? (அவர்கள் முடிந்தால் ) ஒரு அணுவைப் படைக்கட்டும் அல்லது ஒரு தானியத்தைப் படைக்கட்டும், அல்லது ஒரு கோதுமை (மணி)யைப் படைக்கட்டும்.
(ஸஹீஹ் முஸ்லிம் கி. லிபாஸ் 26)
6 - இரத்தத்திற்கு பணம் பெறுவதனையும், நாய் (விற்கும்) பணத்தையும், விபச்சாரத்தின் உழைப்பையும் நிச்சயமாக ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) தடைசெய்தார்கள். மேலும் வட்டி சாப்பிடுபவனையும், அதனை சாப்பிடக் கொடுப்பவனையும், பிறரின் பற்களின் அமைப்பை மாற்றக்கூடியவளையும், தனக்கு அதனைச் செய்வித்துக் கொள்ளக்கூடியவளையும், உருவம் அமைக்கக்கூடியவனையும் (ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) ) சபித்தார்கள்.
(ஸஹீஹுல் புஹாரி கி. லிபாஸ் 94)

உருவம் அமைப்பதன் விபரீதம் பற்றிய ஹதீஸ்களை உங்கள் முன்னால் வைத்துள்ளோம். அவற்றைக் கொண்டு உருவம் அமைத்தல் என்பது எவ்வளவு பாரதூரமானது என்பதனை மிக இலகுவாக நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

இற்த ஹதீஸ்களின் மூலம் உருவம் அமைத்தல் சாபத்தைப் பெற்றுத்தரக்கூடிய, அழ்ழாஹ்வுடன் போட்டிபோடக்கூடிய ஒரு செயல் என்பது எமக்கு நேரடியாகக் கூறப்படுகின்றது. எனவே உருவம் அமைத்தல் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தில் வண்மையாகக் கண்டிக்கப்பட்ட ஒரு செயல் என ஒரு முஸ்லிம் துணிந்து கூறலாம்.

அப்படியானால் இன்று எமது சமூகத்தில் இஸ்லாம் பேசக்கூடிய அத்தனை அமைப்புகளும் உருவம் அமைக்கிறார்களே? எனும் கேள்வி உங்கள் உள்ளத்தில் தோன்றும். உங்களுக்கு ஏற்படக்கூடிய கேள்வி நியாயமானது. தூய இஸ்லாத்தை விளங்கிக்கொள்வதற்கு அழ்ழாஹ் இதனையும் சிந்திக்கின்ற மக்களுக்கு ஒரு சந்தர்ப்பமாக ஆக்கியுள்ளான்.

சுவனம் செல்லும் என ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களால் முன்னறிவிப்புச் செய்யப்பட்ட ஜமாஅதுல் முஸ்லிமீன் மட்டும் உருவம் அமைத்தல் பற்றிய இஸ்லாத்தின் எச்சரிக்கைகளைப் பயந்து அதனை நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி ஒருபோதும் செய்வதில்லை. அதிலே அழ்ழாஹ்வின் படைப்புக்கு ஓப்பாக்குதல் இருக்கின்றது. பிடவை, விரிப்பு, பொற்காசு, பணம், பாத்திரம், சுவர், போன்னவற்றில் அல்லது இவையல்லாத எந்தவொன்றில் இருந்தாலும் சரியே. மரம், ஒட்டகக் குடில், உருவம் இல்லாத ஏனைய படங்களை; ஹராமானதல்ல. இது உருவப்படம் அமைத்தல் சம்பந்தமான சட்டமாகும். உருவம் உள்ள ஓவியம் சுவரில் தொங்கவிடப்பட்டிருந்தால் அல்லது அணியப்பட்டுள்ள ஆடையாக இருந்தால் அல்லது தலைப்பாகையாக இருந்தால் இவைபோன்ற இழிவாகக் கருதப்படுபடாதவை ஹராமானதாகும். மிதிக்கக்கூடிய விரிப்பு, தலையணை போன்றவற்றில் இருந்தால் அது ஹறாமானது அல்ல. ஆனால் ரஹ்மத்துடைய மலக்குகள் அந்த வீட்டில் நுழைவதைத் துடுக்குமா? என்பதில் விளக்கம் இருக்கின்றது. அண்மையில் அழ்ழாஹ் நாடினால் அதனை விபரிப்போம். இவை அனைத்திலும் நிழல் உள்ள, இல்லாதவற் றிற்கிடையில் எந்த வித்தியாசமும் இல்லை. இந்த சட்டத்தில் இதுதான் எங்களது மத்ஹபின் சுருக்கமான முடிவாகும். இதேகருத்தில்தான் ஸஹாபாக்களிலும், தாபிஈன்களிலும், தபஉத்தாபியின்களிலும் பொதுவான அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.
(ஷரஹ் முஸ்லிம் கி.லிபாஸ்)

இங்கு இமாம் நவவியவர்கள் உருவப்படம் சம்பந்தமான இஸ்லாத்தின் சரியான சட்டத்தை மிக அழகாக எடுத்துக் கூறியுள்ளார்கள். பிழையான சட்டங்களில் மத்ஹபுகளைப் பின்பற்றுகின்றவர்கள் சரியான இந்த சட்டத்தைப் பின்பற்றாமல் இருக்கக் காரணம்தான் என்னவோ..............?

உருவம் அமைத்தல் கூடும் என்போர் அதற்காக அவர்கள் ஒவ்வொருவரும் முரண்பட்ட ஆதாரங்களை முன்வைக்கின்றனர். எனினும் அவற்றில் எந்தவொன்றும் அவர்கள் முன்வைக்கக்கூடிய வாதத்தை நிரூபிக்கக்கூடியதாக இல்லை. புரட்சி சஞ்சிகையில் இதுபற்றி எழுதிய கட்டுரையாளர் முன்வைக்கும் கருத்து பின்வருமாறு காணப்படுகின்றது:-
உருவப்படம் வரைவது சம்பந்தமாக ஏற்பட்ட அனைத்துகருத்து முரண்பாடுகளுக்கும் ஒட்டுமொத்தமான தீர்வு கீழ்வருகின்ற ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.

ஜிப்ரீல் (அலை) என்னிடம் வந்து சென்ற இரவு எங்கள் வீட்டிற்கு நான் வருவதற்கு தடையாக இருந்தவை என்னவென்றால் உங்கள் வீட்டில் ஒரு மனிதரது உருவச் சிலையும், உருவம் பொறித்த திரைச்சீலை ஒன்றும் நாய் ஒன்றும் இருந்தது தான் என்று என்னிடம் கூறினார்கள். உருவச் சிலையின் தலையை அகற்றுமாறும் உருவப்படங்கள் உள்ள திரைச்சீலையைக் கிழித்து மதிப்பில்லாமல் மிதிபடும் இரண்டு தலையணைகளாக ஆக்கிக்கொள்ளுமாறும் நாயை வெளியேற்றுமாறும் உங்கள் (குடும்பத்துக்கு) கட்டளையிடுங்கள் என்றும் என்னிடம் கூறினார்கள். என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா, ஆதாரம்: அஹ்தத் 7701, திர்மிதி 2730, அபூதாவூத் 3627

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்தபோது உருவப்படம் வரையப்பட்ட திரைச்சீலைகளைக் கண்டதும் அதை அகற்றினார்கள். நான் அதை இரண்டு தலையணைகளாக ஆக்கினேன். அதில் நபிகள் நாயகம் (ஸல்) உட்கார்ந்து கொள்வார்கள்.
அறிவிப்பவர்: ஆயிசா (ரலி) புஹாரி - 2479

தன்னிடம் இறக்கைகள் உடைய குதிரைகளின் படம் பொறிக்கப்பட்ட திரைச்சீலை இருந்ததாகவும்அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கிழித்ததும் அதில் இரண்டு தலையணைகள் செய்ததாகவும் அன்னை ஆயிசா (ரலி) அறிவிக்கிறார்கள்.
ஆதாரம்: முஸ்லிம் - 3935

இந்த ஹதீஸ்களை கவனமாக உற்றுநோக்குவோமாயின் மதிப்புமிக்கவையாக கருதப்படும் உருவப்படங்களே தடுக்கப்படுகின்றன என்பது புரியும்.
(புரட்சி மார்ச் 2009 பக்: 34, 35)
உருவப்படம் வரைதல், உருவங்களை வீடுகளில் வைத்தல் என்பதனைக் கட்டுரையாளர் பிரித்து விளங்காததன் காரணமாகவே "உருவப்படங்கள் வரைவது சம்பந்தமாக ஏற்பட்ட முரண்பர்டுகளுக்குத் தீர்வு" என எழுதிவிட்டு, அது சம்பந்தமான ஹதீஸ்களை முன் வைப்பதற்குப்பதிலாக உருவங்களை வசிப்பிடங்களில் வைத்தல் சம்பந்தமான ஹதீஸ்களை ஆதாரமாக முன்வைத்துள்ளார். கட்டுரையாளரே அந்த ஹதீஸ்களைக் கவணமாகப் பார்க்கவில்லை என்பதுதான் இதிலிருந்து தெளிவாகின்றது.

உருவப்படம் வரைவதற்கும், உருவங்களை வீட்டில் வைத்திருப்பதற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளாத கட்டுரையாளர் சத்தியத்தைச் சொல்வோரை நோக்கி பின்வருமாறு கேள்வி தொடுக்கின்றார்.

குதிரை உயிருள்ள மிருகம். உயிருள்ளவைகளை வரைவது இஸ்லாத்தில் கூடாது என்றால் குதிரை பொம்மையை வைத்திருப்பதும் கூடாது. ஏனென்றால் குதிரை பொம்மையை உருவாக்குவதற்கு முன்னால் வரைந்தாக வேண்டும். அதன்பின்தான் பொம்மையாக வடிவமைக்க முடியும். அப்படியிருக்க உயிருள்ள ஒரு குதிரையின் உருவச்சிலையை கண்ட பிறகும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைவாய்ப்பற்கள் தெரியும் அளவிற்கு சிரித்துள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் ஒரு பாவத்தை கண்டால் வண்மையாக கண்டிப்பார்கள். முகம் கோபத்தால் சிவந்துபோய்விடும். அப்படிப்பட்டவர் குதிரை பொம்மையை தனது வீட்டில் கண்டும் கூட மனைவியின் மீது கோபப்படவில்லை. தனது சிரிப்பின்மூலம் இச்செயலுக்கு அங்கீகாரம் அளித்துள்ளார்கள்.

அப்படியென்றால் உருவங்களை மதிப்பில்லாத வகையில் வரையலாம் என்ற கருத்தக்கு வர முடிகின்றது. விளையாட்டு பொம்மைக்கு மதிப்பில்லை என்றடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தொங்கவிடப்பட்ட திரைசீலையில் மதிப்பு வந்துவிடும் என்றடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ளது என்பதைப்புரியவாம்.
(புரட்சி மார்ச் 2009 பக்: 36)
கட்டுரையின் ஆரம்பத்திலே கட்டுரையாளர் பிறருக்கு செய்த உபதேசத்தை மறந்துவிட்டார், அல்லது புறக்கணித்து விட்டார். ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள் ஒன்றுக்கொன்று முரணாகப் பேச மாட்டார்கள் என முழுமையாக நம்பியிருப்பான் என்பதுடன் இந்த விடயத்தில் வரக்கூடிய அனைத்து ஹதீஸ்களையும் ஒன்று சேர்த்துப்பார்க்க வேண்டும் என்பதாக கட்டுரையாளர் எழுதியிருந்தார். அந்த உபதேசத்தின்படி அவர் நடந்துள்ளாரா என்பதை நீங்கள் அவரது "உருவங்களை மதிப்பில்லாமல் வரையலாம்." எனும் முடிவையும், உருவம் அமைப்பதினால் ஏற்படுத்துவதன் விபரீதங்கள் பற்றி நாம் வரிசையாக 2, 3, 4, 5, 6 என இலக்கங்களிட்டு உங்கள்முன் வைத்திருக்கும் ஹதீஸ்களையும் எடுத்துப்பார்த்தால் அறிந்து கொள்ளலாம். ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) உருவம் அமைத்தலை வண்மையாகக் கண்டித்ததை ஏற்றுக்கொள்ளும் கட்டுரையாளர் ஆதாரம் இல்லாமல் மதிப்பில்லாத உருவங்களை வரையலாம் என ஹதீஸ்கள் கூறுவதாக எழுதுவது ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களை முரண்பாடாகக் காணுவது இல்லையா............?

கட்டுரையாளர் தனது "மதிப்பில்லாத உருவங்களை வரைவதற்கு இஸ்லாத்திலே அனுமதி உள்ளது." எனும் சுயகருத்தை உண்மைப்படுத்தும் எந்தவொரு ஹதீஸையும் முன்வைக்கவில்லை. மாறாகக் கட்டுரையாளர் தர்க்க ரீதியாகத்தான் அதனை நிரூபிக்க முயல்கின்றார். வஹியின் மூலம் மிகமிக வண்மையாகத் தடை செய்யப்பட்ட ஒரு பாவத்தை தர்க்கத்தின் மூலம் ஆகுமாக்கிக் கொள்வது தெளிவான வழிகேடாகும்.

பொம்மையைச் செய்வதற்கு உருவம் வரைந்துதான் ஆகவேண்டும் என்பது அதுபற்றிய போதிய அறிவின்மையின் வெளிப்பாடாகும். அதற்கும் மேலாக உருவம் வரைதல், உருவ பொம்மைகளை உருவாக்குதல் இரண்டுமே இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் ஒரே மாதிரியான குற்றங்களாகும். அழ்ழாஹ்வின் சட்டங்களுக்கு அடிபணியாதவர்கள் உருவங்களை விளையாட்டுப் பொருட்களாக செய்துள்ளார்கள் என்றால் அவற்றை முஸ்லிம்கள் பயன்படுத்துவதில் எந்தத்தவறும் இல்லை என்பதனைத்தான் கட்டுரையாளர் சுட்டிக்காட்டும் ஹதீஸ் கூறுகின்றது.

விளையாட்டுப்பொருட்கள் வடிவில் எவராவது முஸ்லிம்கள் உருவம் அமைப்பதைப்பார்த்துவிட்டு ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள் சிரித்திருந்தால், அல்லது அதனை அங்கீகரித்திருந்தால் அது கட்டுரையாளரின் வாதத்திற்கு ஆதாரமாக அமையும். அப்படியான ஒரு ஹதீஸை கட்டுரையாளரினால் முன்வைக்கமுடியுமா.......?

மதிப்பில்லாத உருவங்களை வரையலாம் என்பது ஆதாரங்களற்ற சுயகருத்து என்பதனை நாம் உங்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளோம். இந்த உண்மைக்கு மாற்றமாக புரட்சி சஞ்சிகையில் முடிவு வெளியிட்டுள்ள கட்டுரையாளர் அதே கட்டுரையில் நாம் ஆதாரங்களுடன் கூறிய முடிவையும் அவரை அறியாமலே பின்வருமாறு எழுதியுள்ளார். இனி ஹதீஸ்களின் முடிவை ஒன்று சேர்த்து தெளிவான ஒரு முடிவை பெற்றுக்கொள்வோம்.

உருவம் வரைபவர்கள் மறுமைநாளில் கடுமையான வேதனைக்குரியவர்கள் என்ற ஹதீஸில் எத்தகைய உருவங்களை வரைபவர்கள் கடுமையான வேதனைக்குரியவர்கள் என்பது குறிப்பிடப்படவில்லை.

எத்தகைய உருவங்களை வரைபவர்கள் கடுமையான வேதனைக்குரியவர்கள் என்ற கேள்விக்குரிய பதில் ஓவியர்கள் அனைவரும் நரகில் என்ற ஹதீஸில் இறுதியில் இடம்பெற்றுள்ள ஒரு விதிவிலக்கில் இடம்பெற்றுள்ளது.

அதுதான் ஓவியர்கள் நரகில் இருப்பார்கள். எனவே உயிரற்றவைகளை வரைந்துகொள் என்று நபியவர்கள் அளித்த அனுமதி. இவ்வனுமதியிலிருந்து உயிரற்ற உருவங்களை வரைபவர்கள். மறுமைநாளில் கடுமையான வேதனைக்குரியவர்கள் அல்ல என்பதை விளங்கலாம்.
(புரட்சி மார்ச் 2009 பக்: 34)

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் சரியான இந்த முடிவை எழுதியதன் பின்னர்தான் புரட்சி சஞ்சிகையில் இதற்கு முரணான மேலேயுள்ள சுயகருத்தை மக்களுக்கு முடிவாகச் சொல்லப் பட்டுள்ளது. அக்கட்டுரையாளர் தனது கட்டுரையின் இறுதியில் வாசகர்களுக்குச் செய்துள்ள உபதேசத்தை அவருக்கு இந்த இடத்தில் நாம் அவருக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

எனவே உருவப்படம் சம்பந்தமாக சரியான தெளிவைப் பெற்றிருப்பீர்கள். அழ்ழாஹ்வை அஞ்சி, தூய்மையான எண்ணத்துடன் சிந்தித்து சரியான முடிவை எடுத்து செயற்படுங்கள். (புரட்சி மார்ச் 2009 பக்: 37)

கட்டுரையின் இறுதி முடிவுக்கு முரணாக இடையிலே இஸ்லாம் கூறும் உண்மையைத் தன்னை அறியாமலே கட்டுரையாளர் எழுதியிருந்தாலும் அவரினால் பெரியதொரு தவறு இந்த இடத்தில் இடம்பெற்றுள்ளது.

மூன்றாம் இலக்கமிட்டு முன்னால் நாம் சுட்டிக்காட்டிய (ஸஹீஹுல் புஹாரி 2225) ஹதீஸை முன்வைத்துத்தான் கட்டுரையாளர் 'நபியவர்கள் உயிரற்றவைகளை வரைந்துகொள்' என அனுமதியளித்ததாக எழுதியுள்ளார். ஆனால் ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவ்வாறு கூறவில்லை. கேள்வி கேட்கப்பட்ட இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள்தான் அவ்வாறு கூறினார்கள். இதனை வாசகர்கள் முக்கியமாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் தலைதான் உருவம் என்பதனால் கட்டுரையாளர் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களின் கூற்றை ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறியதாக எழுதியதில் தவறு விட்டிருந்தாலும், தலை இல்லாமல் உடம்பை மட்டுமோ அல்லது தலை இல்லாதவற்றையோ அமைப்பதில் தப்பில்லை என்கின்ற விடயம் சரியானதே! இந்த உண்மையைக் கட்டுரையின் இடையிலே அவராகவே எழுதிவிட்டு, அவரது கருத்துக்கும் இஸ்லாத்திற்கும் முரணான சுயகருத்தை வலியுறுத்திக் கட்டுரையைத் தவறான திசையிலே கொண்டுசென்று முடித்துள்ளார்.

கட்டுரையாளர் தனது தவறான கருத்தை மேலும் விளக்குவதற்காக பின்வருமாறு தொடர்கின்றார்:-

இதை இன்னும் விளக்குவதற்கு இன்னுமொரு சம்பவமும் உள்ளது. உருவப்படம் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தியை அபூதல்ஹா (ரலி) தன்னிடம் கூறியதாக ஸைத் பின் ஹாலித் என்பவர் எங்களிடம் அறிவித்தார். ஒருநான் ஸைத் பின் ஹாலித் நோயுற்றார். அவரை நோய் விசாரிக்க சென்றபோது அவரது வீட்டில் உருவப்படங்களுடன் திரைச்சீலை தொங்கவிடப்பட்டிருந்தது.

அதைக்கண்ட நான் இவர் உருவப்படங்கள் பற்றிய ஹதீஸை நமக்கு அறிவிக்கவில்லையா என்று உபைதுல்லா அல்கவ்லானி என்பவரிடம் கேட்டேன். அதற்கவர் சிறிய அளவிலான உருவத்தைத் தவிர என்று அவர் கூறியதை நீ கேட்கவில்லையா என்றார். நான் இல்லை என்றேன். அதற்கவர் இல்லை நிச்சயமாக அவர் அவ்வாறு கூறினார் என்றார்.
அறிவிப்பவர்: புஸ்ரு பின் ஸைத், ஆதாரம்: புஹாரி 3226

எனவே சிறிய உருவங்கள் பொறிக்கப்பட்ட திரைச் சீலைகளைப் பயன்படுத்தலாம் என்பதும் இத்தகைய சிறிய உருவமுள்ள திரைச்சீலைகளுக்கு மதிப்பு வராது என்றடிப்படையிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதைப் புரியலாம்.
(புரட்சி மார்ச் 2009 பக்: 36, 37)

கட்டுரையாளர் மதிப்பில்லாத வகையில் உருவம் வரையலாம் என்ற தனது சுயகருத்தை நிரூபிப்பதற்கு மீண்டும் உருவம் வைப்பது பற்றிக் கூறக்கூடிய ஹதீஸைத்தான் ஆதாரமாகக் கொண்டுவந்துள்ளார். உருவம் உள்ள வீட்டுக்குள் வானவர்கள் நுழைய மாட்டார்கள் எனக்கூறிய ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள் திரைகளில் உள்ள கோடுகள், பூக்கள் போன்றவை வானவர்களின் வருகையைத் தடுக்காது எனத் தெளிவு படுத்தினார்கள். உருவம் வரைவதைப் பற்றி இங்கு ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) கதைக்கவே இல்லை. இந்த ஹதீஸிலே பயன்படுத்தப்பட்டுள்ள 'தஸாவீர்'எனும் வார்த்தை அனைத்து உருவங்களையும் குறிக்கக்கூடியதாகும். அதாவது மனிதன், மரம், வீடு, மாடு, அலங்காரம் போன்ற எதுவாக இருந்தாலும் அது உருவாக்கப்படுமானால் அவற்றை அறபு மொழியில் 'தஸாவீர்' எனக்கூறப்படும். இதனைத் தமிழில் ஒரே வார்த்தையில் ஓவியங்கள் என நாம் கூறலாம். மொழிரீதியான இந்தப்பொருளில் பார்க்கும்போது கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ள சம்பவத்தில் நடந்தது போன்று திரைச்சீலைகளில் உள்ள அலங்காரங்களும் தடுக்கப்பட்டவற்றைச் சேர்ந்ததுதானே எனத்தவறாக விளங்கிவிடுவர். எனவேதான் அவ்வாறு விளங்கியவருக்கு பிடவைகளில் உள்ள அலங்காரங்களைத் தவிர என ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) கூறிய ஹதீஸின் இறுதிப் பகுதியைக் கூறி தெளிவுபடுத்தினார்கள்.

இந்த ஹதீஸிலும்கூட கட்டுரையாளரது சுயகருத்துக்கு ஆதாரம் கிடையாது. எனவே அவரது வாதத்தை உண்மைப் படுத்தக்கூடியதாக ஹதீஸில் வரக்கூடிய சொல் மாற்றி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

"ரக்முன்"எனும் அறபு சொல்லைத்தான் சிறிய அளவிலான உருவம் என தமிழில் எழுதப்பட்டுள்ளது. ரக்முன் எனும் அறபுச் சொல்லுக்கு சிறிய உருவம் எனும் பொருள் அறவே கிடையாது. இந்த உண்மையை வாசகர்கள் விளங்கிக்கொள்வதற்காக இரண்டு அறபு அகராதிகளில் "ரக்முன்" எனும் சொல்லுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொருளை இங்கு குறிப்பிடுகின்றோம்.

ரக்முன் என்பது அலங்காரத்தில் நின்றுமுள்ள கோடுகள்
(லிஸானுல் அறப்)

ஆடையின் ரக்ம் (என்பது) அதனது எழுத்து
(முஹ்தாருஸ் ஸிஹாஹ்)
எந்த அகராதியிலும் இல்லாத, ஹதீஸிற்கு முரணாக 'சிறிய அளவிலான உருவம்' என தழிழாக்கம் செய்ததன் பின்னனி பற்றி அழ்ழாஹ்வே நன்கு அறிந்தவன். பின்னனி என்னவாக இருந்தாலும் கட்டுரையாளர் அவ்வாறு தமிழாக்கம் செய்ததற்கான ஆதாரத்தை முன்வைக்காத வரையில் இவ்வாறு தனது தேவைக்கு ஏற்ப ஹதீஸ்களை தழிழாக்கம் செய்வது எவ்வளவு பாரதூரமானது என்பதை வாசகர்கள் அறிந்தேயிருப்பீர்கள்.

ஆடைகளில் உள்ள தலையுள்ள உருவங்களுக்கு ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) விதிவிலக்கு அளித்தார்கள் என கட்டுரையாளர் தவறாக விளங்கியுள்ளார், ஓவியம் வீட்டில் இருப்பது மலக்குமார்களின் வருகையைத் தடைசெய்யாது எனக்கூறப்பட்டதை ஓவியம் வரையலாம் என்பதற்கு ஆதாரமாக முன்வைத்துள்ளார், ரக்முன் எனும் அறபுச் சொல்லுக்கு அகராதியில் இல்லாத சிறிய உருவம் எனப்பொருள் கொடுத்துள்ளார் என்கின்ற மூன்று அடிப்படைத் தவறுகளின் காரணமாக 'மதிப்பில்லாத வகையில் உருவங்களை வரையலாம்.' எனும் அவரது சுயகருத்து அர்த்தமற்றுவிடுகின்றது.

கட்டுரையாளர் சிறிய அளவிலான உருவத்தைத்தவிர என தமிழாக்கம் செய்துள்ளதில் காணப்படும் மற்றொரு தவறு ஹதீஸில் உள்ள 'ஸவ்ப்'எனும் வார்த்தையை விட்டுவிட்டதாகும். புஸ்ர் பின் ஸஈத் செவிமடுக்கவில்லை எனக்கூறுகின்ற வாசகம் ஸஹீஹுல் புஹாரியிலே (3226) 'இல்லா ரக்முன் பீ ஸவ்பின்' எனக் காணப்படுகின்றது. 'பிடவையில் காணப்படக்கூடிய அலங்காரக் கோடுகளைத் தவிர' என்பதுதான் அந்த வாசகத்தின் சரியான பொருளாகும்.

இந்த வாசகத்தை மேற்படி கட்டுரையாளர் மட்டுமல்ல. உருவம் அமைத்தல் கூடும் எனக்கூறக்கூடிய பெரும்பெரும் அறிஞர்கள்கூட தங்களது சுயகருத்துக்கு பலமான ஆதாரம் என நினைத்து இந்த வாசகத்தைத்தான் முன்வைக்கின்றனர். எனினும் அவர்கள் எவரும் சிறிய உருவம் எனப் பொருள் கூறவில்லை.
ஒரு சில ஹதீஸ்களில் திம்ஸால் எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதால் அது நிழலுடைய சிலையை மட்டும்தான் குறிக்கும். ஆகவே சிலைவடிப்பது மட்டும்தான் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டது என்பது அவர்களில் ஒருசிலரது வாதமாகும். திம்ஸால் எனும் வார்த்தை சிலைகளைக் குறிப்பது போன்று திரைச்சீலைகளில் உள்ள தலையுள்ள உருவங்களைக் குறிப்பதற்காகவும் ஸஹீஹான ஹதீஸ்களில் பயன் படுத்தப்பட்டுள்ளதால் அந்த வாதமும் அடிபட்டுப்போகின்றது.

புகைப்படக் கருவி கண்ணாடியைப்போன்றதே என ஆதாரம் இல்லாமல் சுயகருத்தொன்றை நவீன அறிஞர்(?) ஒருவர் தனது செயலுக்கு இஸ்லாத்தில் அங்கீகாரம் பெற முயன்றுள்ளார். தனது முன்னால் உள்ளதைக் காட்டும் முகம் பார்க்கும் கண்ணாடிக்கும், தலையுள்ள உருவத்தின் உயிரில்லாத வேறு ஒரு படத்தை உருவாக்குவதற்கும் வித்தியாசம் விளங்காத அவரது கூற்றில் எவ்வித உண்மையும் இல்லை.

ஆகவே உருவம் அமைப்பது பற்றி இஸ்லாம் கண்டித்த ஹதீஸ்களுடன் முரண்படக்கூடிய எந்தவொரு ஹதீஸும் கிடையாது. நேர்வழியில் இல்லாதவர்கள் தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் செய்வதை நிரூபிப்தற்காக ஹதீஸ்களில் முரண்பாடு உள்ளது போன்று காண்பிக்கின்றார்கள். சாதாரண மனிதர்களாகிய தங்களது தவறுகளை மறைப்பதிட, மனிதப்புனிதரான ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) முரண்பாடானவற்றைக் கூறியதாக அபாண்டம் சுமத்துகின்றோமே என்றுகூட இவர்கள் சிந்திப்பதில்லை. இத்தகைய பிரிவுகளை விட்டும் அழ்ழாஹ் ஒவ்வொருவரையும் பாதுகாக்க வேண்டும். பிறருக்கு அழ்ழாஹ்வை அஞ்சி, தூய்மையுடன் முடிவெடுக்குமாறு எழுதியுள்ள கட்டுரையாளர் அதேவழியைக் கையாண்டு தனது தவறை திருத்திக்கொண்டு சத்தியத்தைப் பின்பற்றக்கூடியவராக மாற வேண்டும் என்பதே அவரிடமிருந்து எமது எதிர்பார்ப்பாகும். அவரது தவறான கட்டுரையினால் மக்கள் தவறான முடிவுகளுக்கு செல்வதனை அழ்ழாஹ் எம்மைக் கொண்டு தடுத்திடுவானாக!

-------------------------
மாறாக சத்தியத்தைக் கொண்டு அசத்தியத்தின்மீது எறிகின்றோம். அது (அசத்தியமாகிய) அதன் தலையைப் பிளந்துவிடுகின்றது. எனவே அது அழிந்தும் விடுகின்றது.........
( 21 : 18 )




இன்ஷா அல்லாஹ் இந்தப்பகுதியில் தூய இஸ்லாத்திற்கு முரணாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் ஆதாரங்களுடன் அலசப்பட்டு, வஹியின் ஒளியில் நேர்வழி தெளிவுபடுத்தப்படும். வாசகர்களும் தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய இஸ்லாம் பற்றிய ஆக்கங்களை எந்தப் பிரிவினர் வெளியிட்டாலும் அவற்றை எமக்கு அனுப்பிவைப்பதன் மூலம் அது பற்றிய தெளிவான இஸ்லாமிய கண்னோட்டத்தை விளங்கிக்கொள்ள முடியும். அதேபோல் ஜமாஅதுல் முஸ்லிமீன் முன்வைக்கக்கூடிய முடிவுகளைத் தவறாகக் காணக்கூடிய அறிஞர்களும் அதுபற்றிய தங்கள் கருத்துக்களை ஆதாரங்களுடன் எமக்கு எழுதினால் அவையும் இங்கு அலசப்படும்.
-------------------------

No comments:

Post a Comment