அண்ணலாரின் கூற்றுக்கள் அல்குர்ஆனுக்கு முரண்படுமா? - Jamaathul Muslimeen (Al-Jamath)

Jamaathul Muslimeen (Al-Jamath)

"ஜமாஅதுல் முஸ்லிமீனுடனும் அதன் தலைவருடனும் இணைந்திருப்பீராக" (புஹாரி,முஸ்லிம்)

Breaking

Thursday, July 13, 2017

அண்ணலாரின் கூற்றுக்கள் அல்குர்ஆனுக்கு முரண்படுமா?



('ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?' என்ற TNTJ அப்பாஸ் அலியின் புத்தகத்திற்கு ஆதாரபூர்வமான மறுப்பு )

நுழைவதற்கு முன்.....

அல்லாஹ்வினால் வழங்கப்பட்டுள்ள ஒரே வாழ்க்கைத் திட்டம் இஸ்லாமாகும். அது அல்குர்ஆன், ஸஹீஹான ஹதீஸ் எனும் வடிவில் காணப்படுகின்றது. அந்த இரண்டில் இல்லாதது ஒருபோதும்இஸ்லாமாக முடியாது. அதேபோன்று அந்த இரண்டில் ஏதாவது ஒன்றின் மூலம் நிரூபணமானதை எந்தக் காரணத்தைக் கொண்டும் மறுக்கவும் முடியாது. இதுபற்றிய தெளிவு கிடைத்ததன் பின்னர் எவராவது ஓரு முஸ்லிம் இந்த இரண்டில் உள்ள ஏதாவது ஒரு விடயத்தை நிராகரித்தாலும் அவர் முழு இஸ்லாத்தையும் நிராகரித் தவராகக் கருதப்படுவார். இதுவே இஸ்லாத்தின் தீர்ப்பாகும்.



தூய மார்க்கமான இஸ்லாத்தைக் கொள்கை ரீதியில் நேரடியாக எதிர்த்துநிற்க முடியாத சில தீய சக்திகள் : எமது சமூகத்தில் இருக்கும் புல்லுருவிகளைப் பயன்படுத்தி அவர்கள் மூலம் இஸ்லாமிய சமூகத்திலும், இஸ்லாம் எனும் கொள்கையிலும் குழப்பங்களைத் தோற்றுவிப்பது இன்று நேற்று ஆரம்பித்த ஒரு செயலல்ல. ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது காலத்திலிருந்தே இத்தகைய சதிமுயற்சி தொடங்கிவிட்டது. இஸ்லாமியப் போர்வைக்குள் மறைந்திருந்து எதிரிகளுக்குத் துணை போகும் தீய சக்திகள் தங்களது சுய இலாபங்களை அடைந்து கொள்வதற்காகவே இத்தகைய துரோகங்களைச் செய்கின்றனர்.


இஸ்லாத்திற்கு எதிரான தீய சக்திகள் அன்று முதல் இன்றுவரை சாதிக்க முயற்சிக்கும் மிக முக்கியமான விடயங்களில் ஒன்று குர்ஆனுக்கும் ஸஹீஹான ஹதீஸ்களுக்கும் இடையில் முரண்பாடு உள்ளதாகக் காண்பிப்பதாகும். இந்த முயற்சியைச் செய்பவர்கள் இஸ்லாத்தின் நேரடியான எதிரிகளாவார்கள். அவர்கள் இஸ்லாத்திற்கு வெளியில் இருந்துகொண்டு நேரடியாக இந்த முயற்சியை மேற்கொள்கின்றார்கள். அதேநேரம் அவர்கள் தங்களதுஇந்த சதிமுயற்சியில் தம்மை முஸ்லிம்கள் எனக் கூறிக்கொண்டு இஸ்லாத்திற்குத் துரோகம் இழைப்போரைத் திருப்தியடையச் செய்து அவர்களையும் இதற்காகப் பயன்படுத்துகின்றனர்.

பாகிஸ்தான் நாட்டில் தன்னை முஸ்லிம் எனக் கூறிக் கொள்ளும் கலாநிதி (பீ. எச். டி) பட்டம் பெற்ற ஒருவர் 'அல்குர்ஆன் ஒருவகையான இஸ்லாத்தைப் போதிக்கின்றது, ஹதீஸ் வேறு ஒருவகையான இஸ்லாத்தைப் போதிக்கின்றது.'|| எனும் தனது சுயகருத்தை விளக்குவதற்காக உர்து மொழியில் 'தோ இஸ்லாம் (இரண்டு இஸ்லாம்)' |எனும் பெயரில் ஒரு நூலை எழுதி வெளி யிட்டார். அதே நாட்டில் வாழ்ந்து மறைந்த அல்குர்ஆன் விரிவுரை யாளர்களில் ஒருவரான மஸ்ஊத் அஹ்மத் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் மேற்கண்ட நூலிற்குத் தெளிவான ஆதாதரங்களுடன் கூடிய மிகச் சிறந்த ஒரு மறுப்பு நூலை 'தப்ஹீமே இஸ்லாம்'| (இஸ்லாத்தைப் புரிய வைத்தல்)|| எனும் பெயரில் எழுதினார்கள். ஹதீஸ்களைத் தவறாக விளங்கியிருந்த அந்தக் கலாநிதி தனக்கான மறுப்பு நூலைப் படித்துவிட்டுத் தனது தவறை எழுத்து மூலம் ஏற்றுக்கொண்டுள்ளார். (அல்ஹம்துலில்லாஹ்!)

சமூகத்தில் மலிந்திருந்த இஸ்லாத்திற்கு முரணான கொள்கைகளைக் களைவதற்கென சமூகத்தில் தோன்றிய பிரிவுகளில் தவ்ஹீத் ஜமாஅத் என்பதும் ஒன்றாகும். தமிழ்மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு, இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்கு மத்தியில் இருக்கும் இந்தப் பிரிவின் உப பிரிவுகளில் தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் என்பது அண்மையில் தோன்றிய ஒன்றாகும். தற்போதைய நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எனும் பிரிவின் உயர்மட்டக் குழுவில் முக்கிய பங்கு வகிக்கும் பி. ஜைனுல் ஆபிதீன் என்பவர் அண்மைக் காலங்களில் வெளியிட்டுள்ள சில கருத்துக்கள் பற்றி அவை 'ஈமானுக்கு வேட்டு வைப்பனவாக உள்ளன' என அவருடன் நீண்ட நாட்கள் ஒன்றாக இருந்த ஒரு ஆலிம் கூறியிருப்பது முற்றிலும் சரியானதாகும். 'இஸ்லாத்தின் மூலாதாரங்கள் குர்ஆனும் ஸஹீஹான ஹதீஸுமே'|| என பி.ஜைனுல் ஆபிதீன் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார். ஆனால் அந்த முயற்சி ஸஹீஹான ஹதீஸ் என ஒன்று இருக்க முடியுமா? எனும் சந்தேகத்தை மக்கள் உள்ளங்களில் விதைக்கும் பணியாக இப்போது திசைமாறிச் செல்கின்றது. அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள குறுகிய அறிவை வைத்துக்கொண்டு 'அறிவுக்கு முரண்படுகின்றது'|| எனக்கூறி ஸஹீஹான ஹதீஸை மறுப்பதனை அவர் இப்போது மக்களுக்கு இஸ்லாம் எனப் போதிக்க ஆரம்பித்து விட்டார். அறிவுக்கு முரண்படுகின்றது எனும் காரணம் மாத்திரம் நல்லவர்களிடம் எடுபடமாட்டாது என்பதனால் 'அந்த ஸஹீஹான ஹதீஸ்கள் குர்ஆ னுக்கு முரண்படுகின்றன.'|| என்ற ஒரு வாதத்தையும் அவர் தனது வாதத்திற்கு வலுவூட்டுவதற்காகச் சேர்த்துக் கொண்டுள்ளார்.

பல நீண்ட காலம் பி. ஜைனுல் ஆபிதீனின் சுயரூபம் அறியாமல் அவருடன் ஒட்டியிருந்த உலமாக்கள் ஒவ்வொருவராக ஒதுங்கி விட்டார்கள். இதனை மறைப்பதற்கு: உள்ளவர்களில் சொல்லிக் கொடுப்பவைகளை அழகாக ஒப்புவிப்போரது பெயரில் தனது விஷக் கருத்துகளை அவர் இப்போது மக்கள்முன் வைக் கின்றார். பல வருடங்களுக்கு முன்னர் அவர் தொடங்கிய ஹதீஸை நிராகரிக்கும் கொள்கை ஒரு முழுமையான வடிவமாக சென்ற வருடம் அவரது மாணவர் 'M. அப்பாஸ் அலீ M.I. Sc" என்பவரது பெயரில் 'ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?' எனத் தலைப்பிட்டு நூல்வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.

பீ. ஜெய்னுவாபிதீனின் வழிகாட்டலில் எம். அப்பாஸ் அலீ என்பவர் முன்வைத்திருக்கும் ஹதீஸ் மறுப்புக் கொள்கை என்பது மார்க்க சட்டங்களில் பீ. ஜெய்னுலாபிதீன் விட்டிருக்கின்ற ஏனைய தவறுகள் அனைத்தையும்விட மிகமிக ஆபத்தானது. இதன் மூலம் அவர் இஸ்லாத்தின் மூலாதாரங்களையே ஆட்டம் காணச்செய்ய முயன்றுள்ளார். இஸ்லாமிய சாயம் பூசி மக்களுக்கு மத்தியில் பரப்பப்படும் இந்த நிராகரிப்புக் கொள்கைக்கு எதிராக ஆதாரங் களைக்கொண்டு போராடுவது அறிஞர்களின் கடமையாகும்.
இஸ்லாத்திற்கு எதிராக சதிசெய்பவர்கள் இன்றைய காலத்தில் அதனை மிக அழகாகத் திட்டமிட்டுச் செய்கின்றார்கள். அந்த வகையில் ஸஹீஹான ஹதீஸ்களில் சந்தேகத்தை உண்டு பண்ணுவதையும் மேற்கத்திய சதியாளர்கள் மிக அழகாகத் திட்டமிட்டுள்ளார்கள். அழகாகத் திட்டமிட்டது மட்டுமல்லாமல் அந்த சதியை நிறைவேற்றுவதற்கு அவர்கள் தேர்வு செய்திருக்கும் வழிமுறை அதனைவிட விஷேடமானது. இஸ்லாத்தின் பெயரால் தொடங்கப்பட்ட ஒரு அழைப்புப் பிரச்சாரத்தை அந்த இஸ்லாத்தின் அத்திவாரத்தைத் தகர்க்கும் முயற்சியாக மாற்றுவது என்றால் அது சதிகாரர்களின் எவ்வளது திறமையான ஒரு காரியம் என்பதை சிந்தித்துப் பாருங்கள். தம்மை முஸ்லிம்கள் எனக் கூறிக்கொண்டே ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரிப்பவர்கள்: இஸ்லாத்துக்கு எதிரான சதிமுயற்சிகளில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் என்பதில் துளியளவும் சந்தேகம் ஏற்படுவதற்கு இடம் கிடையாது.
உண்மையான இஸ்லாத்தை அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டுதான் அளவிடப்படுமே தவிர, அதிலுள்ள மனிதர்களைக் கொண்டல்ல. எனவே சதிகாரர்களின் சதிமுயற்சியில் ஒரு ஆலிமை சிக்கவைப்பதன் மூலம் தூய இஸ்லாத்தை அழித்துவிடலாம் என சதிகாரர்கள் கனவு கண்டால் அது பகல் கனவாகவே இருக்கும்.
'ஸஹீஹான ஹதீஸ்கள் அல்குர்ஆனுடன் முரண்படுகின்றன. எனவே அவற்றை நிராகரிக்க வேண்டும்.'|| என்கின்ற வாதத்திற்கு முகம் கொடுப்பது இஸ்லாமிய அறிஞர்களைப் பொறுத்தவரையில் அல்லாஹ்வின் அருளால் மிக மிக இலகுவானதே. அல்ஹம்து லில்லாஹ்! இருந்தாலும் இந்த வாதத்தைப் பாமர மக்கள்வரை கொண்டுவந்த சதிகாரர்கள்: அதனை மிகக் கவனமாகத் திட்டமிட்டு வடிவமைத்ததன் பின்னரே மக்கள்முன் வைத்துள்ளார்கள். எனவே அவர்களது கருத்தை மேலோட்டமாகப் படிக்கும் பொதுமக்கள் அவர்களது வலையில் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆகவே அந்தக் கொள்கையில் உள்ள தவறுகள் பற்றி நாம் இந்த நூலில் விரிவாகத் தெளிவுபடுத்தியுள்ளோம்.
'ஸஹீஹான ஹதீஸ்கள் அல்குர்ஆனுடன் முரண்படுகின்றன. எனவே அவற்றை நிராகரிக்க வேண்டும்.'|| என்கின்ற வாதம் இஸ்லாத்துடன் எந்தத் தொடர்புமற்ற ஒரு வாதம் என்பதால் அதற்கு அல்லாஹ்வின் வேதத்தில் எந்த ஆதாரத்தையும் காணமுடியாது. எனவே அந்த வழிகேட்டை இஸ்லாத்தில் புகுத்துவதற்கு நூலாசிரியர் அப்பாஸ் அலி முக்கியமான இரண்டு வழிகளைக் கையாண்டுள்ளார்.
தனது வாதத்துடன் சம்பந்தமே இல்லாத இரண்டு ஹதீஸ்களை முன்வைத்து அவற்றைத் தமது ஆதாரங்களாக நூலாசிரியர் அப்பாஸ் அலி சித்தரித்துக் காட்டியுள்ளார். இது அவரது வழிகெட்ட கொள்கையை மக்களிடம் புகுத்துவதற்கு அவர் கையாண்டுள்ள முதலாவது வழியாகும். ஸஹாபாக்களினதும், ஏனைய சில அறிஞர் களினதும் கூற்றுக்களைத் திரிபுபடுத்தி அவற்றை ஆதாரங்களாக முன்வைத்திருப்பது அவர் கையாண்டுள்ள இரண்டாவது வழியாகும். தானும் வழிகெட்டு, வாசகர்களையும் வழிகெடுக்க முயற்சித்திருக்கும் நூலாசிரியரது வாதங்களில் உள்ள தவறுகளை ஆதாரங்களுடன் இந்த நூலில் நாம் விரிவாகத் தெளிவுபடுத்தியுள்ளோம். இருந்தாலும் நூலாசிரியர் சீண்டியுள்ள விடயம் ஹதீஸ்கலையுடன் சம்பந்தப்பட்ட நுணுக்கமான விடயம் என்பதால் இந்த நூலை நிதானமாகப் படிக்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.
இஸ்லாத்தின் மூலாதாரங்களைப் பாதுகாத்து, சமூகத்தின் புல்லுருவிகளை அடையாளப்படுத்தும் இந்த மகத்தான முயற்சியில் இஸ்லாத்தை விரும்பும் அனைவரது ஒத்துழைப்பையும் நாம் எதிர் பார்க்கின்றோம். இந்த நூலை வாங்கிப் படிப்பதுடன், மக்களுக்கு மத்தியில் இந்நூல் பரவலாகக் கிடைப்பதற்கு வழியமைப்பதே நீங்கள் செய்யும் முதலாவது உதவியாகும். நேர்வழியை அடையாளம் கண்டு, அதனைப் பின்பற்றி, முஸ்லிம்களாக மரணிக்கும் பாக்கி யத்தை அல்லாஹ் அனைவருக்கும் தந்தருள்வானாக! ஆமீன்! 


- ஆசிரியர் -
அபூ முஹம்மத் அல் முஹம்மதி
ஹி: 1433 கி. பி: 2012



அல்குர்ஆனுக்கு முரணான ஸஹீஹான 
ஹதீஸ்கள் உள்ளன எனும் நம்பிக்கையின் தோற்றம்!


'அல்குர்ஆனுக்கு முரணான ஸஹீஹான ஹதீஸ்கள் இருக்கின்றன, அவற்றை சுயஅறிவின் மூலம் கண்டறிந்து நிராகரிக்க வேண்டும்' எனும் கொள்கை மிகவும் பழமை வாய்ந்தது. இருந்தாலும் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது காலத்தில் இந்தக் கொள்கையை ஆரம்பிக்க முடியாது என்பதனை நேர்வழியில் உள்ள முஸ்லிம்கள் அறிந்துவைத்திருந்ததுபோன்று, இஸ்லாத்தின் எதிரிகளும் நன்கு அறிந்து வைத்திருந்தார்கள். எனவே ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மரணித்து சிறிதுகாலத்தின் பின்னரே இந்த நிராகரிப்புக் கொள்கை முளைக்கத் தொடங்கியது. இக்கொள்கையைத் தோற்றுவித்தவர்கள் தம்மை முஸ்லிம்கள் எனக் காட்டுவதற்கு முழு முயற்சி செய்தார்கள். தங்களது கொள்கையை மறுக்கும் உண்மையான முஸ்லிம்களை வழிகெட்டவர்களாக சித்தரித்தார்கள். குர்ஆனிய வசனங்களுக்குத் தங்களது மனோயிச்சைப்படி: ஹதீஸ்களுடன் முரண்படும் கருத்தைக் கூறுவதே இவர்களது அடிப்படைத் தவறாகும்.



ஆனால் அல்லாஹ்வின் வஹியை மாத்திரம் பின்பற்றும் உண்மை முஸ்லிம்களை ரஸூலுல்லாஹி (ஸல்)அவர்கள் இரவும் பகலைப் போன்ற வெண்மையான பாதையிலே விட்டுச் சென்றுள்ளதால் அன்றுமுதல் இன்றுவரை தோன்றிய அத்தனை வழிகேடுகளையும் மிக இலகுவாக முஸ்லிம்கள் இனம் காணக்கூடியதாகவே இருந்திருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்! “அல்குர்ஆனுக்கு முரணான ஹதீஸ்கள் உள்ளன” எனும் கொள்கையை முதன்முதலில் தோற்றுவித்தவர்கள் முதலில் முஸ்லிம்களோடு சேர்ந்திருந்தாலும் பின்னர் ஜமாஅதுல் முஸ்லிமீனை விட்டும் வெயியேறிச் சென்ற முர்தத்துகளேயாவர். முர்தத்துகள் என்றால் இஸ்லாத்தை விட்டும் திரும்பிச் சென்றவர்கள் என்பது பொருளாகும். முர்தத்துகளுக்குக் கூறப்படும் மற்றொரு பெயர் 'ஹவாரிஜ' என்பதாகும். ஹவாரிஜ் என்றால் வெளியேறிச் சென்றோர் என்பது பொருளாகும். அன்றைய ஜமாஅதுல் முஸ்லிமீனின் இமாமாக இருந்த அலி (ரலி) அவர்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்பட்ட ஒரு சர்ச்சையின்போது சுமுக நிலையைத் தோற்றுவிப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகளை விரும்பாத ஒரு கூட்டம், ஜமாஅதுல் முஸ்லிமீனிலிருந்து வெளியேறிச் சென்றது. முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்படும் சர்ச்சையின்போது இவ்வாறு ஒரு கூட்டம் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிச் சென்வார்கள் என ரஸூலுல்லாஹி (ஸல்) தங்களது வாழ்நாளிலேயே முன்னறிவிப்புச் செய்துவிட்டுச் சென்றார்கள். அந்த முன்னறிவிப்பு ஸஹீஹான ஹதீஸ்களில் தெளிவாகக் காணப்படுகின்றது.

அபூ ஸஈத் (ரலி) கூறுகின்றார்கள்:-

நாங்கள் ரஸூலுல்லாஹி (ஸல்)அவர்களிடம் அமர்ந்திருந்தபோது அவர்கள் (சிறிது தங்கத்தை) பங்குவைத்துக்கொண்டிருந்தார்கள். (அப்போது) துல் ஹுவைஸிரா வந்தார். அவர் பனூ தமீமைச் சேர்ந்த மனிதராவார். 'அல்லாஹ்வின் தூதரே! நீதம் செலுத்துவீராக!' எனக் கூறினார். (அதற்கு) 'உமக்குக் கேடுதான் (ஏற்படும்)! (நான்) நீதம் செலுத்தவில்லையானால் யார்(தான்) நீதம் செலுத்துவார்? (நான்) நீதம் செலுத்தவில்லையானால் நிச்சயமாக நான் நஷ்டம் அடைந்து, இழிவடைந்து விடுவேன்.' என ரஸூலுல்லாஹி (ஸல்) கூறினார்கள். (அப்போது) 'அல்லாஹ்வின் தூதரவர்களே! அவருடைய (விடயத்தில்) அவரது கழுத்தை வெட்டுவதற்கு எனக்கு அனுமதி தாருங்கள்!'|என உமர் பின் ஹத்தாப் (ரலி) கேட்டார்கள். (அதற்கு) 'அவரை விட்டுவிடுவீராக! நிச்சயமாக அவருக்கு சில தோழர்களும் இருக்கின்றார்கள். உங்களில் எவரும் தனது தொழுகையை அவர்களது தொழுகையுடன், தனது நோன்பை அவர்களது நோன்புடன், (ஒப்பிட்டுப் பார்த்தால்) தரக்குறைவாகக் காண்பார். (அவர்கள்) அல்குர்ஆனை ஓதுவார்கள். (அது) அவர்களது தொண்டைக் குழியைத் தாண்டாது. எய்தப்பட்ட மிருகத் திலிருந்து ஈட்டி வெளியேறுவது போன்று இஸ்லாத்திலிருந்து (அவர்கள் வேகமாக) வெளியேறுவார்கள். (எய்தவன்) அதன் முனையைப் பார்ப்பான்: அதிலே எதுவும் இருக்காது, அதன் உட்பக்க முனை களைப் பார்ப்பான்: அதிலும் எதுவும் இருக்காது, பின்னர் அதன் நடுப்பகுதியைப் பார்ப்பான்: அதிலும் எதுவும் இருக்காது, பின்னர் அதன் முனையைப் பார்ப்பான்: அதிலும் எதுவும் இருக்காது. (அம்பு) சாணியையும், இரத்தத்தையும் முந்தி(க்கொண்டு சென்று) விட்டது. அவர்களது அடையாளம் ஒரு கறுத்த மனிதராவார். அவரது இரண்டு புயங்களில் ஒன்று பெண்களின் மார்பகத்தைப் போன்று, அல்லது (இறைச்சித்) துண்டைப் போன்று துடித்துக் கொண்டிருக்கும். மனிதர்கள் (சர்ச்சைப்பட்டு) பிரிந்து நிற்கும்போது (இவர்கள் தீனை விட்டும்) வெளியேறுவார்கள்.' என ரஸூலுல்லாஹி (ஸல்) கூறினார்கள். அபூ ஸஈத் (ரலி) கூறுகின்றார்கள்:- நிச்சயமாக அவர்களுடன் அலி (ரலி) போராடினார்கள், நானும் (அலி (ரலி)) அவர்களுடன் இருந்தேன் என (நான்) சாட்சியம் கூறுகின்றேன். அப்போது அந்த மனிதனைக் கொண்டுவரும்படி கட்டளையிடப்பட்டது. எனவே (அவன்) தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு கொண்டுவரப்பட்டான். ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் வர்ணித்த அதே அமைப்பில் நானும் அவனைப் பார்த்தேன்.

(ஸஹீஹ் முஸ்லிம் கி. ஸகாத் 47)

குர்ஆனை அழகாக ஓதும் ஒரு கூட்டம் உள்ளத்தில் கடுகு அளவும் ஈமான் இல்லாதவர்களாக நபியவர்களுடன் இருந்தவர்களது பரம்பரையிலேயே தோன்றுவார்கள் என நபியவர்கள் கூறியுள்ளார்கள். பின்னர் அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிச் செல்வார்கள் என்பதையும் மேலேயுள்ள ஹதீஸில் நபியவர்கள் கூறியுள்ளார்கள். அந்த மோசமான கூட்டத்தினர்தான் 'அல் குர்ஆனுக்கு முரணான ஸஹீஹான ஹதீஸ்கள் உள்ளன. அவற்றை முஸ்லிம்கள் நிராகரிக்க வேண்டும்.' என்ற கொள்கையைத் தோற்றுவித்தார்கள். இந்த உண்மையைப் பின்வரும் உண்மைச் சம்பவம் நிரூபிக்கின்றது.
யஸீத் அல் பகீர் என்பவர் கூறுகின்றார்:-
ஹவாரிஜ்களுடைய கருத்துக்களில் (நரகவாசிகள் நரகை விட்டும் வெளியேற மாட்டார்கள் என்ற) ஒரு கருத்து என்னைக் கவர்ந்திருந்தது. ஒரு கூட்டத்தாருடன் (நாம்) சில குறிப்பிட்ட தொகையினர் ஹஜ் செய்துவிட்டுப் பின்னர் மக்களுக்கு மத்தியில் (அக்கொள்கையைப் பிரச்சாரம் செய்வதற்காகப்) புறப்பட்டோம். (பிரயாணத்தில்) மதீனாவைக் கடந்துகொண்டிருந்தோம். அப்போது ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) ஒரு தூணின்பால் அமர்ந்து ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களைத் தொட்டும் ஹதீஸ்களை (அங்கே இருந்த) கூட்டத்தினருக்கு கூறிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் நரகவாசிகளைப் பற்றிக் கூறினார்கள். உடனே (நான்) 'ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் தோழரே! (நீங்கள்) அறிவிக்கக்கூடிய இது என்ன ஹதீஸ்? அல்லாஹ் அல்குர்ஆனில் 'நிச்சயமாக நீ யாரை நரகில் நுழைக்கின்றாயோ அவரை நிச்சயமாக இழிவு படுத்திவிட்டாய்' (03:192), 'அதிலிருந்து வெளியேறுவதற்கு நாடி (முயற்சி செய்யும்) ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் (அவர்கள்) அதிலே திருப்பப்படுவார்கள்.' (32:20) என்பதாகக் கூறுகின்றான். நீங்கள் இது என்ன கூறுகின்றீர்கள்?' எனக் கேட்டேன். அதற்கு '(நீர்) அல்குர்ஆன் ஓதுவதுண்டா?'|| எனக் கேட்டார்கள். 'ஆம்!' எனக் கூறினேன். மகாமு முஹம்மத் (ஸல்) பற்றி கேள்விப்பட்டுள்ளீரா? எனக் கேட்டார்கள். 'ஆம்!' எனக் கூறினேன். 'நிச்சயமாக அது புகழப்பட்ட முஹம்மத்ச அவர்களின் நிற்குமிடமாகும். அவர்களைக் கொண்டு அல்லாஹ் (நரகைவிட்டும்) வெளியேற்றக்கூடியோரை வெளியேற்றுவான்.' எனக் கூறினார்கள். பின்னர் பாலம் ஏற்படுத்தப் படுவது, மனிதர்கள் அதனைக் கடந்து செல்வது பற்றி விபரித்தார்கள். அதனை நான் ஞாபகத்தில் வைக்கவில்லையோ என (நான்) பயப்படுகின்றேன். இருந்தாலும் 'நிச்சயமாக ஒரு கூட்டத்தினர் நரகிலே இருந்ததன் பின்னர் வெளியேற்றப்டுவார்கள்.' என நிச்சயமாகக் கூறினார்கள். அதாவது 'கறுத்த குச்சிகளைப்போன்று (கரிய நிறத்தில்) வெளியேறுவார்கள். பின்னர் சுவனத்தின் ஆறுகளில் நின்றும் ஒரு ஆற்றில் நுழைந்து, அதிலே குளிப்பார்கள். (பின்னர் வெள்ளைத்) தாள்களைப்போன்று அவர்கள் (அதிலிருந்து) வெளியே றுவார்கள்.' எனக் கூறினார்கள். பின்னர் (அந்த சபையிலிருந்து நாம்) திரும்பி விட்டோம். 'உங்களுக்கு என்ன கேடு நடந்துள்ளது? கண்ணியத்துக்குரிய (நபித் தோழரான) அவர் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்வதாக (நீங்கள்) நினைக்கின்றீர்களா?' என (எங்களுக்கு மத்தியில்) கூறிக்கொண்டோம். பின்னர் (நாம் பிரச்சாரத்திற்குச் செல்லாது, ஊருக்குத்) திரும்பி விட்டோம். எங்களில் ஒரேயொரு மனிதரைத் தவிர மற்றெவரும் (அந்தக் கொள்கையைப் பிரச்சாரம் செய்ய) வெளியில் செல்லவில்லை. (ஸஹீஹ் முஸ்லிம் கி. ஈமான் 84)
ஒன்றுபட்ட சமூகத்தை விட்டும் வெளியேறிச் சென்ற ஹவாரிஜ்கள் புதுப்புது கண்டுபிடிப்புக்களை வெளியிட்டார்கள். அவற்றில் ஒன்றுதான் 'நரகம் நுழைந்தவர்கள் அதிலே என்றென்றும் தங்கிவிடுவார்கள், அதனை விட்டும் அவர்கள் ஒருபோதும் வெளியேற மாட்டார்கள்.' எனும் கண்டுபிடிப்பாகும். அதனை நிரூபிப்பதற்கு அவர்கள் ஆரம்பித்துவைத்த வாதம்தான் 'அல்குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை நிராகரிக்க வேண்டும்.' என்கின்ற கொள்கையாகும். அந்தக் கொள்கையைத் தோற்றுவித்தவர்கள் பற்றி ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறும்போது 'அவர்களை எங்கு கண்டாலும் கொலை செய்யுங்கள், அதற்கு மறுமை யிலே கூலியுள்ளது, நான் அவர்களைக் கண்டால் ஆத் ஸமூத் கொல்லப்பட்டது போன்று அவர்களைக் கொலை செய்வேன், அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய வர்கள், அல்லாஹ்வின் வஹியைக் கொண்டு வாதாடு வார்கள். ஆனால் அது அவர்களது தொண்டைக் குழிக் குக் கீழே இறங்காது' என்றெல்லாம் கூறியுள்ளார்கள்.
அன்று இஸ்லாத்திலிருந்து வெளியேறிச்சென்று, முஸ்லிம் களுக்கு எதிராகப்போராடிய ஹவாரிஜ்கள் வெளிப்படையில் ஈமான் உள்ளவர்களாகத் தம்மைக் காட்டிக்கொண்டார்கள். ஆனால் உள்ளத்தளவில் அவர்களுக்கு ஈமானுடன் எவ்விதத் தொடர்பும் இருக்கவில்லை. அத்தகையவர்களால் தோற்றுவிக்கப்பட்ட கொள்கையைத்தான் இன்று நூலாசிரியர் துாசுதட்டி, மேலும் மெருகூட்டி பாமர மக்களுக்கு முன்வைத்துள்ளார். இதற்கு வழிகாட் டியாக தென்னிந்தியாவைச் சேர்ந்த ஆலிம் பீ. ஜெய்னுலாபிதீன் என்பவர் காணப்படுகின்றார். ஹதீஸை நம்புகின்றோம் என்று கூறிக் கொண்டே ஹதீஸை மறுக்கும் கலையை இந்த நவீன காலத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை(?) இந்த பீ. ஜெய்னுலாபிதீன் என்பவரையே சாரும்.
இந்த சமுதாயத்தில் ஸஹீஹான ஹதீஸ்களை சுய அறிவைக் கொண்டு நிராகரிக்கும் கொள்கையை முதன்முதலில் துவக்கி வைத்தவர்களிடம் காணப்பட்ட அடிப்படைக் கோளாறு இன்று அதனைத் தூக்கிப் பிடிப்பவர்களிடமும் அப்படியே காணப்படுகின்றது. அல்குர்ஆனுக்கு விளக்கமாக அல்லாஹ்வினால் இறக்கப்பட்டுள்ள ஸஹீஹான ஹதீஸ்களை அல்குர்ஆனுக்கு முரணாக சித்தரிப்பதே ஸஹீஹான ஹதீஸ்களை சுய அறிவைக்கொண்டு நிராகரிப்போரின் அடிப்படைத் தவறாகும். அவசரப் புத்தியும், குறையறிவும், உள்ளத்தில் விசுவாசம் இல்லாத தன்மையுமே இத்தகையோர் இவ்வாறு செயல்படுவதற்கான காரணங்களாகும். இஸ்லாத்தின் பெயரால் காணப்பட்ட பல தவறான விடயங்களை மக்களுக்குத் தெளிவு படுத்தும் சேவையைச் செய்;த பீ. ஜெய்னுலாபிதீன் திடீரென ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரிக்கும் கொள்கையை முன்வைத்தார். பல விடயங்களில் சரியானதைச் சொன்னவர் சொல்லும் இந்த விடயமும் உண்மையாகவே இருக்கும் என ஆழமான அறிவு இல்லாத ஆனால் சரியானதைத் தேடும் ஆர்வம் கொண்ட யஸீத் அல்பகீர் போன்றோர் இன்றும் நம்பலாம். அத்தகையோருக்கு ஓர் நேர்வழிகாட்டலாகவே இந்த நூல் எழுதப்படுகின்றது.



அல்லாஹ்வின் வஹியாகிய குர்ஆனும், ஸஹீஹான ஹதீஸ்களும் முரண்படுமா....?


(தோன்றி) மறையும் நட்சத்திரங்களின்மீது சத்தியமாக! (நமது தூதராகிய) உங்களது தோழர் வழிதவறிவிடவும் இல்லை, (தெரிந்து கொண்டே) தவறான வழியில் செல்லவும் இல்லை. (அவர்) தனது மனோயிச்சைப்படி (எதனையும்) கூறவதில்லை, அது (அவ ருக்கு) அருளப்படும் வஹியையன்றி வேறில்லை. ( 5 3 : 1 - 4 )



அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) கூறுகின்றார்கள்:-

ரஸூலுல்லாஹி(ஸல்) அவர்களிடமிருந்து செவிமடுக்கும் அனைத்தையும் (நான்) எழுதிக்கொண்டிருந்தேன். அதனைப் பாதுகாக்க வேண்டும் என்பது (எனது) நோக்கமாகும். அப்போது குரைஷிகள் என்னைத் தடுத்து விட்டார்கள். “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடமிருந்து (நீர்) செவிமடுக்கும் யாவற்றையும் எழுதுகிறீர். ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களோ மனிதராவார்கள். கோபத்திலும் கதைப்பார்கள், மகிழ்ச்சியிலும் கதைப்பார்கள்.” எனக் கூறினார்கள். எனவே (நான்) எழுதுவதை நிறுத்திக் கொண்டேன். பின்னர் அதுபற்றி ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் கூறினேன். உடனே “(நீர்) எழுது வீராக! எவன் கையில் எனது உயிருள்ளதோ அவன் மீது சத்தியமாக! சத்தியத்தைத் தவிர என்னிலிருந்து (வேறு) எதுவும் வெளிப்பட்டதே இல்லை.” எனக் கூறினார்கள்.

( முஸ்னத் அஹ்மத் - ஸனதுஹு ஸஹீஹ் )

(மறந்துவிடுமோ எனப் பயந்து) நீர் அவசரப்பட்டு அதனை ஓத உமது நாவை அசைக்காதீர்! நிச்சயமாக அதனை ஒன்று சேர்த்து, அதனை ஓதச் செய்வது எமது கடமையாகும். எனவே அதனை நாம் (ஜிப்ரீல் மூலம்) ஓதினால் (ஓதி முடிந்த) பின்னர் (நீர்) அவரது ஓதலைப் பின்பற்றி ஓதுவீராக! பின்னர் அதனை (மேலதிக வஹியைக் கொண்டு) தெளிவுபடுத்துவதும் நிச்சயமாக எமது கடமையாகும். ( 7 5 : 1 6 - 1 9 )

குர்ஆனை இறக்கியருளிய அல்லாஹ்: அதற்கு மேலதிக விளக்கம் தேவை என்பதை இங்கு எங்களுக்கு உணர்த்தியுள்ளான். அந்த விளக்கத்தை வழங்குவதும் அவனது கடமை எனவும் அவன் கூறியுள்ளான். அப்படியானால் அவன் குர்அனுக்கு விளக்கமாக இறக்கிய வஹி எங்கே? என சிந்திப்பதே: மார்க்கம் பற்றிய ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது அத்தனை வார்த்தைகளும் வஹி என்பதை விளங்கிக்கொள்வதற்குப் போதுமானதாகும். ஏனெனில் இந்த உம்மத்தில் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களைத் தவிர வேறு எவருக்கும் வஹி அருளப்படவில்லை. எனவே ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்கு இறக்கப்பட்ட அல்குர்ஆன் எனும் வஹியை விளக்கப் படுத்தக்கூடிய வஹியை அல்லாஹ் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களைத் தவிர வேறு எவருக்கும் இறக்குவதற்கு வாய்ப்பே இல்லை. அவ்வாறு வஹி மூலம் இறக்கப்பட்ட அல்குர்ஆனுக்கான விளக்கத்தைத்தான் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தங்களது வார்த்தைகளைக்கொண்டு மார்க்கமாக எடுத்துச் சொன்னார்கள்.
கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-
மனிதர்களின்பால் இறக்கப்பட்டதை (அவர்கள்) சிந்திக்கும் பொருட்டு அவர்களுக்கு (நீர்) தெளிவுபடுத்துவதற்காக (இந்த) நல்லுபதேசத்தை உம்மின்பால் (நாம்) இறக்கியருளினோம்.
( 1 6 : 4 4 )
எனவே வஹிமூலம் அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்ட அல் குர்ஆனுக்கு : அதே அல்லாஹ் வஹிமூலம் இறக்கிய ஹதீஸ் எப்படி முரணாக இருக்கும்.........? ஒருபோதும் முரண்படமாட்டாது என்பது புத்தி சுவாதீனமுள்ள, நியாயமான எந்தவொரு மனிதனும் மிக இலகுவாக விளங்கக்கூடிய உண்மையாகும்.
அல்குர்ஆனுக்கு முரண்படக்கூடிய ஹதீஸ்கள் என சில ஹதீஸ்களை அந்தக் கொள்கையைப் பிரச்சாரம் செய்பவர்கள் முன்வைப்பது அவர்களது கூற்றில் உண்மை இருக்குமோ? என்றொரு சந்தேகத்தை உங்களது மனதில் தோற்றுவிக்கலாம். அந்த சந்தேகங்களை அவர்கள் தனித்தனித் தலைப்பாகப் பட்டியல் இட்டிருப்பது போன்றே அவற்றிற்கான விரிவான பதில்களும் தனித்தனித் தலைப்பாக பின்னால் உங்களுக்குத் தரப்படுகின்றன. அவற்றை நீங்கள் இலகுவாகப் புரிந்துகொள்வதற்காக நீங்கள் சிந்திக்க வேண்டிய அடிப்படை உண்மை என்னவென்றால் அல்லாஹ் வினால் இறக்கப்பட்ட வஹியாகிய அல்குர்ஆனும் ஸஹீஹான ஹதீஸும் முரண்படலாம் என வாதிப்பது சரியாக இருக்குமானால்: “அல்லாஹ்வினால் மிக மிகப் பலவீனமாகப் படைக்கப்பட்டுள்ள மனிதர்களில் உள்ள நூலாசிரியரும், அவரது முன்னோடியும் அரைகுறையாக விளங்கியிருப்பதற்கு வாய்ப்பு இல்லையா?” என்பதேயாகும். உண்மையும் அதுதான். பின்னால் அந்த உண்மையை நாம் நிருபிக்கும்போது அதனை உங்களால் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். இன்ஷா அல்லாஹ்!
உண்மை என்னவெனில் அல்லாஹ் இறக்கிய வஹியான ஸஹீஹான ஹதீஸ்கள் அல்குர்ஆனுக்கு முரண்படுகின்றது என பலவீனமான மனித அறிவை வைத்து முடிவெடுப்பது நரிவாலைக் கொண்டு கடலை ஆழம் பார்ப்பதற்கு ஒப்பான செயலாகும். உண்மையைத் தெளிவுபடுத்திய பின்பும்: ஸஹீஹான ஹதீஸ்கள் அல்குர்ஆனுக்கு முரண்படுகின்றன எனும் கொள்கையை நம்பி ஸஹீஹான ஹதீஸ்களை ஒரு முஸ்லிம் மறுத்தால் அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவனாக ஆகிவிடுவான். அல்லாஹ் எம்மை அந்த நிலைமையை விட்டும் பாதுகாப்பானாக!
இப்போது “ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?” எனும் நூலில் அப்பாஸ் அலி என்பவர் எழுதியுள்ளதையும் அதற்கான பதிலையும் ஒவ்வொன்றாக உங்களுக்கு முன்வைக்கின்றோம்.



   வாசகர்கள் அறியவேண்டியவை!

   'நூலாசிரியர்' என நாம் இந்த நூலில் குறிப்பிடுவது 'ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?' எனும் நூலை எழுதிய M.  அப்பாஸ் அலீ  என்பவரைக் குறிக்கும்.

அப்பாஸ் அலீ எழுதியவற்றை இங்கு நாம் வழிகேடு எனத் தலைப் பிட்டு, அவற்றை சாய்வான எழுத்தில் எழுதியுள்ளோம். அவற் றின் சில பகுதிகள்  மீது (xxx) இட்டு அவை அப்பட்டமான தவறுகள் என்பதை சுட்டிக்காட்டியுள்ளோம். 

அப்பாஸ் அலீயின் வழிகெட்ட கருத்துக்கான பதிலை 'நேர்வழி' எனத் தலைப்பிட்டு எழுதியுள்ளோம்.

வழிகேடு!

ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?

நபியவர்களின் கூற்று குர்ஆணுடன் முரண்படாது 
   மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும்,  அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற் காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.
    அல்குர்ஆன் 16:44

திருக்குர்ஆனை விளக்கும் பொறுப்பை அல்லாஹ் நபி (ஸல்) அவர்களிடத்தில் ஒப்படைத்துள்ளான். எனவே நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகிய அனைத்தும் குர்ஆனுக்கு விளக்கமாக இருக்குமே தவிர ஒருபோதும் குர்ஆனுடன் முரண்படாது. குர்ஆனுக்கு முரண்படும் செய்தி நபி (ஸல்) அவர்களின் கூற்றாக இருக்க முடியாது என்பதற்கு இறைவனுடைய இந்த வாக்கே போதுமானது. 

குர்ஆன் மட்டும் அல்லாஹ்விடமிருந்து வரவில்லை. நபி (ஸல்) அவர்கள் மார்க்க அடிப்படையில் உபதேசித்த கருத்துக்கள், செயல்பாடுகள், அங்கீகாரம் ஆகிய அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வந்தவையே! இதைப் பின்வரும் வசனம் உணர்த்துகிறது.

அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை. அல்குர்ஆன் 53:4

குர்ஆனும் நபி (ஸல்) அவர்கள் அறிவித்த செய்திகளும் அல்லாஹ்வின் செய்திகள் என்பதால் இரண்டுக்கும் மத்தியில் முரண்பாடு வருவதற்கு எள்ளளவும் சாத்தியமில்லை. அல்லாஹ் அல்லாதவர்களின் கருத்துக்களில்  முரண்பாட்டைக் காணலாம். ஆனால் அல்லாஹ்வுடைய செய்திகளில் முரண்பாடே வராது என்று பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.

  அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.  அல்குர்ஆன் 4:82 

   இதன் முன்னும் பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது. அல்குர்ஆன் 41:42 

    குர்ஆன் கூறும் இந்த அடிப்படைக்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்களின் பெயரால் ஒரு செய்தி வந்தால் அந்த முரண்பாடே அது தவறான செய்தி என்பதற்குப் போதுமான சான்றாகிவிடும்.
     குர்ஆனுக்கும், நியாயமான உணர்வுகளுக்கும் மாற்றமாக தன் பெயரால் அறிவிக்கப்படும் செய்திகளை ஏற்றக்கொள்ளக்கூடாது என்று நபி (ஸல்) அவர்களே தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும்போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக்கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும், முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்க ளு(டைய வாழ்க்கை)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அ(தைக் கூறுவ)தில் நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன். என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும்போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும், முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதைவிட்டு) விரண்டு ஓடுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு (சாத்தியப் படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதைவிட்டும் மிகத் தாரமானவன்.
     அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி)
        நூல்: அஹ்மத் 15478

   அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிளார்கள்: பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என்னிடமிருந்து யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.
அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்துப் (ரலி)     நூல்: முஸ்லிம் 1

    நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை குர்ஆன் அடிப்படையில்தான் அமைந்திருந்தது. அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகிய அனைத்தும் குர்ஆனுக்கு ஒத்திருக்கும்: அல்லது குர்ஆனுக்கு விளக்கமாக இருக்கும். குர்ஆனுக்கு மாற்றமாக அவர்களின் வாழ்க்கையில் எந்தவொரு சிறு அம்சத்தையும் காணமுடியாது.

    நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் “நபி (ஸல்) அவர்களின் குணத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்|| என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஷஷநபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது” என்று கூறினார்கள்.
  அறிவிப்பவர்: சஃத் பின் ஹிஷாம்   நூல்: அஹ்மத் 24139

நேர்வழி!

அல்குர்ஆன் இறங்கிய காலத்தில் அது எழுத்து வடிவிலும், மனிதர்களின் உள்ளங்களிலும் பாதுகாக்கப்பட்டது. அதேபோன்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது ஹதீஸும் எழுத்துவடிவிலும், மனிதர்களது உள்ளங்களிலும் பாதுகாக்கப்பட்டது. அல்குர்ஆனுடன் ஹதீஸ்கள் கலந்துவிடும் என்பதற்காக ஹதீஸை எழுதுவதனை ஆரம்பத்தில் ரஸூலுல்லாஹி (ஸல்)  தடை செய்திருந்தாலும் பின்னர் ரஸூலுல்லாஹி (ஸல்)  அவர்களே கேட்போருக்கு ஹதீஸை எழுதிக் கொடுக்கும்படி கட்டளையிட்டுள்ளார்கள்.
யமனைச் சேர்ந்த அபூ ஷாஹ் எனப்படும் ஒரு மனிதர் ரஸூலுல்லாஹி (ஸல்)  அவர்களிடம் வந்து, அவர்கள் கூறிய ஒரு ஹதீஸை எழுதித்தருமாறு வேண்டியபோது தமது தோழர்களைப் பார்த்து “அபூஷாஹுக்கு அதனை எழுதிக் கொடுங்கள்” என ரஸூலுல்லாஹி(ஸல்) கட்டளையிட்டார்கள்.  
 ( ஸஹீஹ் முஸ்லிம் கி. ஹஜ் - 82 ம் தலைப்பு )
குர்ஆனும் ஹதீஸும் அல்லாஹ்விடமிருந்து வந்த வஹி என்பதனை நூலாசிரியர் ஏற்றுக்கொண்டுள்ளார். அந்த இரண்டும் ரஸூலுல்லாஹி (ஸல்)  வர்களது காலம் முதல் இன்றுவரை எழுத்து வடிவிலும் உள்ளங்களிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அத்தகைய ஹதீஸ்கள் நம்பகமான வழிகளில் எமக்குக் கிடைக்கும்போது அது ஹதீஸ்தான் என நிரூபிக்கப்பட்டதன் பின்னர் அது அல்குர் ஆணுக்கு முரண்படுகின்றது எனக் கூறுவது அர்த்தமற்றதாகும். ஏனெனில் அல்குர்ஆன் எவ்வாறு அல்லாஹ்வினால் இறக்கப்பட்டதோ அதேபோன்று நபியவர்கள் மார்க்கமாக மொழிந்த ஒவ்வொரு ஹதீ ஸும் அல்லாஹ் இறக்கியதேயாகும். இதற்குரிய ஆதாரத்தை (53 : 04) நூலசிரியரே எழுதியுள்ளார். எனவே அல்குர்ஆனிய வசனம் எப்படி மற்றொரு வசனத்துடன் முரண்படமாட்டாதோ அதேபோன்று ஸஹீஹானது என நிரூபிக்கப்பட்ட எந்தவொரு ஹதீஸும் ஒரு நாளும் அல்குர்ஆனுடன் முரண்படமாட்டாது என்பதுதான் ஆதாரங் களுடன்கூடிய அசைக்க முடியாத உண்மையாகும். அல்லாஹ் இறக்கிய நல்லுபதேசம் (குர்ஆன், ஹதீஸ்) எவ்வாறு ஒன்று மற்றொன்றுடன் முரண்படும்............?
நூலாசிரியர் உட்பட யாரெல்லாம் “குர்ஆனுக்கு முரண் படுகின்றது, அறிவுக்கு முரண்படுகின்றது” என நம்பகமான வழிகளில் அறிவிக்கப்பட்ட ஹதீஸ்களை மறுக்கின்றனரோ அவர்கள் இவ்வாறு தடுமாறுவதற்கு அடிப்படைக் காரணம் “அல்லாஹ் பாதுகாப்பதாகப் பொறுப்பேற்றுக்கொண்டது அல்குர்ஆனை மட்டும் தான்” என்றதொரு தவறான எண்ணமேயாகும். குர்ஆனிலும், ஹதீஸிலும் புதிது புதிதாகக் கண்டுபிடிக்கும் இவர்கள் அல்லாஹ் பாதுகாப்பதாகக் கூறும்போது என்ன வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளான்? என்பதை இவர்கள் கவனமாக சிந்தித்து செயலாற்றவில்லை.
கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-
நிச்சயமாக நாமே (இந்த) நல்லுபதேசத்தை இறக்கியருளி னோம். மேலும் நிச்சயமாக அதன் பாதுகாவலர்களும் நாமேயாவோம்.
   ( 1 5 : 0 9 )
இந்த வசனத்தில் அல்லாஹ் பாதுகாப்பது “திக்ர் (நல்லு பதேசம்)” எனக்கூறுகின்றானே தவிர அல்குர்ஆன் என்று குறிப்பிட வில்லை. “திக்ர்” என அல்லாஹ் குறிப்பிடுவது குர்ஆனையும் ஸஹீஹான ஹதீஸையுமேயாகும். இதற்கு மாற்றமாக நூலாசிரியர் வாதிப்பாரானால் ஒட்டுமொத்தமாக ஹதீஸை மறுத்துக் கொண்டு தம்மை “அஹ்லுல் குர்ஆன்” எனக்கூறுவோரது கூற்று தவறு என்பதை இவர்களால் எந்த விதத்திலும் நிரூபிக்க முடியாது. “அல்லாஹ்வே பாதுகாப்பு உத்தரவாதம் தர மறுத்துவிட்ட ஹதீஸ்களை நாம் எப்படி நம்புவது?”என அவர்கள் நூலாசிரியரிடம் வினாத் தொடுத்தால் இவர்கள் என்ன பதிலைத்தான் சொல்ல முடியும்............? எனவே அல்குர்ஆனை மட்டும் அல்லாஹ் பாதுகாப்பான் என்ற இவர்களது அடிப்படைத் தவறை இவர்கள் புரிந்து, அதனைத் திருத்திக் கொள்ளாதவரை இவர்களால் ஹதீஸ்களை மறுக்கும் நிராகரிப்பிலிருந்து ஒருபோதும் விடுபட முடியாது.
இஸ்லாத்தின் மூலாதாரங்கள் எனும் கண்ணோட்டத்தில் பார்த்தால் வஹிமூலம் அறிவிக்கப்பட்ட குர்ஆனும் ஹதீஸும் சரிசமன் என்பதுதான் ரஸூலுல்லாஹி (ஸல்)அவர்களின் தீர்ப்பாகும். 
  ரஸூலுல்லாஹி  (ஸல்) கூறுகின்றார்கள்:-
உங்களில் எவரும் தனது கட்டிலிலே சாய்ந்திருக்கும் நிலையில் (நான்) ஏவியவற்றிலிருந்து அல்லது (நான்) தடுத்த வற்றிலிருந்து ஒரு விடயம் அவரிடம் வரும்போது “(இவை எதுவும்) எங்களுக்குத் தெரியாது. அல்லாஹ்வின் வேதத்தில் எதனை (நாம்) காணுகின்றோமோ அதனை (நாம்) பின்பற்றுவோம் எனக்கூறுவதை (நான்) அறவே காணக்கூடாது.
(அபூ தாவூத் - ஸஹீஹ். கி. ஸுன்னா 06)
எனவே ஹதீஸ் கலை வல்லுனர்களால் நபியவர்கள் கூறியதுதான் என நிரூபிக்கப்பட்ட செய்திகளை “குர்ஆனுக்கு முரண்படுகின்றது, அறிவுக்கு முரண்படுகின்றது” எனக் காரணம் கூறி மறுக்கும் நூலாசிரியரும் அவரது குருவும் கையில் எடுத்த கொள்கை அடிப்படையிலேயே வழிகேடானதாகும். 
ஹதீஸ் கலை விதிகளின் அடிப்படையில் ஸஹீஹானது என நிரூபிக்கப்பட்ட ஹதீஸை, நரிவால் போன்ற தனது குறுகிய அறிவைக்கொண்டு குர்ஆனுக்கு முரணானது எனக்கூறி மறுப்பதற்கு முஸ்னத் அஹ்மதிலே வரக்கூடிய 15478 வது ஹதீஸை நூலாசிரியர் முதலாவது ஆதாரமாக முன்வைத்துள்ளார். முஸ்னத் அஹ்மதிலே வரக்கூடிய அந்த ஹதீஸ் இவர்களது கொள்கைக்கு ஆதாரமாகுமா? அறவே கிடையாது என்பதைப் பின்வரும் கேள்வி நிரூபிக்கின்றது. 

எமது கேள்வி?


குர்ஆனுக்கும், நியாயமான உணர்வுகளுக்கும் மாற்றமாக தன் பெயரால் அறிவிக்கப்படும் செய்திகளை ஏற்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்களே தெளிவுபடுத்தியுள்ளார்கள்.'' என எழுதியுள்ளீர்கள். நீங்கள் எழுதிய ஹதீஸில் குர்ஆன் எனும் வார்த்தை இடம் பெற்றுள்ளதா...? அப்படி இருக்குமானால் அதனை நிரூபிக்க முடியுமா....?

ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-

என்மீது பொய் சொல்லாதீர்கள். என்மீது யார் பொய் சொல்கின்றானோ அவன் நரகம் நுழையட்டும்.  (ஸஹீஹ் முஸ்லிம், ஸ.புஹாரி கி. இல்ம் 38)

ஸஹீஹான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படும் என மேற்படி ஹதீஸில் எந்த இடத்தில் கூறப்பட்டுள்ளது........?

 நூலாசிரியரினதும், அவரது வழிகாட்டியான பி. ஜைனுல் ஆபிதீனினதும் வழிகெட்ட போக்கிற்கு அவர்களது அவசரப் புத்தியும் மிக முக்கியமான ஒரு காரணமாகும். ஹதீஸ் கலை விதிகளின்படி ஸஹீஹானது என நிரூபிக்கப்பட்ட ஹதீஸ்களை மறுப்பதற்கு முஸ்னத் அஹ்மதிலே வரும் இந்த ஹதீஸைப் பயன்படுத்துவது எந்த அளவு அறிவீனமானது என்பதை அவர்கள் சிந்தி;க்கவில்லை. 

'நியாயமான உணர்வுகளுக்கு மாற்றமாக தன் பெயரால் அறிவிக்கப் படும் செய்திகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று நபி (ஸல்) அவர்களே தெளிவுபடுத்தியுள்ளார்கள்." என எழுதிவிட்டு அதற்கு ஆதாரமாகத்தான் முஸ்னத் அஹ்மதிலே வரக்கூடிய மேற்படி ஹதீஸை நூலாசிரியர் முன்வைத்துள்ளார். அதனை அடிப்படையாக வைத்து நூலாசிரியரும், பீ ஜெய்லாபிதீனும் ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம் போன்ற நூல்களில் பதியப்பட்டுள்ள மிகமிக உறுதியான ஹதீஸ்களையும் நிராகரிக்கின்றார்கள். 

இவர்களது குறுகிய சிந்தனைக்கு எட்டாத ஸஹீஹான ஹதீஸ்களை இவர்கள் 'மோசமான செய்திகள், நியாயமான உணர்வுகளுக்கு முரணான செய்திகள்" எனக்கூறி மறுக்கின்றார்கள். இந்தக் கொள்கை ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது கொள்கைக்கு நேர் முரணானது. அல்லாஹ்வின் வஹியிலுள்ளது என நிரூபிக் கப்படும் செய்தி அறிவுக்கு உடன்பட்டாலும், உடன்படா விட்டாலும் அதனை அப்படியே நம்புவதே முஸ்லிம்களின் கடமையாகும். இதனைப் பின்வரும் ஹதீஸ் நிரூபிக்கின்றது.

 அபூஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள்:-

(ஒருமுறை) ரஸூலுல்லாஹி (ஸல்)  அவர்கள் ஸுப்ஹ் தொழுகை யைத் தொழுதார்கள். பின்னர் மக்களை முன்னோக்கி “ஒரு மனிதர் ஒரு காளை மாட்டை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தார். (இடையிலே) அதன்மீது ஏறி (வேகமாகச் செலுத்துவதற்காக) அதனை அடித்தார். அப்போது (அது) “நிச்சயமாக நாம் இதற்காகப் படைக்கப்படவில்லை, வயல் உழுவதற்காகவே நாம் படைக்கப்பட்டுள்ளோம்.” என்பதாகக் கூறியது. (இதனைக் கேட்ட) மக்கள் (ஆச்சரியப்பட்டு) “அல்லாஹ் மிகவும் தூய்மையானவன்! காளைமாடு கதைக்கின்றது.” எனக் கூறினார்கள். அதற்கு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் “நிச்சயமாக நானும், அபூபக்கரும், உமரும் இதனை நம்புகின்றோம்.” எனக் கூறினார்கள். அந்த இருவரும் அங்கு இருக்கவும் இல்லை.  
(ஸஹீஹுல் புஹாரி கி. அன்பியா 52)

சிந்தனைக்கு எட்டாத செய்தியை முதலில் ரஸூலுல்லாஹி (ஸல்) நம்பினார்கள். வஹிமூலம் அறிவிக்கப்படும் செய்தி சிந்தனைக்கு முரணாக இருந்தாலும் உண்மையான முஸ்லிம்கள் அதனை நம்புவார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் அந்த சபையிலே இல்லாத அபூபக்கர்  (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் அதனை நம்புகின்றார்கள் என்பதை எடுத்துக் கூறினார்கள். 

இப்போது நீங்கள் இந்த ஹதீஸின் ஒளியில் சிந்தியுங்கள்! ஸஹீஹானது என நிரூபணமான ஹதீஸ் சிந்தனைக்கு முரண்பட்டால் அதனை மறுப்பது முஸ்லிம்களின் அடையாளமா.........? அல்லது சிந்தனையால் புரிந்துகொள்ள முடியாதவற்றையும், அவை அல்லாஹ் வின் வஹி என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டால் அவற்றை முழுமையயாக ஏற்று நம்புவது முஸ்லிம்களின் அடையாளமா.................? 

சுய அறிவைக்கொண்டு ஸஹீஹான ஹதீஸ்களை மறுக்கும் நிராகரிப்புக் கொள்கை நபியர்கள் கற்றுத்தந்த வழிமுறைதான்  என நூலாசிரியர் இதன் பிறகும் நாவு கூசாமல் கூறுவாரேயானால் அவர் தெளிவான வழிகேட்டில் இருக்கின்றார் என்பதை உங்களால் உறுதியாக அறிந்துகொள்ள முடியும். 

நூலாசிரியர் முன்வைக்கும் கொள்கை தெளிவான வழிகேடு என்பதை வாசகர்கள் மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நூலாசிரியரின் கொள்கையின் அடிப்படையிலேயே அவர் வழிகேட்டில் இருக்கின்றார் என்பதையும் இங்கு நாம் தெளிவுபடுத்துகின்றோம்.

“குர்ஆனுக்கு முரண்பட்டால் அந்த ஹதீஸை நபியவர்கள் கூறியிருக்க மாட்டார்கள் என்பதால் அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது”என்பதுதான் நூலாசிரியரது கொள்கையாகும். இந்தக் கொள்கையின் அடிப்படையில் நூலாசிரியர் தனது கொள்கைக்கு ஆதாரமாக முன்வைத்திருக்கக்கூடிய ஹதீஸை இப்போது நாம் அளவிட்டுப் பார்ப்போம். அதாவது முஸ்னத் அஹ்மதிலே வரக்கூடிய 15478 வது ஹதீஸ் அல்குர்ஆனுடன் ஒத்துப் போகின்றதா? அல்லது முரண்படுகின்றதா? என நாம் அலசிப் பார்ப்போம்.

கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-
அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு விடயத்தை (இப்படித்தான் எனத்) தீர்ப்பளித்துவிட்டால் அவர்களது (அந்த) விடயத்தில் (தாம் விரும்பியதைத்) தேர்வு செய்யும் உரிமை விசவாசியான ஆணுக்கோ அல்லது விசுவாசியான பெண்ணுக்கோ கிடையாது. மேலும் யார் அல்லாஹ்வுக்கும் அவனது தாதருக்கும் மாறு செய்கின்றானோ நிச்சயமாக (அவன்) தெளிவான வழிகேட்டில் சென்றுவிட்டான். ( 3 3 : 3 6 )
அல்லாஹ்வினதும் அவனது தாதரினதும் தீர்ப்புக்களை அப்படியே ஏற்க வேண்டும் என அல்குர்ஆன் கூறுகின்றது. மனமும் உடலும் ஏற்பவற்றை மாத்திரம் நம்பி, ஏனையவற்றை மறுத்துவிடும்படி முஸ்னத் அஹ்மதிலே வரக்கூடிய ஹதீஸ் கூறுகின்றது. குர்ஆனுடன் முரண்படும் ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில்  முஸ்னத் அஹ்மதிலே வரக்கூடிய இந்த ஹதீஸை நூலாசிரியர் ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே நூலாசிரியரின் கொள்கைப்படியே ஸஹீஹான ஹதீஸ்களை உள்ளமும், உடலும் ஏற்காவிட்டால் அவற்றைப் புறக்கணிக்க வேண்டும் எனக் கூறுகின்ற ஹதீஸே குப்பைக்குச் சென்றுவிட்டது. இதன்மூலம் ஸஹீஹான ஹதீஸை நிராகரிப்பதற்கு நூலாசிரியர் முன்வைத்த அடிப்படை ஆதாரம் குப்பைக்குச் சென்ற பிறகு அவரது கொள்கை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் உண்மையானதாக அமையும்.......? 

......... ஆகவே (சத்தியத்தை) நிராகரித்த அவன் வாயடைத்து விட்டான். அல்லாஹ் அநியா யக்கார ஜனங்களை (ஒருபோதும்) நேர்வழியில் செலுத்துவதுமில்லை. ( 0 2 : 2 5 8 )
முஸ்னத் அஹ்மதிலிருந்து ஆதாரமாக முன் வைக்கப்பட்ட ஹதீஸில் குர்ஆனுக்கு முரணானவற்றை மறுப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதனை ஏற்கனவே நாம் நிரூபித்துள்ளோம். இருந்தாலும் நூலாசிரியர் அதனை ஆதாரமாக வைத்து “குர்ஆனுக்கு முரணான ஹதீஸை மறுக்க வேண்டும்” என அடம் பிடிப்பதால் அவரது கொள்கையின் அடிப்படையிலும் அவரது வாதம் முற்றிலும் தவறானது என்பதையும் இங்கு நிரூபித்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்!
“என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப் படும்போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும், முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதைவிட்டு) விரண்டோடுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க் கை)க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதைவிட்டும் மிகத் தூரமானவன்.” என முஸ்னத் அஹ்மதிலே வரக்கூடிய ஹதீஸ் கூறுகின்றது. இதனை ஸஹீஹான ஹதீஸ்களை அறிவுக்குப் பொருந்தவில்லை எனக்கூறி நிராகரிப்பதற்குரிய அடிப்படை ஆதாரமாக நூலாசிரியர் முன்வைத்துள்ளார். 
எனவே நூலாசிரியரினதும், அவரது வழிகாட்டியினதும் கொள்கைப்படி எவ்வளவு நம்பனமான ஹதீஸாக இருந்தாலும் அது எவருக்காவது வெறுப்பாகத் தோன்றினால், அவரது தோல்களும் முடிகளும் அதற்குக் கட்டுப்படாமலிருந்தால், அவரை விட்டும் அது தூரமாக இருந்தால் அதனை அவர் நிராகரித்துவிடலாம். வெறுமனே இதனை ஒரு கொள்கையாக மட்டும் அவர்கள் கூறவில்லை. மாறாக இந்தக் கொள்கையின் அடிப்படையில் மிகமிக நம்பகமானது என ஹதீஸ் கலை அறிஞர்களால் ஆயிரம் வருடங்களுக்கு மேலாகப் பாதுகாத்துவந்த பொக்கிஷங்களிலுள்ள  எத்தனையோ ஸஹீஹான ஹதீஸ்களையே இத்தகையவர்கள் மறுத்துவிட்டார்கள்.
ஸஹீஹான ஹதீஸ்களில் ஒரு ஹதீஸையாவது எவரேனும் ஒரு முஸ்லிம் அது ஸஹீஹானது எனத் தெரிந்ததன் பின்னர் அதனை நிராகரித்தால் அவர் நிராகரிப்பாளராக மாறிவிடுவார். இது இஸ்லாம் மக்களுக்குப் போதிக்கும் உண்மைகளில் ஒன்றாகும். எனவே அல்லாஹ்வின் அருளால் நேர்வழி கிடைக்கப்பெற்றுள்ள எந்தவொரு முஸ்லிமும் ஸஹீஹானது என நிரூபணமான ஹதீஸ் களை அறிவுக்கு முரண்படுகின்றது என்றோ அல்லது குர்ஆனுக்கு முரண்படுகின்றது என்றோ கூறி நிராகரிக்க முற்படக் கூடாது. 
............ வேதத்தின் சிலதை விசுவாசம் கொண்டு சிலதை நிராகரிக்கின்றீர்களா? உங்களினின்றும் அதனைச் செய்வோருக்கு உலக வாழிவில் இழிவையன்றி (வேறு) கூலி இல்லை. மேலும் மறுமை நாளில் (அவர்கள்) கடுமையான தண்டனையின்பால் மீட்டப்படுவார்கள். அத்து டன் அல்லாஹ் (நீங்கள்) செய்பவற்றை விட்டும் பராமுக மானவனாக இல்லை. அத்தகையவர்களே மறுமைக்குப் பகரமாக உலக வாழ்வை வாங்கிக்கொண்டவர்கள். எனவே அவர்களை விட்டும் தண்டனை இலகுபடுத்தப்பட மாட்டாது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். 
( 0 2 : 8 5, 8 6 )

ஷஷநிச்சயமாக நாம் அவனுக்கு நேரான பாதையைக் காட்டினோம். ஒன்றில் (அதனைப் பின்பற்றி) நன்றி செலுத்துபவனாக (இருக்கட்டும்.) அல்லது (சத்தியத்தை) நிராகரிப்பவனாக (அவன் இருக்கட்டும்.) நிச்சயமாக நாம் நிராகரிப்போருக்கு சங்கிலிகளையும், விலங்குகளையும், நரகையும் தயார்படுத்திவிட்டோம்.  ( 7 6 : 0 3, 0 4 )
~~~எமது கேள்வி?~~~

குர்ஆனுக்கு முரணான ஹதீஸ்களை நிராகரிக்க வேண்டும் எனக்கூறி; குர்ஆ னுக்கு மாற்றம் என நீங்கள் கருதும்  ஸஹீஹான ஹதீஸ்களை   மறுக்கிறீர்கள். 

உங்களது கொள்கையின் பிரகாரம்

   உங்களது கொள்கைக்கு அடிப்படை ஆதாரமாக நீங்கள் முன்வைக்கும் ஹதீஸ் குர்ஆனின்  (33 : 36) வது வசனத்திற்கு முரணாகும். எனவே அது நிராகரிக்கப்பட வேண்டிய ஹதீஸாகும்.  அப்படியானால் 



நபியவர்களின் பெயரால் சொல்லப் படும்
 

பொய்தான் உங்களது கொள்கையின்
 

அத்திவாரமா.....?
 

நூலாசிரியர் கண்டுபிடித்த ஹதீஸ் நிராகரிப்புக்கொள்கைக்கு ஆதாரமாக இரண்டு ஹதீஸ்களை அவர் முன்வைத்துள்ளார். அதில் முதலாவது ஹதீஸில் அவருக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்பதைத் தெளிவாக நிரூபித்து விட்டோம். இப்போது இரண்டாவது ஆதாரத்தைப் பார்ப்போம். 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிளார்கள்: பொய் எனக்கருதப்படும் ஒரு செய்தியை என்னிடமிருந்து யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.
அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்துப் (ரலி) நூல்: முஸ்லிம் 1
ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரிப்பதற்கு இந்த ஹதீஸை ஆதாரமாக முன்வைப்பது தெளிவான திரிபுபடுத்தலாகும். அதாவது நபியவர்களைத் தொட்டும் கிடைக்கின்ற செய்தி பொய்யானது எனக்கருதும் ஒருவர் அதனைப் பிறருக்கு நபியவர்கள் கூறியதாக அறிவிப்பது கூடாது என்பதனையே இந்த ஹதீஸ் எமக்குக் கூறுகின்றது. ஆனால் இந்த ஹதீஸுடன் எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு கருத்தை நிரூபிப்பதற்காக நூலாசிரியர் இந்த ஹதீஸைப் பயன்படுத்தியுள்ளார். இதனை “தஹ்ரீப்” (திரிபுபடுத்தல்) எனப்படும்.
ஸஹீஹான இந்த ஹதீஸ் கூறும் உண்மையான விடயத்தில் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இந்த ஹதீஸை முன்வைத்துவிட்டு, இந்த ஹதீஸின் பெயரால் இந்த ஹதீஸில் இல்லாத ஒன்றை நூலாசிரியர் நிலைநாட்ட முயற்சிப்பதைத்தான் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
'குர்ஆனுக்கும், நியாயமான உணர்வுகளுக்கும் மாற்றமாக தன் பெயரால் அறிவிக்கப்படும் செய்திகளை ஏற்றக்கொள்ளக்கூடாது என்று நபி (ஸல்) அவர்களே தெளிவுபடுத்தியுள்ளார்கள்." என்பதாக எழுதிவிட்டுத்தான் நூலாசிரியர் இந்த ஹதீஸை ஆதாரமாக முன்வைத்துள்ளார்.

நூலாசிரியர் ஆதாரமாக முன்வைத்த ஹதீஸின் தமிழாக்கமும் அவருடையதாகும். நூலாசிரியர் கூறியுள்ளதுபோன்று குர்ஆ னுக்கும், நியாயமான உணர்வுகளுக்கும் மாற்றமாமாகத் தன் பெயரால் அறிவிக்கப்படும் செய்திகளை ஏற்றுக் கொள்ளாதீர்கள் என அந்த ஹதீஸில் எங்காவது இருக்கின்றதா..? இல்லவே இல்லை. அப்படியானால் இது நபிமீது சொல்லப்படும் பொய்யாக இல்லாமல் வேறு என்ன .........?
நூலாசிரியர் ஆதாரமாக முன்வைத்த ஹதீஸில் அவர் கூறும் வாசகம் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் அந்த ஹதீஸ் அந்தப் பொருளையாவது குறிக்கின்றதா எனப் பார்த்தால் அதுகூட இல்லை. 
நபியவர்களைத் தொட்டும் கிடைக்கின்ற செய்தி அவர்களது செய்தி அல்ல என நாம் கண்டால் அதனை நபியவர்களின் செய்தியாகப் பிறருக்குக் கூறக்கூடாது என்பதைத்தானே அந்த ஹதீஸ் கூறுகிறது. இந்த உண்மையை ஹதீஸ்கலை அறிஞர் இமாம் நவவி உறுதிப்படுத்துவதைப் பாருங்கள் : -
இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸை அது இட்டுக்கட்டப்பட்டது என்பதை அறிந்து கொண்டவர், அல்லது அவரது எண்ணத்தின்படி அது இட்டுக்கட்டப்பட்டதாக இருக்கலாம் எனும் சிந்தனை மேலோங் கியவர் அதனை அறிவிப்பது ஹராமாகும். இட்டுக்கட்டப்பட்டது எனத் தெரிந்துகொண்டு அல்லது இட்டுக் கட்டப்பட்டதாக இருக்கலாம் என நினைத்தும் யார் ஒரு ஹதீஸை அதனது அறிவிப்பாளர்களின் நிலையையும், அது இட்டக்கட்டப்பட்டது என்பதனையும் தெளிவு படுத்தாமல் அறிவிக்கின்றாரோ அவர் இந்த எச்சரிக்கைக்குள் அடங்கு வார். ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்வோரின் வரிசையில் இடம்பெறுவார். “யார் என்னைத் தொட்டும் ஒரு ஹதீஸை அது பொய் என்பதை அறிந்துகொண்டே அறிவிக்கின்றானோ அவன் பொய்யர்களில் ஒருவன்” என முன்னால் வந்த ஹதீஸ் இதற்கு ஆதாரமாக அமைகின்றது. (ஷரஹ் முஸ்லிம்)
இட்டுக்கட்டப்பட்ட செய்தி என நாம் தெரிந்துகொண்டு அதனை ரஸூலுல்லாஹி  (ஸல்) அவர்கள் கூறியதாக நாம் பிறருக்குக் கூறினால் அப்போது நாம் பொய்யர்களில் ஒருவராகக் கணிக்கப்படுவோம். என்பதை இந்த ஹதீஸ் கூறுகின்றது. இது முற்றிலும் உண்மை என்பதை நல்ல சிந்தனை உள்ளவர்கள் விளங்கிக்கொள்ளலாம். ஆனால் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் மீது தெரிந்துகொண்டே பொய் சொல்வதை எச்சரிக்கும் இந்த ஹதீஸை ஸஹீஹான ஹதீஸ்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதற்கு நூலாசிரியர் ஆதாரமாக முன்வைத்துள்ளார். நூலாசிரியரின் செயல் ஆச்சரியத்தைத் தருகின்றது. இந்த அளவிற்கு அறியாமையில் இருக்கின்றாரா? என்றும் ஆச்சரியமாக இருக்கின்றது. அல்லது இவ்வளவு தெளிவான ஆதாரத்தைக்கூட மக்களை வழிகெடுப்பதற்காகப் பயன்படுத்த முயற்சிக்கின்றாரே? என்பதும் ஆச்சரியத்தைத் தருகின்றது.
“நபியவர்கள் கூறியது என ஹதீஸ் கலை அறிஞர்களால் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை மனிதர்களது குறுகிய சிந்த னையைப் பயன்படுத்தி அவை குர்ஆனுக்கும், சுய அறிவிற்கும் முரண்படுகின்றதா? என்பதனை ஆராய வேண்டும் என்பதனை நிரூபிப்பதற்கு மேற்படி ஹதீஸைப் பயன்படுத்துவது அப்பட்டமான திரிபுபடுத்தலாகும். அந்த ஹதீஸை உண்மைக்குப் புறம்பாக விளங்கி ஹதீஸ்கலை அறிஞர்களின் ஆழ்ந்த ஆராய்ச்சியின் பின்னர் உண்மையானவை என நிரூபிக்கப்பட்ட ஸஹீஹான ஹதீஸ்களை முஸ்லிம்கள் நிராகரிக்க வேண்டும் என்பதே நூலாசிரியரின் எதிர் பார்ப்பாகும். உண்மையில் இந்தக் கருத்திற்கும் நூலாசிரியர் ஆதாரமாக முன்வைத்த ஹதீஸிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
எனவே ஸஹீஹானது என உறுதிப்படுத்தப்பட்ட ஹதீஸ்களையும் சுய அறிவைக்கொண்டு  தரம்பிரிக்க வேண்டும் என்பதற்கு நூலாசிரியர் முன்வைத்த இரண்டு ஹதீஸ்களிலுமே ஆதாரம் இல்லாததனால் அவரது வாதமே தகர்ந்து விடுகின்றது. அதாவது அந்த நிராகரிப்புக் கொள்கை அடிப்படையின்றி சரிந்துவிடுகின்றது.




வழிகேடு

நபித்தோழர்கள் 
ஹதீஸ்களை மறுத்தார்களா?

 'குர்ஆனுக்கு முரண்பட்டால் அந்த ஹதீஸை நபியவர்கள் கூறியிருக்க மாட்டார்கள் என்பதால் அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது" என்று நாம் கூறுகின்றோம்.

    இப்படியொரு விதியை யாரும் கூறியதில்லை, அதனடிப்படையில் செயல்படவும் இல்லை" என எம்மை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள்.

   ஹதீஸைப் பாதுகாப்பதுபோல் காட்டிக் கொள்ளும் இவர்கள் ஹதீஸ் கலையை முறையாகப் படிக்காததே இந்த விபரீத விமர்சனத்திற்குக் காரணம். நாம் கூறும் இந்த விதியின் அடிப்படையில் நமக்கு முன்பே நபித்தோழர்கள்  செயல்பட்டுவந்ததைப் பின்வரும் செய்திகளின் மூலம் விளங்கிக்கொள்ளலாம்.


நேர்வழி!



ஹதீஸ் கலை விதிகளின் அடிப்படையில் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியது என நிரூபணமானவற்றில் ஒரு செய்திகூட குர்ஆனுக்கு முரணாக இல்லை என்பதே முஸ்லிம்களான எங்களது வாதமாகும். ஏனெனில் குர்ஆன் எப்படி வஹியாக உள்ளதோ அதேபோன்று ஹதீஸும் அல்லாஹ்விடமிருந்து இறங்கிய வஹியாகும். இந்த உண்மையை நூலாசிரியரும் ஏற்றுக் கொள்கின்றார். அல்லாஹ் விடமிருந்து வஹிமூலம் இறங்கிய ஹதீஸ்: வஹியின் மற்றொரு பகுதியாகிய அல்குர்ஆனுடன் எப்படி முரண்படும்? நூலாசிரியரும் அவரது முன்னோடியும் நேர்வழியில் இல்லாததன் காரணமாக ஸஹீஹான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுவதாக அவர்களுக்குத் தோன்றினால் அவற்றை எமது கவனத்திற்குக் கொண்டுவரும் பட்சத்தில் அல்லாஹ்வின் உதவியால் அவர்களுக்கு விளக்கம் இல்லாதவற்றை அவர்களுக்கு விளக்கப்படுத்தி, அவர்களுக்கு நேர்வழி காட்டுவதற்கு இன்ஷh அல்லாஹ் நாம் தயாராகவே உள்ளோம். 

ஸஹீஹான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு ஒரு போதும் முரண்பட மாட்டாது என்பதுதான் முஸ்லிம்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. நபியவர்கள் கூறியதுதான் என நிரூபிக்கப்பபட்டதன் பின்னரும் அவ்வாறு நிரூபிக்கப்பட்ட சில ஹதீஸ்களை அவை குர்ஆனுக்கு முரண்படுகின்றன என நூலாசிரியர் தானாகவே முடிவு செய்கின்றார். அவருக்கு அல்லது அவரது முன்னோடியான பி. ஜைனுல் ஆபிதீ னுக்கு குறிப்பிட்டதொரு ஸஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரணாகத் தோன்றினால் உடனே அந்த ஹதீஸ் அல்குர்ஆனுக்கு முரணானது என அவர்களது குறுகிய அறிவைக் கொண்டு முத்திரை குத்தி விடுகின்றனர். அவர்கள் அல்குர்ஆனுக்கு முரண்படுவதாகச் சுட்டிக் காட்டும் அந்த ஹதீஸ்களை ஏனைய குர்ஆன் வசனங்களினதும், ஹதீஸ்களினதும் ஒளியில் பார்க்கும்போது அவை அல்குர்ஆனுடன் மிக நேர்த்தியாக உடன்படுவதை நாம் அறிந்துகொள்ளலாம்.

ஸஹீஹான ஹதீஸ்களை மறுக்கும் இவர்களிடம் அதனை உண்மைப்படுத்தும் எந்தவொரு ஆதாரமும் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லை என்பதை நாம் முன்னால் தெளிவாக நிரூபித்து விட்டோம். 


ஸஹீஹான இரண்டு ஹதீஸ்களைத் திரிபுபடுத்தித் தங்களது கொள்கையை உண்மைப்படுத்த முயன்ற நூலாசிரியர் அடுத்த படியாக நபித்தோழர்கள் இந்த விபரீதமான செயலைச் செய்துள்ளனர் என நிரூபிக்க முயன்றுள்ளார். அதற்கும் அவர்களிடம் ஆதாரம் இல்லையாதலால் “ஸஹாபாக்கள் குர்ஆனுக்கு முரணான ஸஹீ ஹான ஹதீஸ்களை அறிவைக்கொண்டு மறுத்தார்கள்” என இவர்களாகவே கற்பனை செய்துகொண்டு, அதனை ஸஹாபாக்கள் மீது திணித்துள்ளார்கள். இது அவர்கள் தப்பர்த்தம் கொள்பவர்கள் என்பதற்கு அவர்களே தந்துள்ள தெளிவான இரண்டாவது சான்று ஆகும். நூலாசிரியர் தனது கொள்கையை நிரூபிக்க இரண்டு ஹதீஸ்களை முன்வைத்திருப்பதாக ஏமாற்ற முயன்றால் அவர்முன்வைத்த இரண்டு ஹதீஸ்களிலும் ஸஹீஹான ஹதீஸ்கள் அல்குர்ஆனுடன் முரண்படும் எனக்கூறப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டுமாறு நூலாசிரியரை நோக்கி நாம் சவால் விடுத்துள்ளோம்.


வழிகேடு



   உமர் (ரழி) அவர்கள் கடைபிடித்த வழிமுறை


அபூ இஸ்ஹாக் அவர்கள் கூறியதாவது:
நான் அஸ்வத் பின் யஸீத் அவர்களுடன் பெரிய பள்ளிவாசலில் அமதர்ந்திருந்தேன். எங்களுடன் ஷஅபீ அவர்களும் இருந்தார்கள். அப்போது ஃபாதிமா தின்த் கைஸ் (ரலி) அவர்கள் தொடர்பான ஹதீஸை ஷஅபீ அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபாதிமா பின்த் கைஸ் (ரலி) அவர்களுக்கு உறைவிடமும் இல்லை: ஜீவனாம்சமும் இல்லை என அறிவித்தார்கள்.” (என்பதுதான் அந்த ஹதீஸ். அங்கிருந்த) அஸ்வத் (ரலி)  அவர்கள் ஒரு கையளவு சிறுகற்களை அள்ளி அவர்மீது எறிந்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: உமக்குக் கேடுதான். இதுபோன்ற செய்திகளை அறிவிக்கின்றீர்களே? உமர் (ரலி) அவர்கள், “ஒரு பெண்ணின் சொல்லுக்காக நாம் அல்லாஹ்வின் வேதத்தையும், நபியின் வழிமுறையையும் கைவிட மாட்டோம். ஃபாதிமா பின்த் கைஸ் (உண்மையிலேயே) நினைவில் வைத்துள்ளாரா? அல்லது மறந்து விட்டாரா என்று நமக்குத் தெரியவில்லை. மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு உறைவிடமும், ஜீவனாம்சமும் உண்டு. வலிவும், மாண்பும் உடைய அல்லாஹ் பகிரங்கமான வெட்கக் கேடான செயலை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள் (65:1) என்று கூறியுள்ளான்.” என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூ இஸ்ஹாக் (ரஹ்)
 நூல்: முஸ்லிம் (2963)

ஃபாதிமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் தம் கணவனால் தலாக் விடப்பட்டபோது அவர்களுக்கு ஜீவனாம்சம் மற்றும் இருப்பிட வசதியை ஏற்படுத்தித் தருவது கணவருக்குக் கடமையில்லை என்று நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கூறியதாக சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஃபாதிமா (ரலி) அவர்களே குறிப்பிடுகிறார்கள்.

ஆனால் தலாக் விடப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் மற்றும் இருப்பிட வசதியைக் கணவன் ஏற்படுத்தித் தரவேண்டும் என்று குர்ஆனில் உள்ளது.: எனவே குர்ஆனுக்கு மாற்றமாக நபி (ஸல்) கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் உமர் (ரலி) அவர்கள் ஃபாதிமா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை மறுக்கிறார்கள். 


நேர்வழி!


உமர் (ரலி) அவர்களுக்கு சுவனத்தில் கோட்டை கட்டப் பட்டுள்ளதாக நபியவர்களால் நன்மாராயம் கூறப்பட்டுள்ளது. அந்த உத்தம நபித்தோழர் அல்லாஹ்வின் வேதமாகிய அல்குர்ஆனும் ஹதீஸும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மிகவும் அக்கறை காட்டினார்கள். அவர்களது இந்த அக்கறையை நூலாசிரியர் ஹதீஸ்களை மறுப்பதற்கு ஆதாரமாக முன்வைப்பது: நூலாசிரிய ரினதும் அவரது வழிகாட்டியினதும் உண்மைகளைத் திரிபுபடுத்தும் செயலுக்கு ஓர் தெளிவான உதாரணமாகும்.

நூலாசிரியர் எடுத்துக்காட்டியிருக்கும் சம்பவத்தில் அவர் கூறும் வழிகேட்டுக்கு எந்தவிதத்திலும் ஆதாரம் இல்லை. மாறாக அவர்களது கொள்கை வழிகேடானது என்பதுதான் அந்தச் சம்பவத்தின் மூலமும் நிரூபணமாகின்றது.

“குர்ஆனுக்கு மாற்றமாக நபி (ஸல்) கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் உமர் (ரலி) அவர்கள் ஃபாதிமா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை மறுக்கிறார்கள்.” என நூலாசிரியர் எழுதியுள்ளது அவரது வலிந்துரையாகும். அதில் எந்த உண்மையும் இல்லை. இதனை நீங்களும் அவர் குறிப்பிட்டுள்ள அந்த சம்பவத்தை மீண்டும் ஒருமுறை கவனமாக வாசித்து அறிந்துகொள்ளமுடியும். “ஒரு பெண்ணின் சொல்லுக்காக நாம் அல்லாஹ்வின் வேதத்தையும், நபியின் வழிமுறையையும் கைவிட மாட்டோம். பாதிமா பின்த் கைஸ் (உண்மையிலேயே) நினைவில் வைத்துள்ளாரா? அல்லது மறந்து விட்டாரா என்று நமக்குத் தெரியவில்லை.” என்றுதான் உமர் (ரலி) கூறினார்கள்.  அல்குர்ஆனுக்கு மாற்றமாக இது உள்ளதாக அவர்கள் எப்போது கூறினார்கள்...........? 

பொதுவாக உமர்  (ரலி) தமக்குத் தெரியாத ஹதீஸ்களைப் பிறர் மூலம் செவிமடுக்கும்போது அதனை மற்றுமொருவரைக் கொண்டு உறுதிப்படுத்திக் கொள்வது அவர்களின் வழிமுறையாகும். அதற்கு நியாயமான ஒரு காரணமும் இருந்தது. அதாவது உமர் (ரலி) அவர்கள் எந்தவொரு ஹதீஸும் தனக்குத் தவறிவிடக்கூடாது என்பதற்காக மற்றொரு நபித்தோழருடன் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். அதாவது ஒருவர் மாறி ஒருவர் எப்போதும் ரஸூலுல்லாஹி (ஸல்)அவர்களுடன் இருந்து, அவர்கள் கூறக்கூடிய ஹதீஸ்களைக் கற்றுக்கொண்டு மற்றவருக்கு அறிவிக்க வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தமாகும். அவ்வளவு கவனமாக இருந்தும் தனது அறிவுக்கு எட்டாத ஹதீஸை செவிமடுக்கும்போது அதற்கு மேலும் ஒரு சான்றைத் தேடுவது முற்றிலும் நியாயமானதே. இதனை நியாயமாக சிந்திக்கும் உள் ளங்கள் ஒருபோதும் மறுக்க மாட்டாது. ஹதீஸ்களை ஏற்றுக் கொள்வதில் உமர் (ரலி) அவர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொண் டதற்கு மேலும் ஒரு உதாரணத்தை நாம் தருகின்றோம்.

உபைத் பின் உமைர் (ரலி) கூறுகின்றார்கள்:-
(ஒருமுறை) அபூ மூஸா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் (வீட்டினுள் நுழைவதற்கு) மூன்று விடுத்தம் அனுமதி கேட்டார்கள். (உமர்வ) வேலையில் ஈடுபட்டிருந்தார்கள் போலும். (அனுமதி கொடுக்கப்படவில்லை.) எனவே (அபூ மூஸா (ரலி)) திரும்பிவிட்டார்கள். பின்னர் உமர் (ரலி) “அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) அவர்களின் ஓசை கேட்டதல்லவா? அவருக்கு வருவதற்கு அனுமதி அளியுங்கள்!” எனக் கூறினார்கள். (உமர் (ரலி)) அவர்களுக்காக (அபூ மூஸா (ரலி) ) அழைத்து வரப்பபட்டு “நீர் செய்ததை செய்யும்படி உம்மைத் தூண்டியது எது?” எனக்கேட்டார்கள். “அதனைக்கொண்டு நாம் ஏவப்பட்டுக்கொண்டிருந்தோம்.” எனக் கூறினார்கள். “இதற்கு ஒரு அத்தாட்சியை (நீர்) கட்டாயம் கொண்டுவரவேண்டும். அல்லது நிச்சயமாக (நான் உமக்கு நல்ல வேலை) செய்வேன்.” எனக் கூறினார்கள். உடனே (அபூ மூஸா (ரலி) ) வெளியேறி மதீனாவாசிகளின் சபைக்கு வந்(து நடந்ததைக் கூறினா)ர்கள். “நம்மில் மிகவும் சிறியவரைத் தவிர மற்றெவரும் இதற்காக உமக்கு சாட்சி கூறப் போவதில்லை.” எனக்கூறி (அபூ ஸஈத் (ரலி)அவர்களை அனுப்பி வைத்தா)ர்கள். அபூ ஸஈத் (ரலி) எழுந்து நின்று “இதனைக் கொண்டு நாம் ஏவப்பட்டுக்கொண்டிருந்தோம்.” எனக் கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் “(ரஸூலுழ்ழாஹி (ஸல்) ) அவர்களின் கட்டளைகளில் நின்றும் இது எனக்குத் தெரியாது போய்விட்டதே! சந்தைகளில் வியாபாரம் செய்வது அதனை விட்டும் என்னைப் பராமுகமாக்கி விட்டது.” எனக் கூறினார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் கி. ஆதாப் 7 ம் தலைப்பு)

பாதிமா பின்த் கைஸ் (ரலி) அவர்களின் ஹதீஸை உமர்  (ரலி)  ஏற்பதற்கு ஏன் தயங்கினார்கள் என்பதை இந்த சம்பவம் எங்களுக்குத் தெளிவாக உணர்த்துகின்றது. எந்தவொரு ஹதீஸும் தவறிவிடக் கூடாது என்பதற்காக ஒருவர் மாறி ஒருவராக நபியவர்களுடன் ஒன்றாக இருந்து ஹதீஸ்களைக் கற்றுக்கொண்ட உமர்  (ரலி) அவர்கள் வித்தியாசமான ஒரு ஹதீஸைக் கேள்விப்படும்போது: அதனை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு மற்றொரு சாட்சியைக் கொண்டு வரும்படி கேட்டுள்ளார்கள். இதே அடிப்படையில் பாதிமா பின்த் கைஸ்  (ரலி) அறிவித்த செய்தியில் சந்தேகம் கொண்டார்கள்.

    நூலாசிரியரது பார்வையில் ஒரு வீட்டிற்குச் சென்று மூன்று முறை அனுமதி கேட்டும் அனுமதி கிடைக்காவிட்டால் திரும்பிச் செல்ல வேண்டும் எனும் ஹதீஸ் குர்ஆனுக்கு முரணானதல்ல. அப்படியானால் அந்த ஹதீஸைக் கூறிய நபித்தோழர் மற்றொரு சாட்சியைக் கொண்டுவராவிட்டால்  அவவரைத் தண்டிக்கப்போவததாக உமர்  (ரலி) ஏன் கூறினார்கள்...................?

பாதிமா பின்த் கைஸ்  (ரலி) அவர்களது ஹதீஸை உமர்  (ரலி) அவர்கள் நிராகரித்ததற்கான காரணம் அதனைக் கூறும் பெண் ஒருவேளை மறந்துவிட்டுத் தவறுதலாகக் கூறுகின்றாளோ எனும் சந்தேகமேயாகும். இதனை “பாதிமா பின்த் கைஸ் (உண்மை யிலேயே) நினைவில் வைத்துள்ளாரா? அல்லது மறந்துவிட்டாரா என்று நமக்குத் தெரியவில்லை.” என உமர்  (ரலி) நேரடியாகவே கூறியுள்ளார்கள். உண்மை அப்படி இருக்கும்போது அதற்கு மாற்றமான காரணத்தைக் கூறும் உரிமை நூலாசிரியருக்கு எங்கிருந்து கிடைத்தது.....? 

ஒரு ஹதீஸ் ஸஹீஹானதா என்பதில் சந்தேகம் தோன்றியுள்ளபோது அந்த ஹதீஸின் சந்தேகத்தை உறுதியாக வெளிப்படுத்துவதற்கு அது குர்ஆன் அல்லது ஸஹீஹான ஹதீஸிற்கு முரண்படுமானால் அதனை மேலதிகக் காரணமாகக் கூறுவது இஸ்லாத்தில் உள்ள வழிமுறையாகும். அந்த அடிப்படையில்தான் உமர் (ரலி) இங்கு செயல்பட்டுள்ளார்கள். இரண்டு சாட்சிகளைக் கொண்டுவந்தால் இந்த அறிவிப்பை ஏற்பதாக உமர் (ரலி) கூறிய செய்தி நாம் கூறும் உண்மைக்குத் தெளிவான சான்றாகும். 

நூலாசிரியர் கூறும் காரணம் உண்மை என ஒரு வாதத் திற்காக ஏற்றுக்கொண்டால்கூட அதிலும் நூலாசிரியர் தனது வழிகெட்ட கொள்கையை நிரூபிப்பதற்காக ஒரு மோசடி செய்துள்ளார். அதாவது பாதிமா பின்த் கைஸ் (ரலி) அவர்களது அறிவிப்பில் உமர் (ரலி) சந்தேகம் கொள்வதற்குக் காரணம் அந்த அறிவிப்பு குர்ஆனுக்கு முரண் என்பதை மட்டும் அவர்கள் கூறவில்லை. குர்ஆனுக்கும் நபியின் ஸுன்னாவுக்கும் முரணாக உள்ளது என்றுதான் காரணம் கூறினார்கள். நூலாசிரியரின் இந்த மோசடியைத் தெளிவாக விளங்கிக் கொள்வதற்கு அவர் எழுதியுள்ளதை மீண்டும் ஒருமுறை கவனமாக வாசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

நூலாசிரியர் ஆதாரமாக முன்வைத்த பாதிமா பின்த் கைஸ் (ரலி) அவர்களின் ஹதீஸை உமர் (ரலி)  ஏற்க மறுத்த சம்பவத்தில் அதற்கான மேலதிக காரணமாக அல்லாஹ்வின் வேதத்துடன் நபியின் வழிமுறைக்கு மாற்றம் என்பதும் காணப்படுகின்றது. அவ்வாறு தெளிவாகக் கூறப்பட்டுள்ள இரண்டு விடயங்களில் நபியின் வழிமுறை என்பதை மறைத்துவிட்டு அல்லாஹ்வின் வேதம் என்பதை மட்டும் நூலாசிரியர் எடுத்துக் காட்டுகின்றார். இதன் மூலம் அவரது வழிகெட்ட கொள்கையில்தான் உமர் (ரலி) இருந்தார்கள் எனக்காட்ட முயற்சித்துள்ளார். இது நூலாசிரியரின் வழிகேட்டை அம்பலப்படுத்தும் மற்றுமொரு மோசடியாகும். 

உண்மையில் நூலாசிரியர் போன்றவர்கள் தமது வழிகேட்டை நிரூபித்திட ஏன் இவ்வாறெல்லாம் மோசடி செய்கின்றார்கள் என்றதொரு சந்தேகம் வாசகர்களின் நெஞ்சங்களில் சிலவேளை தோன்றலாம். அல்லாஹ் அதற்ற்கான பதிலைக் கூறியுள்ளான்:-

....நிராகரிப்பாளர்கள் சத்தியத்தை அழித்துவிடக் கருதி அசத்தியத்தைக் கொண்டு விவாதிக்கின்றார்கள்...                                   ( 1 8 : 5 6 ) 

ஒரு ஹதீஸ் ஸஹீஹானது என நிரூபணமானதன் பின்னர்: அந்த ஹதீஸை மனிதனது அறிவைக் கொண்டு “அது குர்ஆனுக்கு முரண்படுகின்றது” எனக்கூறி மறுக்கின்ற ஒரு வழிமுறை ஹதீஸ் கலையில் கிடையாது. அப்படி இருக்குமானால் அதனைக் குறிக்கவென ஒரு தனிப்பெயர் ஹதீஸ் கலையில் கட்டாயம் இருக்க வேண்டும். ஏனெனில் மறுக்கப்படுகின்ற ஒவ்வொரு வகையான ஹதீஸிற்கும் ஒவ்வொரு பெயர் ஹதீஸ் கலையில் உள்ளது. அதேநேரம் உறுதியானவர்கள் பலர் அவிக்கும் நம்பகமான ஹதீஸுக்கு முரணாகத் தனியொருவர் ஒரு ஹதீஸை அறிவித்தால் அதனை ஏற்கக்கூடாது என ஒரு விதி ஹதீஸ் கலையில் உள்ளது. நம்பகமான பலருக்கு மாற்றமாக அறிவிக்கும் தனிநபர் நம்பகமானவராக இருந்தாலும் அவர் பல நம்பகமானவர்களுக்கு மாற்றமாக அறிவிப்பதே அவர் மனிதன் என்ற அடிப்படையில் மறந்துள்ளார் என்பதை உறுதிசெய்கின்றது. எனவேதான் அது மறுக்கப்படுகின்றது. இவ்வகையான அறிவிப்புகளுக்கு “ஷாத்” என ஒரு தனிப்பெயர் ஹதீஸ் கலையில் உள்ளது.

எனவே ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படும் செய்தி அவர்கள் கூறியதுதான் என நம்பகமான வழிகளில் உறுதியாகிவிட்டால் அதனை சுய அறிவைக்கொண்டு மறுப்பது தெளிவான வழிகேடேயாகும்.  


எமது கேள்வி?


        ஸஹீஹானது என நிரூபணமான பின்பு : மனிதனது அறிவைக் கொண்டு குர்ஆனுக்கு முரண்படுகின்றது எனக் கூறி ஹதீஸை மறுக்க முடியுமானால்,

குர்ஆனுக்கு முரண்படும் அந்த ஸஹீஹான ஹதீஸ்களைக் குறிப்பதற்கு ஹதீஸ் கலையில் கூறும் பெயர் என்ன...? அதற்கான ஆதாரம் என்ன......................?



உமர் (ரழி) அவர்கள் கடைபிடித்த வழிமுறை

நேர்வழி (தொடர்ச்சி..)



பாதிமா பின்த் கைஸ் (ரலி) அவர்களின் சம்பவத்தை வைத்து உமர்  (ரலி)  அவர்கள் அல்குர்ஆனுக்கு முரணான ஹதீஸை மறுத்தார்கள் என நிரூபிக்க முயலும் நூலாசிரியர் உமர்  (ரலி)  அவர்கள் மீது ஒரு அபாண்டத்தையே சுமத்துகின்றார். ஏனெனில் பாதிமா பின்த் கைஸ்  (ரலி)  அவர்களின் ஹதீஸை உமர்  (ரலி)  அவர்கள் ஏற்க மறுத்ததற்கான காரணத்தை அவர்களே கூறியிருக்கும் போது அதற்கு முரணான ஒரு காரணத்தை நூலாசிரியர் கூறுகின்றார். ஒரு செயலைச் செய்பவர் அதற்கான காரணத்தைக் கூறியிருக்க, அதற்கு மாற்றமாக அவரது செயலுக்கு வேறு ஒரு காரணத்தை அவரோடு சம்பந்தமே இல்லாத ஒருவர் கூறுவதை அறிவுள்ள எவனாவது ஏற்றுக் கொள்வானா..........? உமர்   (ரலி)  செய்த செயலுக்கு அவர்களே கூறியுள்ள காரணத்திற்கு முரணாக அவர்கள் மரணித்து ஆயிரத்து நானூறு ஆண்டுகள் கடந்ததன் பின்னர் வந்துள்ள நூலாசிரியர் கூறும் காரணத்தை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு மடையர்களாக முஸ்லிம்கள் எவரும் இருக்கமாட்டார்கள்.


பாதிமா பின்த் கைஸ்  (ரலி)  அவர்களின் சம்பவத்தில் “ஒரு பெண்ணின் சொல்லுக்காக நாம் அல்லாஹ்வின் வேதத்தையும், நபியின் வழிமுறையையும் கைவிட மாட்டோம்.” என்பதாகவே உமர்  (ரலி)  கூறுகின்றார்கள். எனவே இந்த ஹதீஸிலே உமர்  (ரலி) அவர்களின் சந்தேகம் வலுப்படக் காரணம் ஏற்கனவே உமர்   (ரலி) தெரிந்துவைத்துள்ள குர்ஆன் வசனங்களுக்கும்,ஸஹீஹான ஹதீஸ்களுக்கும் முரணானாகத் தோன்றும் ஹதீஸை ஒரு பெண் தணித்துநின்று கூறுவதேயாகும். இந்த உண்மையை எடுத்துக் கூறும் ஆதாரம் இதே சம்பவத்தின்போது உமர்   (ரலி)  கூறியதாக வேறு ஒரு இடத்தில் பதவாகியுள்ள வாசகமாகும்.

          உமர்  (ரலி)  கூறியதாவது:-

   இதனை ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடமிருந்து தாம் கேட்டதாக சான்றுபகரும் இரண்டு சாட்சிகளைக் கொண்டுவந்தால் (சரி.) இல்லையெனில் ஒரு பெண்ணின் கூற்றுக்காக அல்லாஹ்வின் வேதத்தைக் கைவிட மாட்டோம். (நஸாஈ கி. தலாக் - ஸஹீஹ் )

ஸஹீஹான ஹதீஸ்களை சுய அறிவைக்கொண்டு மறுப்பதற்கு மக்களை அழைக்கும் நூலாசிரியரின் கூற்றில் அணுவளவாவது உண்மை உள்ளதா? என்பதை இப்போது நீங்கள் முடிவுசெய்துகொள்ளலாம். உமர் (ரலி) அவர்களின் செயலுக்கு நூலாசிரியர் கற்பிக்கும் காரணம் அவரது சுய இலாபத்தினை அடிப்படையாகக் கொண்டது என்பது புரிகின்றதல்லவா.....?

இஸ்லாமியக் கண்னோட்டத்தில் உமர் (ரலி) , பாதிமா பின்த் கைஸ் (ரலி) ஆகிய இருவரும் அல்லாஹ்வினால்  பொருந்திக் கொள்ளப்பட்டவர்கள் ஆவார்கள். பாதிமா பின்த் கைஸ் (ரலி) அறிவிக்கும் ஹதீஸிலே மறதிகள் ஏற்பட்டிருக்கலாம் என உமர் (ரலி) சந்தேகிக்கின்றார்கள். ஆனால் அதில் தான் மறக்கவில்லை என்பது நபித்தோழியான பாதிமா பின்த் கைஸ் (ரலி) அவர்களின் நிலைப்பாடாகும். அல்லாஹ் இறக்கிவைத்துள்ள குர்ஆனையும், ஸஹீஹான ஹதீஸ்களையும் பின்பற்றும்படியே நாம் ஏவப்பட்டுள்ளோம். எனவே இந்த இருவரிலும் யார் சொல்வது குர்ஆன் அல்லது ஸஹீஹான ஹதீஸினை ஆதாரமாகக் கொண்டது என ஆய்வு செய்து ஆதாரபூர்வமானதைப் பின்பற்றுவதே எமது கடமையாகும். 

அபூ ஸலமா (ரலி) , பாதிமா பின்த் கைஸைத் தொட்டும் அறிவிக்கிறார்:-
அவரை அவரது கணவர் நபியின் காலத்தில் (மூன்றாவது) தலாக் சொல்லிவிட்டார். (அதன் பின்னர்) அவருக்காக தேவையை விடக் குறைவாகவே (கணவர்) செலவு செய்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்ததும்  “அல்லாஹ் மீது சத்தியமாக ரஸூலுல்லாஹி (ரலி) அவர்களுக்கு நிச்சயமாக (நான்) அறிவிப்பேன். (கணவர்) எனக்காகச் செலவுசெய்ய வேண்டும் என்றிருந்தால் எனக்குப் போது மானதை எடுப்பேன். எனக்காக செலவு செய்வது அவசியம் இல்லாவிட்டால் அவரிடமிருந்து எதனையுமே எடுக்க மாட்டேன் என்றார். (தொடர்ந்து அவர்) கூறியதாவது: அதனை ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அதற்கு “உனக்கு செலவுத் தொகையும் கிடையாது, தங்குமிடமும் கிடையாது” எனக் கூறினார்கள்.         (ஸஹீஹ் முஸ்லிம் கி. தலாக் 06)

இது பாதிமா பின்த் கைஸ் (ரலி) அறிவிக்கும் ஸஹீஹான ஹதீஸாகும். இது பாதிமா பின்த் கைஸ்  (ரலி)  அவர்களது சொந்தக் கூற்றல்ல. இந்த ஹதீஸிலே மறதிகள் ஏற்பட்டிருக்கும் என உமர்  (ரலி)  சந்தேகம் கொள்வதற்கு எவ்வித அவசியமும் கிடையாது. ஏனெனில் பாதிமா பின்த் கைஸ்  (ரலி)  ஞாபக சக்தி குறைவான பெண்ணாக இருக்கவில்லை. தவறான செய்திகள் ஹதீஸ்களுடன் கலந்துவிடக் கூடாது என்பதில் உமர்  (ரலி)  காட்டிய கண்டிப்பு  நல்ல விடயமாக இருந்தாலும் சில இடங்களில் உமர்  (ரலி)  அவர்களின் அந்தக் கண்டிப்பு ஸஹீஹான ஹதீஸ்களை விட்டும் அவர்களைத் தூரமாக்கி விட்டது. அத்தகைய சந்தர்ப்பங்களில் ஒன்றுதான் பாதிமா பின்த் கைஸ்  (ரலி)  அவர்களின் இந்த ஹதீஸில் கொண்ட சந்தேகமாகும். உமர்  (ரலி)  அவர்களது இந்த வரம்பு மீரிய எச்சரிக்கை பற்றி இமாம் இப்னுல் கையிம் தமது 'ஸாதுல் மஆத்' எனும் நூலில் மிக அழகாககவும், விரிவாகவும் ஆதாரங்களுடன் பின்வறுமாறு தெளிவுபடுத்துகின்றார்-

   அறிவிப்பாளர் பெண் எனக்கூறி 
       முன்வைக்கப்படும் குற்றச்சாட்டிற்கான மறுப்பு!

(இந்த ஹதீஸில்) முதலாவது விமர்சனம் அறிவிப்பாளர் பெண்ணாக இருக்கின்றார் என்பதாகும். (அது) சந்தேகமின்றி அர்த்தமற்ற விமர்சனம். அறிஞர்கள் அனைவருமே அதற்கு மாற்றமாகவே உள்ளனர். அறிஞர்களைப் பின்பற்றக்கூடியவர்கள் இதனை ஆதாரமாகக் கொள்வதே இதனை அனைத்திற்கும் முதலாக அர்த்தமற்றதாகவும், இதற்கு எதிரானதாகவும் ஆக்கிவிடுகின்றது. ஏனெனில் ஆண்களிடமிருந்து பெறப்படுவது போன்று பெண்களிடம் இருந்தும் ஸுன்னாக்கள் நிச்சயமாகப் பெறப்படும் என்பதில் அவர்கள்  கருத்துவேறுபாடு கொள்வதில்லை. நபித் தோழியர்களினின்றும் ஒரு பெண்ணிடமிருந்து பெறப்பட்ட எத்தனையோ ஸுன்னாக்களை அறிஞர்கள் அங்கீகரித்துள்ளனர். இதோ! நபித் தோழியர்களில் உள்ள பெண்களின் ஹதீஸ்கள் தொகுக்கப்பட்ட நூல்கள் மக்களின் கரங்களிலே இருக்கின்றன. அவர்களினின்றும் ஒரு பெண் தனித்து அறிவித்த ஒரு ஸுன்னாவைப் பார்க்க நீ நாடினால் அதனை நீ கண்டுகொள்ள முடியும். அகிலத்தாரில் உள்ள பெண்களில் இல்லாத பாதிமா பின்த் கைஸின் குற்றம்தான் என்ன.....? கணவன் மரணித்து விட்ட பெண் தனது கணவனின் வீட்டிலே இத்தா இருப்பது சம்பந்தமான புரைஆ பின்த் மாலிக் (ரலி) வின் ஹதீஸை மக்கள் ஏற்றிருக்கின்றார்கள். அவரைவிட பாதிமா பின்த் கைஸ் (ரலி) அறிவிலோ, மேன்மையிலோ, நம்பகத்திலோ, அமானிதத்திலோ குறைந்தவராக இல்லை. மாறாக சந்தேகமின்றி அவரைவிட இவர் அதிக விளக்கசாலியாவார். ஏனெனில் இந்த ஹதீஸைக் கொண்டே அன்றி புரைஆவை யாரும் அறிய மாட்டார்கள். பாதிமாவின் பிரபல்யமும், நபித்தோழர்களில் அவருடன் வாதிப்பவர்களை அவர் அல்லாஹ்வின் வேதத்தின்பால் அழைப்பதும், அதற்காக அவர் விவாதிப்பதும் யாவரும் அறிந்த விடயமாகும். இத்தகைய வாதாட்டத்தின் மூலம் இவருக்கு மாற்றம் செய்தவர்களில் அஸ்அத் என்பவரும் அடங்குவார். நபித்தோழர்கள் ஏதேனும் ஒரு விடயத்தில் கருத்துவேறுபாடு கொள்வார்கள். அப்போது நபியின் மனைவியர்களில் ஒருவர் நபியைத் தொட்டும் ஏதேனும் ஒன்றை அறிவிப்பார்கள்.  உடனே அதனை எடுத்துக்கொள்வார்கள், அதன்பால் திரும்பி விடுவார்கள், அதற்காகத் தங்களிடம் உள்ளதை விட்டுவிடுவார்கள். அவர்கள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் மனைவிமார்களாக இருக்கின்றார்கள் என்பதனால்தான் பாதிமா பின்த் கைஸைவிடச் சிறப்புப் பெற்றுள்ளனர். இல்லைனெ்றால் இவர் ஆரம்பத்தில் ஹிஜ்ரத் செய்தவர்களில் உள்ளவராவார். ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களும் இவரைத் தங்களது அன்புக்குரியவரான, அன்புக்குரியவரின் மகனான உஸாமா பின் ஸைதுக்கு (மனைவியாகுவதை) விரும்பினார்கள். (ரஸூலுல்லாஹி (ஸல்) ) அவர்கள்தான் அவரை அவருக்குப் பெண் கேட்டார்கள்.

இவரது நினைவாற்றலினதும், அறிவினதும் அளவை நீ தெரிந்து கொள்ள நாடினால் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மிம்பரின் மீதிருந்து கூறிய மிகவும் நீளமான தஜ்ஜாலின் ஹதீஸைக்கொண்டு அதனை அறிந்து கொள்வாயாக!  அதனை பாதிமா பாதுகாத்துப் பாடமாக்கி, செவிமடுத்தது போன்றே அறிவித்துமுள்ளார். அது நீளமானதாகவும், வித்தியாசமானதாக இருந்தும் அதனை இவர் கூறும்போது எவரும் ஆட்சேபிக்கவில்லை. அப்படியானால் அவருக்கு நடந்த, அவர் காரணமாக இருந்த, அதிலே அவர் வாதித்த, “உனக்கு செலவுத் தொகையும் கிடையாது, தங்குமிடமும் கிடையாது” என இரண்டு வார்த்தைகளில் தீர்ப்பு வழங்கப்பட்ட சம்பவத்தை (எந்த அளவு ஞாபகம் வைத்திருப்பார்.) இதுபோன்றவற்றைப் பாதுகாத்து அதனை நினைவுபடுத்துவது என்பது வழமையில் உள்ளதாகும். இதிலே மறந்துவிடுதல் என்பது இவருக்கும், இவர் கூறியதை மறுப்பவருக்கும் பொதுவான ஒரு விடயமாகும். இதோ! உமர் (ரலி) அவர்கள் குளிப்புக் கடமையானவர் (நீர் கிடைக்கா விட்டால்) தயம்மும் செய்யலாம் என்பதை மறந்து விட்டார்கள். கடமையான குளிப்பிற்காக தயம்மும் செய்துகொள்ளுமாறு அவர்கள் இருவருக்கும் ரஸூலுல்லாஹி (ஸல்) கட்டளை இட்டதை அவர்களுக்கு அம்மார் (ரலி)  நினைவூட்டினார்கள். உமர் (ரலி)  அதனை நினைவில் வைத்திருக்கவில்லை. குளிப்புக் கடமையானவர் தண்ணீர் கிடைக்கும்வரை தொழக்கூடாது என்பதிலேயே நிலைத்திருந்தார்கள். “ஒரு மனைவியின் இடத்திற்கு மற்றொரு மனைவியை மாற்றுவதற்கு (நீங்கள்) நாடினால் அவர்களில் எவருக்கேனும் (பொற்)குவியலை (மஹராகக்) கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதனையும் (திருப்பி) எடுக்காதீர்கள்.” (04 : 20) எனும் அல்குர்ஆன் வசனத்தையும் மறந்துவிட்டார்கள். அதனை அவர்களுக்கு ஒரு பெண்தான் நினைவுபடுத்தினார். உடனே அந்தப் பெண் கூறியதை ஏற்றுக்கொண்டார்கள். “நிச்சயமாக நீரும் மரணிப்பவரே! நிச்சயமாக அவர்களும் மரணிப்போரே!” (39 : 30) எனும் அல்லாஹ்வின் கூற்றை மறந்துவிட்டார்கள். பின்னர் அது அவர்களுக்கு ஞாபகப் படுத்தப் பட்டது. அறிவிப்பாளருக்கு ஞாபக மறதி ஏற்பட முடியும் என்பது அவரது அறிவிப்பை ஆதாரமற்றதாக ஆக்கி விடுமானால் பாதிமா பின்த் கைஸ் (ரலி) அவர்களின் ஹதீஸை மறுப்பதற்காகப் பயன்படுத்தும் உமர் (ரலி)அவர்களின் அறிவிப்பும் ஆதாரமற்றதாகிவிடும். அவ்வாறு இல்லையென்றால் அதனைக்கொண்டு மறுப்பது அர்த்தமற்றதாக ஆகிவிடும். எனவே அது இரண்டு நிலைகளிலும் அத்த்தமற்றதாகவே இருக்கின்றது. இவைபோன்றவற்றைக்கொண்டு ஸுன்னாக்கள் மறுக்கப்பட்டால் அவற்றில் ஒரு சிறிதளவைத் தவிர சமூகத்தின் கையில் எதுவுமே மீதம் இருக்காது. ஹதீஸை அறிவிப்பதற்குப் பலர் அவசியம் இல்லை. நீதமான ஒரு அறிவிப்பாளரது அறிவிப் பையும் ஏற்க வேண்டும் எனக் கருதுபவர்கள்  இதுபோன்றவற்றைக் கொண்டு பாதிமா (ரலி) அவர்களின் ஹதீஸை மறுத்து விமர்சிப்பது எவ்வாறு..............?

உமர் (ரலி) அவர்களுக்கு இதிலே ஏற்பட்டதுபோன்று அபூ மூஸா (ரலி) வர்களின் உள்ளே நுழைவதற்கு அனுமதி கேட்கும் ஹதீஸினை மறுப்பதிலும் ஏற்பட்டது. அதிலே அவர்களுக்கு அபூ ஸஈத் (ரலி) சாட்சியம் சொன்னார்கள். பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்து ஏற்படுத்துவது சம்பந்மான முகீரா பின் ஷூஃபா  (ரலி) வின் ஹதீஸை மறுத்தார்கள். அவருக்காக முஹம்மத் பின் மஸ்லமா  (ரலி) சாட்சியம் கூறினார்கள். இது (அத்தனையும்) ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களைத்தொட்டும் அறிவிப்பதில் மக்கள் நினைத்தவாறு நடந்துகொள்ளாமல் இருப்பதனை உறுதிப்படுத்துவதற்காக செய்யப்பட்டவையாகும். எனவே தான் நாட்டுப்புறத்தவரான ழஹ்ஹாக் பின் ஸுப்யான்  அவர்கள் தனித்து அறிவிப்பதை ஏற்றுக்கொண்டார்கள். ஆயிஷா (ரலி)தனித்து அறிவிக்கும் பல ஹதீஸ்களை ஏற்றுக்கொண்டார்கள். ஒட்டுமொத்தத்தில் நம்பகமான, நீதமான அறிவிப்பாளரின் கூற்று விஷேடமாக அவர் நபித்தோழராக இருந்தால் அதற்காக இரண்டு சாட்சிகள் சாட்சியம் கூறாதவரையில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என எவரும் கூறுவதில்லை. 
(ஸாதுல் மஆத் - பில் அக்ழியஃ வல் அன்கிஹஃ)

எமது கேள்வி?


குர்ஆனுக்கு மாற்றமாக நபி (ஸல்) கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் ஃபாதிமா (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸை உமர் (ரலி)  மறுக்கிறார்கள்.  

என்பது நூலாசிரியரின் கூற்று!

மூன்றாவது தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு செலவுத் தொகையும், இருப் பிடமும் உள்ளது என குர்ஆனின் எந்த வசனம் கூறுகின்றது........? அப்படி ஒரு வசனமே கிடையாது.  இந்த நிலையில் மேற்படி   ஹதீஸ் குர்ஆனுக்கு முரணானது என சுய அறிவைக் கொண்டு முடிவு செய்வது எந்த வகையில் சரியாகும் ........? 

ஸஹீஹான ஹதீஸ்கள் அல்குர்ஆனுக்கு முரண்படுமா? எனும் சர்ச்சையில் “ஒருபோதும் ஸஹீஹான ஹதீஸ்கள் அல்குர்ஆனுக்கு முரண்பட மாட்டாது.” என்பதே இஸ்லாத்தின் தீர்ப்பாகும். இதனை ஏற்றுக் கொள்வதாக நூலாசிரியர் கூறுகின்றார். ஆனால் ஹதீஸ் கலை விதிகளின்படி ஸஹீஹானது என ஹதீஸ் கலை வல்லுநர்களின் தலைவர் தொகுத்து, ஆயிரம் வருடங்களுக்கு மேலாக ஏனைய ஹதீஸ் கலை வல்லுநர்கள் சரிகண்ட ஸஹீஹுல் புஹாரி போன்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஸஹீஹான ஹதீஸ்களை அவர் மறுக்கின்றார். அதற்கு அவர் கூறும் நியாயம் “அவை அறிவுக்கும் அல்குர்ஆனுக்கும் முரண்படுகின்றது.” என்பதாகும். இவ்வாறு செயல்படுவதற்கு உமர் (ரலி) அவர்களும் ஒரு முன்னோடி எனக் கூறி, அதனை உண்மைப்படுத்துவதற்கு நூலாசிரியர் முன்வைத்த சம்பவம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதை இதுவரை நாம் தெளிவாக விளக்கியுள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்!

உமர்  (ரலி) அவர்களின் சம்பவத்தை எழுதிவிட்டு “இந்த சம்பவத்தில் உமர் (ரலி) அவர்கள் என்ன வாதத்தை முன்வைத்தாரோ அதைத்தான் நாமும் முன்வைக்கிறோம். இப்போது ஹதீஸின் போலிப்பாதுகாவலர்கள் நம்மை விமர்சனம் செய்ததைப் போல் “உமர் ஹதீஸை மறுத்துவிட்டார்” அவர் குர்ஆன் மட்டும் போதும் என்று சொல்பவர்களுக்கு குறிப்பெடுத்துக் கொடுத்து விட்டார்: இவர் வழிகெட்ட கூட்டத்தைச் சார்ந்தவர் என்றெல்லாம் விமர்சனம் செய்வார்களா? ” எனக் கேட்டுள்ளார்.   



மறதி காரணமாகவேனும் ஹதீஸ்களில் போலியானவை நுழைந்துவிடக்கூடாது என முழுக்கவனம் செலுத்திய உமர் (ரலி) போன்றவர்களை விமர்சிக்க வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு ஒருபோதும் கிடையாது. அந்த உத்தமர்களைக் கேடயமாகப் பயன்படுத்தி முஸ்லிம்களாக நடித்துக்கொண்டு, இஸ்லாத்தின் அத்திவாரங்களை ஆட்டம்காண வைக்கும் சதிகாரர்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவதில் உயிருள்ளவரை சளைக்காது போராடுவோம். இன்ஷா அல்லாஹ்!



(இன்ஷா அல்லாஹ் தொடரும்...) 

No comments:

Post a Comment