- அபூ முஹம்மத் அல் முஹம்மதீ -
இஸ்லாம் தலைமைத்துவத்தை அடிப்டையாகக் கொண்ட கொள்கையாகும். முஸ்லிம்களுக்கு என ஒரு தலைமைத்துவம் இருக்கும்போது அதற்கு வெளியே இருக்கும் ஒருவன் இஸ்லாத்தின் ஏனைய கடமைகளில் அத்தனையையும் நிறைவேற்றினால்கூட அவன் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் முஸ்லிமாக அங்கீகரிக்கப்பட மாட்டான். அந்தத் தலைமைத்துவத்தில் இணைந்த ஒருவன் அதில் காணும் சிறுசிறு தவறுகளுக்கெல்லாம் அதனை விட்டும் வெளியேறிச் செல்வதை: இஸ்லாத்தை விட்டும் வெளியேறுவதாக ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் அவர்கள் அறிவித்துள்ளார்கள். அழ்ழாஹ் இறக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவான குப்ரைச் செய்யாத வரையில் அமீரின் கட்டுப்பாட்டை விட்டும் ஒரு சாண் அளவுகூட வெளியேற வேண்டாம் என அவர்கள் எங்களுக்குப் போதித்துள்ளார்கள். அந்த அளவிற்கு இஸ்லாம் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தலைமைத்துவத்தைப் பாதுகாத்து நடக்கும்படி வழிகாட்டியுள்ளது.
தலைமைத்துவத்தின் கட்டுப்பாட்டில் ஒரு முஸ்லிம் வளர்க்கப்படுவதற்கான அன்றாடப் பயிற்சியாக கண்ணியமிக்க அழ்ழாஹ் கூட்டுத் தொழுகையை அமைத்துள்ளான். கூட்டுத் தொழு கையை இஸ்லாம் மிகமிக வலியுறுத்துகின்றது. கூட்டுத் தொழு கையைத் தக்க காரணம் இன்றி விடுவதனை: வீட்டுடன் சேர்த்து அவர்களை எரித்து விடத் தூண்டும் அளவிற்கு மோசமான செயலாக இஸ்லாம் நோக்குகின்றது.
0 1 - ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் கூறுகின்றார்கள்:-
எவன் கையில் எனது உயிர் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! சில விறகுகளைக் கொண்டுவரும்படி ஏவி, அவை கொண்டுவரப் பட்டதன் பின்னர் தொழுகைக்காக ஏவ வேண்டும். அதற்கான அதான் சொல்லப்பட்டதன் பின்னர் மனிதர்களுக்கு தொழுகை நடாத்தும்படி எவரேனும் ஒருவரை ஏவிவிட்டுப் பின்னர் (தொழுகைக்கு வராத) மனிதர்களிடம் சென்று அவர்களது வீட்டை எரித்துவிட வேண்டும் என(க்கூட) நிச்சயமாக நான் நினைத்தேன். எவன் கையில் எனது உயிர் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! (மஸ்ஜிதில்) கொழுத்த இறைச்சிச் துண்டு அல்லது மிருகங்களின் சிறந்த கால் பகுதிகள் கிடைக்கின்றது என (ஜமாஅத்துடன் தொழவராத) அவர்களில் எவரும் அறிவாரேயானால் இஷhத் தொழுகைக்கு (அவர்கள் விரைந்து) வருவார்கள்.
(ஸஹீஹுல் புஹாரி கி. ஜமாஅஃ 01)
0 2 - ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் கூறுகின்றார்கள்:-
(முஸ்லிம்கள்) மூன்றுபேர்களாக ஆகிவிட்டால் அவர்களில் ஒருவர் அவர்களுக்கு முன்னின்று தொழுகை நடாத்தட்டும். அவர்களில் முன்னின்று தொழுகை நடாத்துவதற்கு மிகவும் தகுதியானவர் அவர்களில் (அல்குர்ஆனை) மிகச்சிறப்பாக ஓதக்கூடியவர் ஆவார்.
(ஸஹீஹ் முஸ்லிம் கி. மஸாஜித் 53)
0 3 - மாலிக் பின் ஹுவைரிஸ் ரழியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-
நானும் எனது நண்பர் ஒருவரும் நபி அவர்களிடம் (இஸ்லாத்தைக் கற்பதற்காக) வந்தோம். (இருபது நாட்கள் படித்து விட்டு) அவர்களிடமிருந்து திரும்பிச்செல்ல முடிவு செய்தபோது 'தொழுகை (நேரம்) வந்துவிட்டால் அதான் சொல்லுங்கள், பின்னர் இகாமத் சொல்லுங்கள், உங்கள் இருவரிலும் பெரியவர் உங்களுக்கு முன்னின்று தொழுகை நடாத்தட்டும்.
(ஸஹீஹ் முஸ்லிம் கி. மஸாஜித் 53)
0 4 - ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் கூறுகின்றார்கள்:-
கூட்டுத் தொழுகையானது தணித்துத் தொழுபவரது தொழுகையைவிட அந்தஸ்த்தால் இருபத்தியேழு (மடங்கு) சிறந்ததாகும்.
(ஸஹீஹ் முஸ்லிம் கி. மஸாஜித் 42)
கூட்டுத்தொழுகையை அழ்ழாஹ் ஆண்கள் மீது எந்த அளவு முக்கியத்துவத்துடன் விதியாக்கியிருக்கின்றான் என்பதை அது சம்பந்தமாக இங்கு எழுதப்பட்டிருக்கும் சில ஹதீஸ்களைக் கொண்டு உங்களால் உணரக் கூடியதாக இருக்கும். முஸ்லிமான ஆண்கள் அனைவரும் தொழுகையை நபியவர்களைப் பின்பற்றித் தொழக்கூடிய மஸ்ஜிதிற்கு சென்று கூட்டாக நிறைவேற்றுவதற்குப் பழகிக்கொள்ள வேண்டும். இருந்தும் இத்தகைய பழக்கம் கொண்ட முஸ்லிம்கள்கூட சில வேளைகளில் கூட்டாகத் தொழுவதற்காக மஸ்ஜிதுக்கு வரும்போது கூட்டுத் தொழுகை முடிவடைந்துவிடலாம். தேவைகள் காரணமாகச் சென்றவர்கள் திரும்பி வரும்போது தாமதமாகிவிடலாம், தூக்கம் மிகைத்துவிட்ட ஒருவர் தாமதமாக வர நேரிடலாம். அதான் ஓசை கேட்காத தூரத்திலிருக்கக்கூடியவர் தாமதமாக மஸ்ஜிதை வந்தடையலாம். இவ்வாறு பல காரணங்களினால் ஒருசில முஸ்லிம்கள் கூட்டுத்தொழுகை முடிந்ததன் பின்னர் மஸ்ஜிதை வந்தடைவது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். இந்த உண்மையை உணர்த்தக்கூடியதாகப் பின்வரும் ஹதீஸ் காணப்படுகின்றது:-
0 5 - ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் கூறுகின்றார்கள்:-
யார் வுழூச் செய்து, தனது வுழூவை சிறப்புறச் செய்து, பின்னர் புறப்பட்டுச் சென்று (பார்க்கும்போது) மக்கள் தொழுது முடித்திருக்கக் கண்டால் கண்ணியமும் மகத்துவமும் உடைய அழ்ழாஹ் அவருக்கு: அதற்காக வந்து அதனைத்; தொழுதவரினதும், அதற்கு சமூகமளித்தவரினதும் கூலியையைப் போன்று கொடுப்பான். அது அவர்களது கூலியிலிருந்து எதனையும் குறைத்துவிடாது.
(நஸாஈ, அஹ்மத், அபூதாவூத் - ஸஹீஹ் கி. ஸலாத் 51)
எனவே சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கூட்டுத்தொழுகையை அடைந்துகொள்ளத் தவறுகின்றவர்கள் அவர்களுக்கு மத்தியில் கூட்டாகத் தொழுவது வெறுக்கத்தக்கது என ஷhபி மத்ஹபின் சட்டம் இருந்தாலும் இலங்கையில் நடைமுறையில் அந்த முடிவு ஏற்கப்பட்டதாக இல்லை. ஷhபிஈ மஸ்ஜிதுகளில் தாமதமாக வருபவர்கள் கூட்டாகவே தொழுவார்கள். இஸ்லாத்தின் மூலாதாரம் எது என்பதில் மக்கள் தெளிவு பெற்று சிறிதுசிறிதாக நேர்வழியை நோக்கி வரும் இந்தக்கால கட்டத்தில் வித்தியாசமான தமது சொந்தக் கருத்துக்களை குர்ஆனும் ஹதீஸும் கூறக்கூடிய சட்டங்கள் என்பதாக ஒரு சிலர் போதிய அறிவின்றிக் கூறிவிடுகின்றனர். அத்தகைய சட்டங்களில் ஒன்றுதான் ஒரு மஸ்ஜிதிலே ஒருமுறை கூட்டாகத் தொழுது விட்டால் அத் தொழுகைக்காக வந்தவர்களில் தாமதமாகிவிட்டவர்கள் இரண்டாவது ஜமாஅத் நடாத்தக் கூடாது என்பதாகும். முழுக்க முழுக்க ஸஹீஹான ஹதீஸ்களுக்கு மாற்றமாக அமைக்கப்பட்டுள்ள ஹனபி மத்ஹபைப் பின்பற்றுவோர் இந்த சட்டத்தை உறுதியாக நடைமுறைப்படுத்து கின்றனர். அவர்களது மஸ்ஜிதுகளில் பிறர் இரண்டாவது ஜமாஅத் நடாத்துவதை அவர்கள் பாரிய குற்றமாகக் கருதுகின்றனர்.
இத்தனைக்கும் அவர்களிடமோ அல்லது அந்தக்கருத்தை முன்வைக்கக் கூடியவர்களிடமோ அதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை. அப்படியானால் அவர்கள் இந்த முடிவிற்கு வருவதற்கான காரணம் என்ன? என்றொரு கேள்வி உங்களுக்கு எழலாம். ஒரு ஹதீஸைத் தவறாகப் புரிந்துகொண்டதே அவர்களது இந்த முடிவிற்குக் காரணமாகும். அதுபற்றி திர்மிதி எனும் ஹதீஸ் நூலின் விளக்கவுரையாகிய 'துஹ்பதுல் அஹ்வதி'| எனும் நூலில் அதன் ஆசிரியர் பின்வருமாறு விபரிக்கின்றார்:-
அறிவாளிகளில் ஏனையோர் (தாமதமாக வருபவர்கள்) தனித்தனியே தொழவேண்டும் எனக் கூறுகிறார்கள். ஸுப்யான், இப்னுல் முபாரக், இமாம் மாலிக், இமாம் ஷhபிஈ போன்றோர் தனித்தனியே தொழுவதைத் தேர்வுசெய்கின்றனர். அபூபக்ரஹ் வினுடைய ஹதீஸைக்கொண்டு அதற்கு ஆதாரம் கூறப்படுகிறது.
அபூ பக்ரஹ் ரழியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-
தொழுகையை நாடி ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் மதீனாவின் எல்லைகளிலிருந்து புறப்பட்டு வந்தார்கள். அப்போது மனிதர்கள் தொழுது முடித்திருக்கக் கண்டார்கள். எனவே தங்களது வீட்டிற்குச் சென்று, தங்களது குடும்பத்தினரை ஒன்றுகூட்டி, அவர்களை வைத்துத் தொழுகை நடாத்தினார்கள்.
(தபரானி கபீர், தபரானி அவ்ஸத்)
ஹதீஸ்கலை அறிஞரான இமாம் ஹைஸமி அவர்கள் தமது மஜ்மஉஸ்ஸவாயித் எனும் நூலில் இதன் அறிவிப்பாளர்கள் உறுதியானவர்கள்|| எனக் குறிப்பிட்டுள்ளார்.
இமாம் ஹைஸமி மேற்படி ஹதீஸின் அறிவிப்பாளர்கள் உறுதியானவர்கள் எனக் கூறியுள்ளதால் அந்த ஹதீஸ் ஸஹீஹானது என வாசகர்கள் ஏமாந்துவிடக்கூடாது. ஏனெனில் ஹதீஸ் ஸஹீஹ் என ஏற்கப்படுவதற்கு இன்னும் சில நிபந்தனைகளஉள்ளன.
'ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர்கள் உறுதியானவர்கள் என்பதற்காக (அந்த ஹதீஸ்) ஸஹீஹானதாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல.'||
(ஹதீஸ்கலை அறிஞர்: இப்னு ஹஜர், தல்ஹீஸுல் ஹபீர்)
||அறிவிப்பாளர்கள் உறுதியானவர்கள் என்பதற்காக அது உறுதியானவர்களின் அறிவிப்புக்கு முரணாக இல்லை என்பதும், குறைபாடுகள் அற்றது என்பதும் உறுதிசெய்யப்படாதவரையில் (அந்த) ஹதீஸ் ஸஹீஹானதாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.||
(ஹதீஸ்கலை அறிஞர்: நூல்: நஸ்புர் ராயா)
இந்த ஹதீஸைப்பதிவு செய்த இமாம் தபரானி அவர்களே இந்த ஹதீஸைக் குறை கண்டுள்ளார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசையில் வரக்கூடிய முஆவியா பின் யஹ்யா என்பவர் விமர்சிக்கப் பட்டுள்ளார். இவரது ஹதீஸ்களை மறுக்கப்பட வேண்டிய ஹதீஸ்களில் ஒருவகையான முன்கர்|| என ஹதீஸ்கலை அறிஞர் இமாம் தஹபி குறிப்பிடுகின்றார்கள்.
ஒரு ஆய்வுக்காக இந்த ஹதீஸை நம்பகமானது என ஏற்றுக்கொண்டால்கூட இதிலே இரண்டாவது ஜமாஅத் நடாத்தக்கூடாது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. மாறாக இரண்டாவது ஜமாஅத் நடாத்துவது ஸுன்னா என்றாகிவிடும். ஏனெனில் ஜமாஅத் முடிந்துவிட்டதைக் கண்ட ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் தங்களது வீட்டிற்குச்சென்று அங்கிருந்தவர்களை ஒன்று சேர்த்து ஜமாஅத்தாகத்தான் தொழுதுள்ளார்கள். இந்த ஹதீஸை இரண்டாவது ஜமாஅத் நடாத்துவது வெறுக்கத்தக்கது என்பதற்கு அல்லது கூடாது எனக்கூறுவதற்கு ஆதாரமாகக் காட்டுவது எப்படி சரியாகும்?
இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொள்பவர்கள் 'ஜமாஅத்துத் தொழுகை முடிந்த பின்னர் வரக்கூடிய தனியொருவர் விரும்பினால் வீட்டுக்குச் சென்று குடும்பத்தாருடன் கூட்டாகத் தொழலாம்.|| என்று தான் கூறமுடியுமே தவிர இரண்டாவது ஜமாஅத் நடாத்தக்கூடாது என்பதற்கு இந்த ஹதீஸ் ஒருபோதும் ஆதாரமாக மாட்டாது. தாமத மாக வருபவர்கள் தனித்தனியே தொழுவதைத் தேர்வு செய்தவர்கள் தங்களது கருத்துக்கு முன்வைத்த ஆதாரம் பலவீனமானது என்பதாலும், அந்த ஹதீஸிலே அவர்களது கூற்றிற்கு அதாரம் இல்லை என்பதாலும் அவர்களது முடிவை முஸ்லிம்கள் ஏற்க முடியாது என்பது உறுதியாகின்றது.
இன்றைய காலத்தில் மேற்படி தவறான கருத்தை முன் வைக்கும் ஒரு சிலர் அவர்களது தவறான கருத்திற்கு ஆதாரம் இல்லாததால் 'இரண்டாவது ஜமாஅத் நடாத்துவது கூடும் என்பதற்கு ஆதாரத்தைக் காட்டுங்கள்.|| எனக் கேட்கின்றனர்.
கட்டுரையின் ஆரம்பத்திலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டாவதும் மூன்றாவதும் ஹதீஸ்கள்: இரண்டு முஸ்லிம்கள் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இருக்கும்போது கட்டாயம் கூட்டாகத் தொழ வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. நான்காவது ஹதீஸ் கூட்டாகத் தொழுவதன் பெறுமதியை நேரடியாகக் கூறுகின்றது. நான்காவது ஹதீஸை மட்டும் வைத்துப்பார்த்தால் பல முஸ்லிம்கள் இருக்கின்றபோது கூட்டாகத் தொழுவது மிகச்சிறந்தது என்றாலும், தனித்துத் தொழுவதற்கும் இஸ்லாத்தில் அனுமதி உள்ளது என ஏற்க வேண்டும். இந்த ஹதீஸில் பல முஸ்லிம்கள் இருந்தாலும் தனித்துத் தொழுவதற்கும் அனுமதி இருப்பதாக நாம் நினைப்பது தவறானது என்பது இரண்டாவதும் மூன்றாவதும் எழுதப்பட்டுள்ள ஹதீஸ்களின் மூலம் நிரூபணமாகின்றது. எனவே இந்த ஹதீஸ்கள் அனைத்திலிருந்தும் எங்களுக்குக் கிடைக்கும் சரியான முடிவு என்னவெனில் 'எந்தவொரு சந்தர்ப்பமாக இருந்தாலும் பல முஸ்லிம்கள் இருக்கும்போது தங்கள்மீது கடமையான தொழுகைகளை அவர்கள் தனித்தனியே தொழுவது ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் அவர்களின் கட்டளைக்கு நேர்முரணானது' என்பதாகும்.
கடமையான தொழுகையை கூட்டாகத் தொழுவதன் சிறப்புப் பற்றி பொதுவாகக் கூறப்பட்டிக்கும்போது, இரண்டு முஸ்லிம்களுக்கும் கூட்டாகத் தொழும்படி ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் கட்டளையிட்டிருக்கும்போது, ஏற்கெனவே தொழப்பட்ட இடத்தில் இரண்டாவது முறையாக கூட்டாகத் தொழக்கூடாது என அதற்கான ஆதாரங்கள் இன்றிக் கூறுவது இஸ்லாத்தில் எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. பொதுவான சட்டத்திலிருந்து ஏதேனும் ஒன்றை நீக்குவது என்றால் அதற்கான ஆதாரம் முன்வைக்கப்பட வேண்டும் என்பது சட்டக்கலை விதியாகும். எனவே கூட்டாகத் தொழுவதன் மூலம் அத்தொழுகைக்கு கிடைக்கக்கூடிய சாதாரன கூலி இருபத்தியேழு மடங்கு அதிகரிக்கப் படுகின்றது எனக் கூறப்பட்டிருப்தே நன்மையை நாடும் முஸ்லிம் களுக்கு போதுமான ஆதாரமாகும். அதற்கும் மேலாக இருவர் உள்ள சந்தர்ப்பத்திலும் கூட்டாகத் தொழும்படி ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் முஸ்லிம்களுக்கு ஏவியிருப்பது மேலதிக ஆதாரமாகும்.
இவ்வளவு தெளிவான ஆதாரங்களும் அடிப்படையும் இருக்கத்தக்க, ஆதாரம் காட்டுங்கள் எனக்கேட்டுவிட்டு எவ்வித ஆதாரங்களையும் முன்வைக்காது 'இரண்டாம் ஜமாஅத் நடாத்தக் கூடாது|| எனவும், இரண்டாம் ஜமாஅத் நடாத்தக் கூடியவர்கள் தவறு செய்கிறார்கள் எனவும் கூறுவது எவ்வளவு பெரிய அறிவீனமான, அவசரமான முடிவு என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும்.
தவிர்க்க முடியாத காரணங்களினால் தாமதமாக மஸ்ஜிதுக்கு வரக்கூடியவர்கள் இரண்டாவது ஜமாஅத் கட்டாயம் நடாத்த வேண்டும் என்பதை ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தியுள்ளோம். அந்த உண்மையை வலியுறுத்தக்கூடியதாக வரக்கூடிய மற்றொரு ஹதீஸையும் மேலதிக ஆதாரமாக இங்கு குறிப்பிடுகின்றோம்.
0 6 - அபூ ஸஈத் ரழியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-
(தாமதமாக வந்த) ஒரு மனிதர் தனியே தொழுவதனை ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் பார்த்தார்கள். உடனே 'இவருக்கு எவரேனும் ஒருவர் ஸதகாச் செய்யக் கருதி இவருடன் சேர்ந்து தொழமாட்டாரா?|| எனக் கேட்டார்கள். (இமாம் பைஹகியின் அறிவிப்பில் அவருடன் சேர்ந்து அபூபக்கர் தொழுதார்கள் என்பதாகக் காணப்படுகின்றது.)
(அபூ தாவுத் - ஸஹீஹ், கி ஸலாஹ் 56)
தவறான முடிவை அவசரப்பட்டுக் கூறியவர்கள் எவ்வித ஆராய்ச்சியும் இல்லாமல் இந்த ஹதீஸை 'பலவீனமானது' எனக்கூறி தட்டிக் கழிக்கின்றனர். ஒரு ஹதீஸைப் பலவீனமானது எனக் கூறுவதானல் அதற்கான சான்றுகளை அவ்வாறு கூறுவோர் முன்வைக்க வேண்டும். அவர்களது மனோயிச்சைப்படி அவர்கள் கூறியதற்கு மாற்றமாக இந்த ஹதீஸ் ஸஹீஹானது என்பதனைப் பல ஹதீஸ்கலை அறிஞர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர்.
ஹதீஸ்கலையில் மிகப் பிரபல்யமான இமாம் இப்னு ஹஜர் இந்த ஹதீஸை ஸஹீஹ் எனக் கூறியுள்ளார்கள். அண்மையில் மரணித்த ஹதீஸ் கலை அறிஞரான நாஸிருத்தீன் அல்பானியும் இதனை ஸஹீஹ் எனக் கூறியுள்ளார். இமாம் ஹாகிம் இந்த ஹதீஸ் ஸஹீஹானது எனக்கூறியுள்ளார். இமாம் தஹபியும் அதனை ஸஹீஹ் எனக் கூறியுள்ளார். இவ்வாறு பட்டியல் நீளுகின்றது. தாமதமாக தனியொரு முஸ்லிம் வந்தால்கூட ஏற்கெனவே அந்தத் தொழுகையைத் தொழுதவர்களில் ஒருவர் முடியுமானால் வந்தவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம் தாமதமாக வந்த முஸ்லிமுக்கு இருபத்தியேழு மடங்கு நன்மையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதனை அபூதாவூதிலே வரக்கூடிய இந்த ஸஹீஹான ஹதீஸ் எங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றது. இதன்மூலம் நாம் புரிந்துகொள்ளவேண்டியது என்னவெனில் தற்செயலாக தொழுகைக்கு தாமதமாக வரக்கூடியவர்கள் முடிந்தவரையில் கூட்டாகத் தொழுவதற்கே முயற்ச்சி செய்ய வேண்டும் என்பதாகும்.
உண்மை இப்படியிருக்க தம்மையும் அறிவாளிகளாக நிரூபிக்க முயற்சிக்கும் ஒருசிலர் தங்களிடம் எவ்வித ஆதாரமும் இல்லாமல் 'இரண்டாம் ஜமாஅத் நடாத்தக்கூடாது|| என்ற சுயகருத்தை மக்களுக்குத் திணிக்க முயற்சிக்கின்றனர். தங்களது சுயகருத்தை நிலைநாட்டுவதற்கு அவர்கள் தமது அறிவைக்கொண்டு சில ஆதாரங்களை முன்வைக்கின்றனர்.
'ஜமாஅத்துடன் தொழ வருபவர் மஸ்ஜிதை வந்தடையும் போது ஜமாஅத்துத் தொழுகை முடிந்துவிட்டால் தாமதமாக வரும் நபருக்கு ஜமாஅத்துடன் தொழுத நன்மை கிடைப்பதாக ஹதீஸிலே கூறப்பட்டிருக்கின்றது. எனவே தாமதமாக வரக்கூடியோர் தங்களுக்கு மத்தியில் கூட்டாகத் தொழவேண்டிய அவசியம் இல்லை.|| என்பதும் புத்தியைக்கொண்டு மார்க்க சட்டங்களை உருவாக்க முயற்சிக்கும் அவர்களது நியாயங்களில் ஒன்றாகும்.
இவர்களது விபரீதமான முடிவின்படி கடமையான கூட்டுத் தொழுகை: அதற்கான கூலி கிடைப்பதனால் அதனைக் கூட்டாகத்தொழுவது ஹராமாகிவிடுமானால், அந்தத் தொழுகையைத் தொழுவதே ஹராம் அல்லவா............? தொழுகையை ஜமாஅத்துடன் சேர்ந்து நிறைவேற்றும் எண்ணத்துடன் வந்தும் அது தவறியவருக்கு எப்படி ஜமாஅத்தாகத் தொழுத நன்மை கிடைக்கின்றதோ அதே போன்று அந்நத் தொழுகையைத் தொழுத நன்மையும் கிடைப்பதாகவே அந்த ஹதீஸ் கூறுகின்றது. ஐவேளைத் தொழுகையைத் தொழுவதும் கடமையாகும். அதனைக் கூட்டாகத் தொழுவதும் கடமையாகும். கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ள முடியும் எனும் நம்பிக்கையில் வருபவர் அதனை அடைய முடியாது போகும் சந்தர்ப்பத்தில் அவருக்கு அந்த இரண்டு கடமைகளினதும் கூலி கிடைக்கின்றது என்பதனைத்தான் அது சம்பந்தமாகக் கூறப்பட்டுள்ள ஹதீஸ் எமக்கு உணர்த்துகின்றது.
அந்த ஹதீஸிலே 'அதற்காக வந்து அதனைத்; தொழுத வரினதும், அதற்கு சமூகமளித்தவரினதும் கூலியையைப் போன்று கொடுப்பான்.|| என ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் கூறியுள்ளார்கள். இந்த ஹதீஸில் அவ்வாறு வரக்கூடியவருக்கு இரண்டு கடமைகளுக்கான கூலி கிடைப்பதாக மிகத்தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஒன்று அந்தத் தொழுகையைத் தொழுதவருக்கான கூலி. இரண்டாவது கூட்டுத்தொழுகைக்கு சமூகமளித்ததற்கான கூலி.
அவர்களது வாதப்படி கூலி கிடைத்துவிடுவதன் மூலம் கடமையான ஒன்று ஹராமாகி விடுகின்றது. அதாவது கூட்டுத்தொழுகை கடமையான ஒருவர் அதனை நிறைவேற்றும் எண்ணத்தில் வந்து, அது தவறிவிட்டால் அதற்கான கூலி கிடைத்து விடுவதால் அத்தொழுகையைக் கூட்டாகத் தொழக்கூடாது (ஹராம்) என்பதே அவர்களது வாதமாகும். இவ்வாறு வாதிக்கக்கூடிய அவர்கள் தங்களது வாதம் சரியென உறுதியாக நம்புவதானால் அவ்வாறு தாமதமாக வரக்கூடியவர்கள் மீண்டும் ஜமாஅத் நடாத் துவது கூடாது எனக் கூறுவதற்குப் பதிலாக அவர்கள் அந்தத் தொழுகையைத் தொழுவதே கூடாது (ஹராம்) என்றுதான் கூற வேண்டும். கடமைiயான அந்தத் தொழுகையைத் தொழுத கூலிதான் கிடைத்துவிட்டதே...........? கடமையான கூட்டுத் தொழுகைக் கான கூலி கிடைத்துவிடுவதால் கூட்டுத் தொழுகை ஹராம் எனக் கூறும் இவர்கள், கடமையான தொழுகையைத் தொழுத நன்மை கிடைத்துவிட்டதால் அந்தத் தொழுகையைத் தொழுவதே ஹராம் என ஏன் அவர்கள் கூறுவதில்லை.................? ஏதாவதொரு நன்மையைச் செய்யவேண்டும் என எவராவது ஒரு முஸ்லிம் முடிவுசெய்துவிட்டால் உடனே ஒரு நன்மை அவருக்குக் கிடைத்துவிடுகின்றது என்பதற்காக நன்மைகள் செய்வது (கூடாது) ஹராம் என எவராவது அறிவீனம் காரணமாகத் தப்பர்த்தம் கற்பித்தால் அது ஆதாரங்களின் அடிப்படையில் ஏற்கத்தக்கதுமல்ல, அறிவுரீதியாக நிரூபிக்கத்தக்கதுமல்ல. 'இரண்டாவது ஜமாஅத் நடாத்தக் கூடாது'| என்கின்ற வாதமும் இதனைவிட எந்தவிதத்திலும் உயர்வானதல்ல. எனவே நேர்வழியைப் பின்பற்றும் ஆர்வமுள்ள எவரும் பொதுவாக முஸ்லிம்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ள கூட்டுத் தொழுகையை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கைவிடலாகாது. சேர்ந்து தொழுவதற்கு எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில் ஏற்கெனவே தொழுதுவிட்ட ஒருவரை சேர்த்துக்கொண்டேனும் கூட்டாகத் தொழுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
இரண்டாம் ஜமாஅத் நடாத்துவது கூடும் எனக் கூறுவதனால் முதல் ஜமாஅத்தின் முக்கியத்துவம் குறைந்து விடுகின்றது என ஒரு கருத்தை முன்வைத்து இரண்டாம் ஜமாஅத் நடாத்தக்கூடாது எனக்கூறுவோர் தங்களது கருத்தை சரிகாண முயற்சிக்கின்றனர்.
அதான் ஓசை கேட்டதும் மஸ்ஜிதுக்குச் சென்று தொழுகை யைக் கூட்டாகத்தொழுவது முஸ்லிமான ஆண்கள்மீது கடமையாகும். தக்க காரணம் இன்றி அவ்வாறு செல்லாமல் இருப்பது இஸ்லாமியக் கண்னோட்டத்தில் தண்டிக்கப்படவேண்டிய குற்றம் என்பதை இக்கட்டுரையில் நாம் குறிப்பிட்டுள்ள முதலாவது ஹதீஸ் தெளிவாகக் கூறுகின்றது. முயற்சி செய்தும் முதல் ஜமாஅத்துடன் கலந்து கொள்ளக் கிடைக்காத முஸ்லிம்கள் இருபத்தியேழு மடங்கு நன்மையை பெற்றுக்கொள்வதற்கான ஒரு வழியாகத்தான் இஸ்லாம் இரண்டாவது ஜமாஅத்தை அங்கீகரிக்கின்றது. கரிசனையுடன் சிறந்த நேரத்தில் நடாத்தப்படும் முதல் ஜமாஅத்தும், தாமதமாக வந்தவர்கள் நடாத்தும் இரண்டாவது ஜமாஅத்தும் அந்தஸ்த்தால் சமமானது என இஸ்லாம் ஒருபோதும் கூறுவதில்லை. எனவே இந்தக் கூற்றும் அவர்களது வாதத்தை சரிகாண்பதற்கான ஆதாரமாக இல்லை. கூட்டுத் தொழுகை முடிவடைந்த பின்னர் மஸ்ஜிதை வந்தடைபவர்கள் மற்றொரு கூட்டுத் தொழுகை நடாத்துவது கூடாது என எந்தவித ஆதாரமும் இல்லாமல் கூறுவோர் அப்படி வருபவர்கள் தனித்தனியே தொழவேண்டும் எனக் கூறுகின்றனர். இவ்வாறு தனித்தனியே தொழ வேண்டும் எனக் கூறுவதற்கு அவர்களிடம் ஏதாவது ஆதாரம் இருக்கின்றதா? எனப் பார்த்தால் அப்படி ஒரு ஆதாரம் அவர்களிடம் கிடையாது. இரண்டாவது ஜமாஅத் நடாத்துவதற்கு ஆதாரம் இல்லை என்பதால் தனித்தனியேதான் தொழ வேண்டும் என்பதுதான் அவர்களது கருத்துக்கு அவர்கள் முன்வைக்கக்கூடிய ஆதாரமாகும்.
இரண்டாவது ஜமாஅத் நடாத்துவதற்கான தெளிவான ஆதாரங்களை நாம் முன்வைத்துவிட்டோம். இத்தனை ஆதாரங்களும் அவர்களுக்குப் போதாது எனக்கூறி அவர்களில் எவரும் தங்களது தவறை ஏற்றுக்கொள்ள மறுத்தால் அவர்களிடம் நாம் முன்வைக்கக் கூடிய கேள்வி என்னவெனில்: உங்களது பார்வையில் ஆதாரம் இல்லாததால் 'இரண்டாவது ஜமாஅத் நடாத்தக்கூடாது' எனக் கூறும் நீங்கள் எந்த ஆதாரத்தைக்கொண்டு 'தாமதமாக வருபவர்கள் தனித்தனியே தொழ வேண்டும்' எனக் கூறுகின்றீர்கள்............? ; தன்னித்தனியே தொழ வேண்டும் என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கின்றது..........? கடமையான தொழுகையை ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் அவர்கள் தனித்து மஸ்ஜிதில் தொழுததாகவும் இல்லை, வீட்டில் தொழுததாகவும் இல்லை. ஆதாரம் இல்லை எனக்கூறி கூட்டுத் தொழுகையை மறுக்கும் நீங்கள் ஆதாரம் இல்லாமல் தனித்தனியே தொழுவதைக் கடமையாக்குவது வேடிக்கையாக இல்லையா....................?
நாம் இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஆறாவது ஹதீஸில் தாமதமாக வந்த ஒரு ஸஹாபி தனியே தொழுதார்கள் என்பது நிரூபணமாகின்றது. இரண்டாவது ஜமாஅத் நடாத்தக்கூடாது எனக்கூறுவோர் அந்த ஹதீஸ் அவர்களது கருத்துக்கு முரணாக இருப்பதனால் அது பலவீனமானது எனக் கூறிவிடுகின்றனர். தனித்துத் தொழும் ஸஹாபியைக் கண்டதும் அவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம் அவருக்கு ஸதகாச் செய்வது யார் என ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் அவர்கள் கேட்டார்கள் என்பதாக வருகின்ற ஹதீஸ் எவ்வித சந்தோகமும் இல்லாமல் நம்பக்கூடியது என்பதை நாம் ஹதீஸ்கலை அறிஞர்களின் கூற்றுக்களைக்கொண்டு ஏற்கெனவே நிரூபித்து விட்டோம். அல்ஹம்து லில்லாஹ்! இரண்டாவது ஜமாஅத் நடாத்துவது கூடாது எனக் கூறுவோர் இந்த ஹதீஸை ஏற்றுக் ;கொண்டால் இரண்டாவது ஜமாஅத் நடாத்துவதற்கு இது நேரடியான ஆதாரம் என்பதால் அவர்களது கூற்று முற்றிலும் தவறு என்பது தெளிவாகிவிடும். ஏற்றுக்கொள்ளாவிட்டால் தனித்துத் தொழுவதற்கு வேறு ஆதாரங்கள் இல்லை என்பதனால் தனித்துத் தொழுவதும் கூடாது என அவர்கள் கூறவேண்டி ஏற்படும். கடமையான தொழுகையை அவர்கள் முதல் ஜமாஅத்துடன் தொழக்கிடைக்காததன் காரணமாக அதனைத்தொழவே கூடாது எனும் முடிவிற்கு வந்தால் அது தெளிவான வழிகேடு என்பதை சாதாரண பாமர மகனும் விளங்கிக்கொள்ள முடியும்.
புனித ரமழான் எம்மை எதிர்கொள்கின்றது. இஸ்லாம் கூறும் நேர்வழியை: குர்ஆனையும் ஹதீஸையும் மாத்திரம் கூறும் நீதமான நல்ல அறிஞர்களின் வழிகாட்டலின் மூலம் ஏற்று நல்லமல்கள் செய்து முன்னேறிச் செல்லுங்கள். முஸ்லிம்களின் அடையாளச் சின்னமான ஐவேளைக் தொழுகைகளை முதல் ஜமாஅத்துடன் நிறைவேற்றுங்கள். தற்செயலாகத் தவறிவிட்டால் இரண்டாம் ஜமாஅத் நடாத்துவதற்கு முழு முயற்சி செய்யுங்கள். எப்போதும் உங்களது தீனைப் பாதுகாத்துக் கொள்வதில் கவனமாக இருங்கள்.
கண்ணியமிக்க அழ்ழாஹ்வின் வாக்குறுதி!
எவர்கள் எங்களி(னது தீனி)லே முயற்சி செய்கின்றனரோ அவர்களை நிச்சயமாக நாம் எங்களது (நேர்வழியினின்றும் உள்ள) வழிகளில் செலுத்துவோம். மேலும் நிச்சயமாக அழ்ழாஹ் நல்லவர் களுடன் இருக்கின்றான்.|| ( 2 9 : 6 9 )
-------------------------
மாறாக சத்தியத்தைக் கொண்டு அசத்தியத்தின்மீது எறிகின்றோம். அது (அசத்தியமாகிய) அதன் தலையைப் பிளந்துவிடுகின்றது. எனவே அது அழிந்தும் விடுகின்றது.........( 21 : 18 )
இன்ஷா
அல்லாஹ் இந்தப்பகுதியில் தூய இஸ்லாத்திற்கு முரணாக முன்வைக்கப்படும்
கருத்துக்கள் ஆதாரங்களுடன் அலசப்பட்டு, வஹியின் ஒளியில் நேர்வழி
தெளிவுபடுத்தப்படும். வாசகர்களும் தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய
இஸ்லாம் பற்றிய ஆக்கங்களை எந்தப் பிரிவினர் வெளியிட்டாலும் அவற்றை எமக்கு
அனுப்பிவைப்பதன் மூலம் அது பற்றிய தெளிவான இஸ்லாமிய கண்னோட்டத்தை
விளங்கிக்கொள்ள முடியும். அதேபோல் ஜமாஅதுல் முஸ்லிமீன் முன்வைக்கக்கூடிய
முடிவுகளைத் தவறாகக் காணக்கூடிய அறிஞர்களும் அதுபற்றிய தங்கள் கருத்துக்களை
ஆதாரங்களுடன் எமக்கு எழுதினால் அவையும் இங்கு அலசப்படும்.
-------------------------
-------------------------
No comments:
Post a Comment