பிரிவுகள் இஸ்லாமல்ல!! பகுதி-01 - Jamaathul Muslimeen (Al-Jamath)

Jamaathul Muslimeen (Al-Jamath)

"ஜமாஅதுல் முஸ்லிமீனுடனும் அதன் தலைவருடனும் இணைந்திருப்பீராக" (புஹாரி,முஸ்லிம்)

Breaking

Thursday, July 13, 2017

பிரிவுகள் இஸ்லாமல்ல!! பகுதி-01

 



('உண்மை உதயம் 1996- ஜூன-மார்ச் இதழின் கட்டுரைக்கு மறுப்பு ஜமாஅதுல் முஸ்லிமீனின் வெளியீடாகிய அத்தீனுல்-இஸ்லாம் எனும் சஞ்சிகையில் 1998 ஜனவரி-பெப்ரவரி பதிப்பில் வெளியிடப்பட்டது)

சத்திய வழியாகிய இஸ'லாத்தின் அடிப்படைகளில் 'முஸ்லிம் சமுதாயம் என்பது ஒரே சமுதாயமாகும்' என்பதும் ஒன்றாகும்.

'நிச்சயமாக உங்களது இந்த சமுதாயம் ஒரே சமுதாயமாகும். நூன் உங்களுடைய (ஒரே) 'ரப்'புமாவேன். எனவே என்னையே (நீங்கள்) அஞ்சுங்கள். (23:52)

இஸ்லாத்தை மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்யும் போது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றான இவ்வம்சமும் எடுத்துக்கூறப்படும் என்பது தெளிவானதே. மறைந்து கிடந்த சத்தியத்தை மக்களுக்கு சொல் வடிவிலும், செயல் வடிவிலும் கொண்டுவரப்படுகின்ற போது, சத்தியத்தின் இடத்தை அசத்தியங்கள் சத்தியங்களாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு ஆக்கிரமித்துரப்பதைக் காணுகின்றோம்.

இஸ்லாத்தை பின்பற்றக்கூடியோர் ஒரே சமுதாயம் என்பதை கட்டிக்காக்க, இஸ்லாம் பல சட்டதிட்டங்களை அமைத்துள்ளது. மூன்று முஸ்லிம்கள் சோர்ந்துவிட்டால் தலைமைத்துவம் அவசியமாகின்றது, தலைமைத்துவத்திற்கு கட்டுப்படுவது அவசியமாகின்றது தலைமைத்துவத்திற்கும் ஒற்றுமைக்கும் முரணான ஒவ்வொரு அம்சமும் தவிர்க்கப்பட வேண்டியதும் அவசியமாகிவிடுகின்றது.... இப்படி அதுபற்றிய சட்டதிட்டங்களை எழுதிக் கொண்டே போகலாம். இந்த அடிப்படையை பாதுகாக்கக் கூடியதாகத்தான் பொதுவானதோர் சட்டத்தொகுப்பு தரப்பட்டு, அதனைப் பின்பற்றுவோருக்கு ஒரே பெயராக 'முஸ்லிம்' எனும் கொள்கைப் பெயரையும் அல்லாஹ்வால் சூட்டப்பட்டிருக்கின்றது. சாதரணமாக பார்க்கும் போது சிலருக்கு இக்கொள்கைப் பெயர் முக்கியமானதல்ல எனத்தோன்றினாலும் கூட சர்வஞானம் படைத்தவனால் கொள்கைப்பெயர் இக்காலத்திற்கு மட்டுமல்ல, எக்காலத்திற்கும் அவசியம் எனக் கருதி இஸ்லாம் எனும் இக்கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் எக்காலத்தில் வாழ்ந்தாலும் சரி; அவர்களுக்கு 'முஸ்லிம்' எனும் பெயரை முத்திரையாகப் பதிக்கின்றான்.

'அவன்(தான்) உங்களுக்கு 'முஸ்லிம்கள்' என முன்னரும் (இறக்கப்பட்ட வேதங்களிலும்) இதிலும் (அல்-குர்ஆனிலும் அல் ஹதீஸிலும்) பெயர் சூட்டியுள்ளான்.' (22:78)

எனவே சத்தியத்தை போதிக்கும் முஸ்லிம்களும் 'முஸ்லிம்கள'; எனும் அல்லாஹ்வால் சூட்டப்பட்ட பெயரை வலியுறுத்துவதோடு, இணைவைப்போரின் செயலும், அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாகக்கூடிய செயலுமாகிய பிரிவினைக்கு இட்டுச்செல்லக் கூடிய பிரிவுப் பெயர்கள் அனைத்தையும் விட்டொதுங்குமாறு மக்களை எச்சரித்துக்கொண்டிருக்கின்றது.

பிரிவுப்பெயர்கள் ஏற்படுத்தியிருக்கும் தீய விளைவுகளில் சிலதை சுவைத்தும் கூட, பிரிவுப் பெயர்களின் தீங்குகளை உணராதவர்களாக இருப்பதுடன், தாங்கள் இருக்கும் நிலைக்கு இஸ்லாத்தில் இருந்து ஆதாரம் தேட முனைவது அவர்களது மிகப்பெரிய ஜாஹிலிய்ய நடவடிக்கையாகும்.

இன்று முஸ்லிம்கள் எனக்கூறிக்கொள்வோருக்கு மத்தியில் பல்வேறு பெயர்களில், பல்வேறு கூட்டங்கள் காணப்படுகின்றன. ஓவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு தலைவர், முரண்பட்ட தனித்தனி 'அகீதா', இபாதத்களில் தனித்தனி செயல்முறைகள் காணப்படுகின்றன. பிரிவுகளிலே ஒன்றை மற்றொன்று இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள் எனும் தீர்ப்புகளை பரிமாறிக் கொள்கின்றன.

இச்சூழலில் தோனறுகின்ற சத்தியம் இவர்களுடைய இந்த இழிநிலைக்கான பல காரணங்களில் ஒன்றான அல்லாஹ்வால் சூட்டப்பட்ட பெயரை இவர்கள் மாற்றிக்கொண்டதும் ஒன்று என்பதை தெளிவுபடுத்துகின்றன. இதனை புரிந்து கொள்ளாத, அல்லது புரிந்தும் அடம்பிடிக்கும் சிலர் எதையெதையோ கூறி, சம்பந்தமில்லாத ஏதோ ஒன்றுக்கு ஆதாரம் தேட முயல்கின்றனர். இத்தகையோரைச் சேர்ந்த ஒருவர் தான் 'இயக்கப் பெயரில் செயல்படலாமா?' எனும் தலைப்பில் தற்காலத்தில் இஸ்லாத்தின் பெயரால் தோன்றியிருக்கும் அனேகமான பிரிவுகளை சரியென தனது மனோயிச்சைப்படி தீர்ப்பு வழங்கியுள்ளார். தனது வாதத்திற்கு அவர் எடுத்துவைக்கும் ஆதாரங்கள் அவருக்கு எதிராகவே அமைந்துள்ளன. இப்போது நாம் அக்கட்டுரை இஸ்லாத்தின் பார்வையில் எந்தளவு ஏற்கப்படக் கூடியது என்பதைப் பார்ப்போம்.

முதலாவதாக கட்டுரையாளர் தனது கட்டுரையின் ஆரம்பப் பகுதியில்:
'அல்லாஹ்வால் தான் அருளிய அனைத்து மார்க்கங்களுக்கும் இஸ்லாம் என்றே பெயரிட்டான். அதைப் பின்பற்றியவர்கள் யஹூதி, நஸாராக்கள் உட்பட அனைவருக்கும் அவன் இட்ட பெயர் முஸ்லிம் என்பதேயாகும். இதனை ஏராளமாக அல்-குர்ஆன் ஆயத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.
(பார்க்க : 2:131, 27:44, 5:44, 2:232, 22:78)

இறுதி நபியின் உம்மத்திற்கும் முஸ்லிம் என்றே பெயர் சூட்டப்பட்டது.


இதை ஏற்றுக்கொண்ட அனைவரும் முஸ்லிம்கள் ஆவர். இதுவே அவர்களது மார்க்க ரீதியான பொதுப்பெயராகும். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒன்றுபட்டிருந்த உம்மத்திற்கு இதை தவிர வேறு பொதுப்பெயர் இருக்க வில்லை. இருப்பினும் முஸ்லிம்கள் மத்தியில் சில அடையாளப் பெயர்கள் இருந்திருப்பதைக் காணலாம்.'

'அதே வேளை இப்பெயர்கள் வெறும் அடையாளப் பெயர்களாக இருந்தனவேயன்றி வேறுபாட்டிற்கும், பிரிவினைக்கும் களம் அமைக்கும் தீய நிலை இருக்கவில்லை என்பதையெல்லாம் நாம் மனதில் ஆழப்படுத்திக் கொள்ள வேண்டும்.'

இவ்வாறு கூறியதன் பிறகு 'முஸ்லிம்' எனும் பொதுப் பெயரில் காணப்பட்டோரில் இஸ்லாத்தின் அடிப்படையை தகர்ப்போர் உருவாகினர். சத்தியவாதிகள் இவர்களை அடையாளம் காட்டுவதற்கு ஷீயா, ஹவாரிஜ், முஃதஸிலா போன்ற பெயர்களை சூட்டினர்' என விவரித்து எழுதுகிறார். அதன் பின்னர் சத்தியவாதிகளுக்கும் புதுப்புது பெயர்களைச் சூடும் நிர்பந்தம் ஏற்பட்டது எனக்கூறி தொடர்கிறார் :-

''ஷியா' 'ஹவாரிஜ்' போன்ற 'பித்அத்'வாதிகள், பல ஸஹாபாக்களை காபிர்கள் எனக்கூறியதாலும், அவர்களால் அறிவிக்கப்பட்ட ஹதீஸ்களை நம்ப மறுத்ததாலும், சத்தியவான்களுக்கு நாம் ஸஹாபாக்கள் அனைவரையும் ஏற்றுக்கொண்ட கூட்டத்தினர் என தம்மை அடையாளம் காட்டும் நிர்பந்தம நிலை ஏற்பட்டது.'
இப்படி விபரித்துக் கூறிவிட்டு, இவ்வாறு தமக்கு விருப்பமான ரீதியில் பெயர் சூட்டிக்கொள்வதில் தவறு இல்லை என்பதைக் காட்டக் கூடிய ஆதாரங்கள் எனக்கூறி 4:115, 9:100 ஆகிய இரு குர்ஆன் வசனங்களுடன், நபித்தோழர்களது சிறப்புக்களைக்கூறும் சில ஹதீஸ்களை குறிப்பிட்டுள்ளார். அதிலொரு ஙதீஸை இங்கு தருகின்றோம்.:-

'நுற்றாண்டில் சிறந்தது எனது நூற்றாண்டாகும். அதன் பின் அவர்களைத் தொடர்ந்தோர், அதன்பின் அவர்களைத் தொடர்ந்தோர். அதன் பின் பொய் பரவி விடும். (திர்மிதி-2320, முஸ்லிம்)

இவ்வளவையும் குறிப்பிட்டுவிட்டு, அதன்பிறகு இறுதித் தூதரால் நரகின் பால் அழைக்கக்கூடிய பிரிவுகள் என தீர்ப்பளிக்கப்பட்ட பிரிவுகளுள்ளவர்கள் மனத்தூய்மையுடன் செயற்பட்டால் அவர்களுடைய இபாதத்கள் எதுவும் வீண்போகாது என தீர்ப்புக் கூறுகின்றார் அவரது தீர்பைப் படியுங்கள் :-

'தப்லீக், தௌஹீத், ஜமாஅதேஇஸ்லாமி போன்ற பெயர்களில் இயங்கும் ஒருவர் இஹ்லாஸான எண்ணத்துடன் செய்யும் இஸ்லாமிய இபாதத்துக்கள் எதுவும் வீண் போகாது. நற்செயலுக்குரிய கூலி நிச்சயம் வழங்கப்படவே செய்யும் அதற்கான சான்று இதோ!'
ஆதாரங்கள் அடிப்படையில் கட்டுரையாளர் எப்படிப்பட்ட பகிரங்கமான வழிகேட்டிலே இருக்கின்றார் என்பதை நிரூபிப்பதற்கு முன்னர் கட்டுரையாளர் தனக்கே முரண்படும் சில விடயங்களை சத்தியத்தை தோடுவோர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இங்கு கட்டுரையாளரிடம் கேள்வியாக முன்வைக்கிறோம்.

1.நற்கருமங்களில் நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கு ஆதாரமாக (9:100) எனும் அல்-குர்ஆனிய வசனத்தை குறிப்பிட்ட நீங்கள், நபித்தோழர்கள் ஒரே அமைப்பாக இருந்தார்கள் என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளீர்கள். கேள்வி என்னவென்றால் ஒரே அமைப்பாக இருத்தல் எனும் விடயத்தில் நபித்தோழர்களைப் பின்பற்றாதது ஏன்? ஒரே கூட்டமாக இருத்தல் என்பது பாவமாக செயல் என்பது உங்கள் முடிவா? என்பதை அறிய ஆவல்.

2. தப்லீக், தௌஹீத், ஜமாஅதேஇஸ்லாமி போன்ற பெயர்களைக் குறிப்பிட்டு, இவற்றில் தூய்மையுடன் செயல்பட்டால் நற்செயல்கள் வீணாகாது எனக் கூறியுள்ளீர்கள். அதே நேரத்தில் இதற்கு முன்னாலுள்ள பகுதியில் தங்களை இணங்காட்டவே வேறுசில பெயர்களை கூற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள மூன்று பிரிவுகளும் மூன்று பெயர்களை சூடிக்கொண்டு, மூன்று தலைமைத்துவங்களைக் கொண்டு, ஏன் மூன்று விதமான அகீதாவைக்கொண்டு செயல்படுவது; எந்தப் பிரிவிலிருந்து எந்தப் பிரிவு தன்னை சத்தியம் என இணங்காட்ட முயல்கின்றது என்பதை அறியத் தருவீர்களா? மூன்றுமே சத்தியவான்களானால் அடையாளம் எதற்கு?. மூன்று பிரிவுகளாகச் செயல்படுவது, தாங்கள் கூறியுள்ள மற்றொரு காரணமாகிய நாட்டு நிர்வாகத்தின் எடுபிடிகளினடிப்படையில் அமைந்தது என்றிருக்குமானால் மூன்று பிரிவுகளுக்கு மத்தியில் அகீதாவிலும், வணக்க வழிபாடுகளிலும், தீர்ப்புக்களிலும் முரண்பாடு காணப்படுவதற்கான காரணம் என்ன? மூன்று பிரிவுகளும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் செயல்படுவதை தடை செய்யும் நாட்டு சட்டங்களும் தான் என்ன?

3. உங்களது கட்டுரையிலிருந்து நாம் எடுத்தெழுதியுள்ள இரண்டாம் பகுதியில் அடையாளப் பெயர்கள்: வேறுபாட்டிற்கும் பிரிவினைக்கும் களம் அமைக்கும் தீய நிலையிலிருக்கவில்லை என்பதை மனதில் ஆழப்பதித்துக்கொள்ளபடி உபதேசித்த நீங்கள் அடையாளப் பெயர்கள் எனக்கூறி பிரிவுகளையே உண்டுபண்ணி மக்களை நரகில் தள்ளிக் கொண்டிருப்பது உங்கள் உபதேசத்திற்கு முரண்படுகிறதே!

இன்ஷா அல்லாஹ் வெகுவிரைவில்......
(அடுத்த பகுதியில் பிரிவுகள் இஸ்லாமல்ல என்பதை ஆதாரபூர்வமாக தெளிவுபடுத்தப்படும்)



பிரிவுகள் இஸ்லாமல்ல!! பகுதி-02

No comments:

Post a Comment